Skip to main content

நம்பிக்கைத் துரோகம்.. காலை வாருவது.. மோசடி... உயிர் பறிக்கும்.. ஸ்குவிட் கேம்!


கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு.. திரும்பிய பக்கமெல்லாம் இதேதான் பேச்சு.. சரி பார்த்துட்டாப் போச்சு.. என்று நெட் பிளிக்ஸில் நுழைந்து ஸ்குவிட் கேம் போட்டாச்சு... ஆரம்பித்த நொடி முதல்.. தி என்ட் வரை.. கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையல.. பார்த்து முடித்த பிறகும் கூட அந்த ரத்த வாடையும் நம்மை விட்டுப் போகலை.
ஹரி படத்தில் போற வாறவனெல்லாம் அரிவாளை எடுத்து சரக் சரக்கென்று வெட்டித் தள்ளுவார்கள் இல்லையா.. அதே மாதிரிதான் இந்த ஸ்குவிட் கேமில்.. ஆனால் எல்லாமே கொஞ்சம் மாடர்ன் மர்டர்ஸ்தான்.. ஒன்லி டுமீல் டுமீல்.
வழக்கமாகவே கொரிய ஹாரர், கிரைம் சீரிஸ்களில் ரத்த வாடை சற்று தூக்கலாகவே இருக்கும்.. இந்த ஸ்குவிட் கேமில் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது.. டிவி ஸ்கிரீனைத் தாண்டி வந்து தெறிக்கிறது ரத்தம். நச்சு நச்சுன்னு நெற்றிப் பொட்டிலும், நடு மண்டையிலும் சுட்டுத் தள்ளுகிறார்கள்.
ஸ்குவிட் கேம்.. கொரியர்களின் லேட்டஸ்ட் சீரிஸ். இது சீசன் 1, மொத்தம் 9 எபிசோட். குழந்தைகள் ஜாலியாக விளையாடும் விளையாட்டுக்களை.. அதாங்க கோலி குண்டு, கிரீன்லைட் ரெட் லைட்.. மாதிரியான 6 விளையாட்டுக்களை கையில் எடுத்துள்ளனர். அதை 456 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாட வேண்டும். கடைசி வரை தோற்காமல் வெல்பவருக்கு கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பணம் பரிசாக வந்து சேரும்.. சரி, தோற்பவர்களுக்கு?.. மரணமே பரிசு!
என்ன கொடுமைன்னா இந்த விளையாட்டுக்களில் பெரும்பாலானவை 10 வயசுக்குட்பட்ட குழந்தைகள் விளையாடுபவை.. ஆனால் இங்கு மனிதர்களின் உயிர்களை வைத்து விளையாடுகிறார்கள். அதுதான் ஸ்குவிட் கேமின் உறைய வைக்கும் கதை.
கதை என்னான்னு மட்டும் கேட்காதீங்க.. சீரிஸை பார்த்து உறைந்து போய் உணர வேண்டிய செமையான திரில்லர் இது. இந்த சீரிஸில் நிறைய மேட்டர்களை போகிற போக்கில் இறைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.. அதுதான் ஹைலைட்.
2 குரூப்.. திரும்பிய பக்கமெல்லாம் பணம்.. மலத்தில் கூட பணத்தின் மணத்தை நுகரும் அளவுக்கு பணக் குவியலில் புதைந்து போயிருக்கும் ஒரு பண முதலைக் கூட்டம் ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம், கையில் பைசா கூட இல்லாமல் நிலை குலைந்து போய் வறுமையிலும், கடனிலும், நெருக்கடியிலும் விழுந்து உயிர் காக்க ஏதாவது உதவிக் கரம் வந்து சேராதா என்ற நிலையில் தவிக்கும் மனிதக் கூட்டம்.
இந்த இரு பெரும் கூட்டமும் இணையும் இடம்தான் இந்த ஸ்குவிட் கேம் விளையாட்டுக் களம். முதல் கூட்டம், மனிதர்களின் உயிரை வைத்து கேம் ஆடுகிறது.. 2வது கூட்டம் உயிரே போனாலும் பரவாயில்லை எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற வெறியுடன் ஆட முன் வருகிறது.
