ஒரே ஒரு ஓட்டு வாங்கியுள்ளார் ஒரு வேட்பாளர். ஏதோ சுயேச்சை வேட்பாளர் இல்லை.. தேசியக் கட்சியான பாஜகவின் நிர்வாகிக்குத்தான் இந்த மிரட்சியைக் கொடுத்துள்ளது தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல வினோதங்களைக் கண்டுள்ளது தமிழ்நாடு. அதில் அத்தனை பேரையும் வியக்க வைத்தும், பாஜகவினர் கண்களை வேர்க்க வைத்திருப்பதும் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சியின் 9வது வார்டில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட பாஜகவின் கார்த்திக்.
ஓட்டு எண்ணிக்கையின்போது இவருக்குக் கிடைத்த வாக்குதான் இன்று தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. ஜஸ்ட் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கி வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்துள்ளார் கார்த்திக். இவரது வீடு இருப்பது 4வது வார்டு போல.. ஆனால் தேர்தலில் நின்றது 9வது வார்டில். இதனால் இவரது குடும்பத்தினரே இவருக்கு ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இவருக்கு தேமுதிக வேட்பாளர் பரவாயில்லை. அவருக்கு 2 ஓட்டு கிடைத்துள்ளது. பாஜகவை விட தேமுதிக "வலுவாக" இருப்பதாக தேமுதிகவினர் "தைரியமாக" காலரைத் தூக்கி விட்டுக்கலாம்! பாஜக மட்டுமல்ல தேமுதிகவும் கூட இந்த பிரமாண்ட வாக்குகள் குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டும். இரு கட்சிகளின் உண்மையான நிலவரம் இதுதானோ என்ற சந்தேகத்தையும் இது ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது.
உண்மையிலேயே என்ன நடந்தது.. கார்த்திக்குக்கு ஏன் ஒரே ஒரு ஓட்டு மட்டும் கிடைத்தது என்பது விவாதப் பொருளாகியுள்ளது. ஆனால் இது கார்த்திக்குக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானம் கிடையாது.. நிச்சயம் பாஜக தன்னைப் பற்றி மிகத் தீவிரமாக சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. நிச்சயம் அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியான விஷயம் என்பது மட்டுமல்ல.. கட்சியை அடி மட்ட அளவில் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
காரணம், கொங்கு மண்டலத்தில்தான் கார்த்திக் ரூபத்தில் இப்படி ஒரு அவமானத்தை பாஜக சந்தித்துள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்றால், பாஜகவுக்கும் அங்கு கணிசமான ஆதரவு வட்டம் உள்ளது. அப்படிப்பட்ட வட்டத்திலேயே இப்படி ஒரு பெரிய ஓட்டை விழுந்திருப்பது சற்றும் எதிர்பாராதது.. எனவே கட்டாயம் கன்னத்தில் கை வைத்து பாஜக கவலைப்பட்டாக வேண்டும்.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்தது போல திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதே போல எதிர்பார்த்தபடி அதிமுகவும் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. மற்ற கட்சிகளைப் பற்றிப் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதே ரிசல்ட் உணர்த்தும் பாடமாக இருக்கிறது. இதில் பிளம் கேக்கில் வைத்த திராட்சை போல பாஜக மட்டும் கார்த்திக் புண்ணியத்தால் தனித்து தெரிந்ததுதான் இந்த தீர்ப்பின் முக்கிய ஹைலைட்!
சரி அதை விடுங்க.. ஒரு ஓட்டுன்னு ரொம்பக் கேலியெல்லாம் பேச வேண்டாம்.. வரலாற்றில் இந்த ஒரு ஓட்டு எத்தனை அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தியிருக்கு தெரியுமா.. பல சரித்திரங்களை புரட்டிப் போட்ட வரலாறு "ஒரு ஓட்டு"க்கு உண்டு.. வாக்கின் வலிமை அது.. அதை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

Comments