திரும்பிய பக்கமெல்லாம் தெப்பக்குளம் என்று சொல்லலாம் போல போல.. அப்படி ஒரே கண்ணீர்க்குளமாக காட்சி தருகிறது பிக் பாஸ் இல்லம்.
யாரைப் பார்த்தாலும் அழுகிறார்கள்.. எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள். அதிலும் சில போட்டியாளர்கள் அழுவதைப் பார்த்தால் கர்ச்சீப்பை எடுத்து நாமளே எழுந்து போய் டிவி பொட்டியை துடைச்சு விடலாம் போலிருக்கிறது.. அப்படி ஒரு அழுகாச்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
கதை சொல்லும்போதுதான் அழுகிறார்கள் என்று பார்த்தால், சிலர் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போதே கடகடவென்று அழ ஆரம்பித்து விடுகிறார்கள். சில போட்டியாளர்கள்தான் கேஷுவலாக உள்ளனர். ஆனால் பலரும், எப்படா கண் குளத்தை ஓபன் செய்யலாம் என்று காத்திருந்து பிழிந்தெடுக்கிறார்கள்.
இவர்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறதா அல்லது அழுது சிம்பதியை கிரியேட் செய்து அனுதாப வாக்குகளை அள்ளும் திட்டமா என்று தெரியவில்லை. ஆனாலும் அழுகை அவர்களது பலவீனத்தையே காட்டுகிறது. அவர்கள் அழாமல் உருக்கமாக பேசி, மற்றவர்களை அழ வைத்தால் கூட ஒரு வகையில் அதை ஏற்கலாம். ஆனால் இவர்களே ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதால் மற்றவர்களுக்கு ஒரு வகையான எரிச்சல்தான் வந்து சேருகிறது.
தாமரைச்செல்வி, அபிஷேக் ராஜா போன்றோரெல்லாம் அடிக்கடி அழுது கண்களை கழுவிக் கொள்கின்றனர். அக்ஷரா அழுதார்.. நமீதா மாரிமுத்து ரொம்பவே கதறிக் கதறி அழுதார். பாவனி, இசைவாணி என பலரும் அழுதனர். முதலில் ஏன் அழ வேண்டும் என்றே புரியவில்லை. அழாமல் பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே சொல்லக் கூடாதா.. நாம் கஷ்டப்பட்டதை வெளியில் சொல்லி மற்றவர்களை அழ வைக்க வேண்டும், நாமும் சேர்ந்து அழ வேண்டும் என்பதை விட, நாம் எப்படி அதை சமாளித்து வென்றோம் என்று தன்னம்பிக்கையுடன் சொல்லும்போதுதானே அது நாலு பேருக்கு உதவியாக இருக்கும், மோடிவேஷனாக இருக்கும்.. அது ஏன் போட்டியாளர்களுக்குப் புரியவில்லை என்று தெரியவில்லை.
கடந்த நான்கு சீசன்களில் பலரும் அழுதுள்ளனர். ஆனால் எனக்கு என்னமோ இந்த சீசனில்தான் ஓவராக அழுகை இருப்பதாக தெரிகிறது. பல போட்டியாளர்கள் மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவர்கள். இதனால் அவர்களின் அனுதாபத்தையும், அறிமுகத்தையும் பெறும் வகையில் அழுகையை கையில் எடுத்துள்ளார்களா என்று தெரியவில்லை... இது போட்டியில் ஒரு உத்தியாகக் கூட இருக்கலாம்.. ஸ்கிரிப்டட் ஷோதான் என்பதால் அதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளன. இருந்தாலும் கொஞ்சம் அழுகையைக் குறைச்சுக்கலாம்.. தப்பில்லை.
சில சைலன்ட் கில்லர்களும் இருக்கிறார்கள். எந்த அலையையும் பரப்பாமல் ஷிவானி போல சிவனே என்று உட்கார்ந்திருக்கின்றனர்.. அதேசமயம், இந்த அழுகாச்சி குரூப்பிலும் கூட சிலர் நம்பிக்கையூட்டும் வகையில் நடந்து கொள்கிறார்கள். பாவனி, அக்ஷரா என சிலரைக் கை காட்டலாம்.. பாவனிக்கு இப்பவே ஆதரவு கூட ஆரம்பித்து விட்டது. அவரது அப்ரோச்சை பலரும் பாராட்டுகிறார்கள். எல்லோரிடமும் புன்னகையுடன் பேசுகிறார், பழகுகிறார்.. பார்க்கலாம் போகப் போக என்ன செய்யப் போகிறார்கள் என்று.

Comments