இது ஒரு குரூரமான விளையாட்டுக் கதைதான் என்றாலும் கூட சமூக ஏற்றத் தாழ்வுகளை ரொம்ப எளிமையாக பொட்டில் அடித்தது போல "சுட்டு"ச் சொல்லியுள்ளார்கள். வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், யார் காலை வேண்டுமானாலும் வாரி விடலாம், ஏமாற்றலாம், நம்பிக்கை துரோகம் செய்யலாம், மோசடி செய்யலாம், ஏன் கொலை கூட செய்யலாம்.. இதுதான் இந்த தொடர் முழுவதும் வரும் மையக் கருத்தாக உள்ளது.
உன்னுடன் விளையாடுபவன் என்னதான் பாசம் காட்டினாலும், அவன் உனக்கு எதிரியே.. அவன் வென்றால் நீ தொலைந்தாய்.. நீ வெல்ல வேண்டுமா.. அவனை போட்டுத் தள்ளி விடு.. சற்றும் இரக்கம் காட்டாதே.. இதுதான் இந்தத் தொடரின் மையக் கருத்து உணர்த்தும் உண்மையாகும்.
ஆனாலும் இந்த கதாபாத்திரங்களில் பல நல்லவர்களும் இருக்கிறார்கள்.. அதில் ரொம்ப நல்லவன் கடைசி வரை போராடி வென்று வருகிறான்.. ஆனால் அவனும் கூட ஒரு கேமில் மோசடியில் இறங்கவே செய்கிறான். அது அவனை கடைசி வரை உறுத்துகிறது. தன் கண் முன்பு காணும் மோசடிச் செயல்களைப் பார்த்து கொதிக்கிறான்.. ஆனால் தன்னை மீட்க தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த மிகப் பிரமாண்டமான பரிசுப் பணத்தை நினைத்து நினைத்து வேதனையுடன் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு போகிறான்.
இப்படி ஒரு விளையாட்டா.. இத்தனை உயிர்களைக் கொன்று பணம் சம்பாதித்துள்ளேனா.. இப்படி ரத்தத்தில் குளித்துதான் நான் கரையேறி வர வேண்டுமா என்று மனதைப் போட்டு நொறுக்கித் தள்ளும் கேள்விகளுடன் அவன் குமுறிக் கொண்டிருக்கும்போதுதான்.. அந்த குரூர கும்பலின் தலைவன், அந்த கொடூர விளையாட்டின் நாயகன் யார் என்று தெரிய வருகிறது... இதுவரை அடையாத அதிர்ச்சியை அந்த உண்மை தருகிறது.. ஆனால் கடைசியில் குரூரனுக்கும் மரணமே தண்டனையாக வந்து சேருகிறது.
படத்தில் இன்னொரு சைடு கதையும் ஓடுகிறது. ஒரு போலீஸ்காரன் தன்னுடைய காணாமல் போன அண்ணனைத் தேடி இந்த கும்பலுக்குள் ஊடுறுவுகிறான். கடைசியில் அவனுக்கு கிடைக்கும் அதிர்ச்சி.. நமக்கும் சேர்த்தே வருகிறது.
9 எபிசோடுகளும் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் பிரமிக்க வைத்துள்ளது.. 001 தாத்தா, 456 நாயகன், படித்த முட்டாள் சாங் வூ, மனதில் பாரத்தை ஏற்படுத்திய 3 பெண்கள்.. என மனதைப் பாதித்து விட்டுப் போகும் பாத்திரங்களை அழகாக கொண்டு போயிருக்கிறார்கள். அதை விட முக்கியமாக, ஒவ்வொரு கேமையும் ரொம்ப திரில்லிங்காக தேர்வு செய்து விளையாட விட்டுள்ளனர். முதல் கேமிலேயே ரத்த வாடையை தெறிக்க விட்டு அயயோ முதல் கேமே இப்படியா என்று பயமுறுத்தி விடுகின்றனர். அடுத்தடுத்த கேம் எப்படி இருக்குமோ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பை முதல் கேமிலேயே ரொம்ப திரில்லிங்காக ஏற்படுத்தியுள்ளனர்.
முடிவு யாரும் எதிர்பாராதது.. ஆம், எந்த முடிவுமே எதிர்பாராமல் வருவதுதானே.. !
ஸ்குவிட் கேம்.. கட்டாயம் பாருங்க (பெரியவர்கள் மட்டும்).

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்