Skip to main content

மறக்க முடியாத.. வாத்தியார் மகன்.. நெடுமுடி வேணு!



எனக்கு ரொம்பப் பிடித்த மலையாள நடிகர்களில் "இன்னொசன்ட்" முக்கியமானவர். அவருக்கு அடுத்து நெடுமுடி வேணுவை பிடிக்கும். அவரது இயல்பான நடிப்பு மட்டுமல்லாமல், அவரது வசன உச்சரிப்பு திறனுக்காகவே அவரது படங்களை ரசித்துப் பார்ப்பவன் நான். அழுத்தம் திருத்தமான ஒரு நடிகர்.. இன்று மரணமடைந்துள்ளார் வேணு.
"வாத்தியார் மகன் மக்கு" என்று ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் நெடுமுடி வேணு அப்படி இல்லை.. சின்ன வயதிலேயே மிருதங்கத்தில் பிரித்து மேய்வார். நல்ல கதை சொல்லியும் கூட.. சினிமா மீது தீராத தாகம் அந்த சின்ன வயதிலேயே அவருக்குள் ஊறிக் கொண்டே இருந்தது.. அப்பா வாத்தியார் என்பதால் டிசிப்ளின் நிறைந்த பிள்ளையாக வளர்ந்தவர் வேணு.
சினிமா, கலை மீதான தாகம் ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பிலும் படு கெட்டியாக இருந்தார். அப்பாவுக்குத் திருப்தி தரும் வகையில் சூப்பராகவே படித்தார். பட்டப்படிப்பை முடித்த கையோடு பத்திரிகையாளராக மாறினார். அதன் பிறகு சினிமா பக்கம் திரும்பினார். அவருக்குள் இருந்த சினிமா தாகத்தை தீர்க்க வடிகாலாக அமைந்தவர் இயக்குநர் அரவிந்தன்தான். இருவருக்கும் இடையே நல்ல நட்பு. இந்த நண்பர்கள் வட்டாரத்தில் மலையாளத் திரையுலகின் பீஷ்மர்களில் ஒருவரான கோபியும் அடக்கம்.. இந்த நட்பு வட்டாரம் திரையுலகில் பல மகத்தான படைப்புகளை படைத்து மலையாளிகளுக்கு விருந்து சமைத்தது.
அடிப்படையில் நெடுமுடி வேணு ஒரு நாடகக் கலைஞர். நாடகங்கள் அவரது நடிப்புக்கு நல்ல அடித்தளம் அமைத்தது. இதனால்தான் சினிமாவில் அறிமுகமான முதல் படமான தம்புவிலேயே அவர் சபாஷ் வாங்கினார். நண்பரான அரவிந்தன்தான் தம்பு மூலம் நெடுமுடி வேணு என்ற ஒரு அருமையான கலைஞரை வெளியுலகுக்குக் காட்டினார். தொடர்ந்து வந்த படங்கள் மூலம் தனது அருமையான கேரக்டர் நடிப்பை வெளிப்படுத்தி தனது பிரவேசத்தை இன்னும் வலுவாக்கிக் கொண்டார் நெடுமுடி வேணு.
அந்தக் காலத்தில் நெடுமுடி வேணுவின் குடும்பத் தலைவர் கதாபாத்திரங்கள் ஒரு டிரெண்ட் செட்டாக அமைந்தது என்பதையும் இங்கு சொல்ல வேண்டும். இதே பாணியில் பல கலைஞர்கள் உருவெடுக்க நெடுமுடி வேணுதான் விதையாக அமைந்தார்.
ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் ஸ்கிரிப்ட் ரைட்டர், இன்னொரு முகமாக இயக்கம் (ஒரே ஒரு படம் - பூரம்) என சகலகலா வல்லவனாக மிளிர்ந்து வந்தார் வேணு. இவரது படங்களில் மலையாளிகளால் மறக்க முடியாத படம் என்றால் அது ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா மற்றும் மார்க்கம். இரண்டுமே அவருக்கு தேசிய விருதுகளை வாங்கிக் கொடுத்தது. அதேபோல சமரம். இன்னொரு அற்புதமான படம். பரதம் படத்தில் இவரது நடிப்பு வேறு லெவலில் இருக்கும். மலையாளப் படங்கள் மற்ற இந்திய மொழிப் படங்களை விட வேறு பரிமாணத்தில் அமைய வேணு போன்ற ஒப்பற்ற கலைஞர்கள் அங்கு இருந்ததே காரணம்.
தேன்மாவின் கொம்பத்து மறக்க முடியாத வேணுவின் படங்களில் ஒன்று. இந்தப் படத்தைத்தான் முத்து என்ற பெயரில் தமிழில் எடுத்தார்கள். மலையாள சினிமாவின் முக்கியமான படங்களில் இந்தப் படத்துக்கும் முக்கிய இடம் உண்டு. வேணுவின் நடிப்பு இதில் பிரமாதமாக இருக்கும். சித்ரம் படம் வேணுவுக்கு மட்டுமல்லாமல் மோகன்லாலுக்கும் மிகப் பெரிய ஹிட் கொடுத்த படம்.
ஒரு விசேஷப்பட்ட பிரியாணி கிஸ்ஸா என்ற படத்தில் நெடுமுடி வேணுவின் ரோல் அருமையாக இருக்கும். போக்கிரி சைமன் என்றொரு குப்பைப் படம். ஆனாலும் அதிலும் கூட அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் வேணு. ஆகாசத்திண்டே நிறம் என்று ஒரு படம். அதிகம் வசனம் இருக்காது. வருவார் போவார்.. அவ்வப்போது கண்ணை சிமிட்டுவார்.. சின்னச் சின்ன வசனங்கள்.. அழகான கேரக்டர் அந்தப் படத்தில் வேணுவுக்கு. ஒரு ஆர்ட் படம்தான்.. ஆனாலும் அந்தப் படம் முழுக்க வேணுவின் நடிப்பு அத்தனை தெளிவாக, இயல்பாக, அற்புதமாக இருக்கும். நிறையப் படங்கள்.. சொல்லிக் கொண்டே போகலாம்.
எத்தனையோ நல்ல படங்களுக்கு வேணு பெயர் போனவர்.. அவர் நடித்த எந்தப் படத்திலும் அவர் சோடை போனதில்லை. தமிழிலும் கூட அவருக்கு சில நல்ல படங்கள் அமைந்தன. மோகமுள் அவருக்கு தமிழில் முதல் படம். இந்தியன் பெயர் வாங்கித் தந்த படம். இதுதவிர மேலும் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தியனிலும், மோகமுள்ளிலும் அவரது நடிப்புக்கேற்ற தரத்துடன் கூடிய ரோல்கள் அமைந்திருந்தன என்று சொல்லலாம்.
நல்லதொரு தெளிவான நடிகர் நெடுமுடி வேணு.. அவரது ஆராட்டு படத்திற்காக அத்தனை பேரும் காத்திருந்தார்கள்.. அதற்குள் அவரது முடிவு வந்திருப்பது ஏமாற்றம்தான்.. 2012ல் திலகன் மறைந்தார். இன்று நெடுமுடி வேணு விடை பெற்றுள்ளார். கோபி, திலகன் வரிசையில் இன்று வேணுவையும் இழந்துள்ளது மலையாள சினிமா.. நிச்சயம் மலையாள சினிமாவுக்கு இது பெரிய இழப்புதான்.

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்