ஒரே ஒரு ஓட்டு வாங்கி விட்டார் என்ற அவச் சொல்லுக்கு பாஜக வேட்பாளர் கார்த்திக் உரித்தாகியுள்ளார் என்றாலும் ஒரே ஒரு ஓட்டு வரலாற்றைப் புரட்டிப் போட்ட சம்பவங்கள் நிறையவே காணக் கிடைக்கின்றன.
"ஒரு ஓட்டு வரலாறு" என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பல சுவாரஸ்யங்களில் போய் நாம் மோதி நிற்கலாம்... அடல் பிகாரி வாஜ்பாய் ஒரே ஒரு ஓட்டில்தான் தனது ஆட்சியை இழந்தார். அது 1999ம் ஆண்டு, ஏப்ரல் 17ம் தேதி.
ஜெயலலிதா காலை வாரி விட்டார்.. மாயாவதி கடைசி நேரத்தில் பல்டி அடிக்கிறார்.. லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம் அனல் பறக்கிறது... கையைப் பிசைந்தபடி மேஜிக் நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது பாஜக.. ஆனால் மாயாவதி எழுந்து பேசத் தொடங்கிய அடுத்த சில விநாடிகளிலேயே தெரிந்து விடுகிறது.. பாஜக அரசு கவிழப் போவது உறுதி என்று... ஒரே ஒரு ஓட்டில் வீழ்ந்தது பாஜக அரசு... இந்திய நாடாளுமன்றம் அது போல ஒரு சம்பவத்தை, தீர்ப்பை கண்டதில்லை.
ஆனால் துயரம் தொடர் கதையாகவில்லை.. சில மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் வாஜ்பாய் வெற்றி பெற்றார்.. இதில் விசேஷம் என்னவென்றால் அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சியைப் பறி கொடுத்த பாஜக, இந்த இடைத் தேர்தலில் திமுகவுடன் கை கோர்த்து லாபத்தை அறுவடை செய்தது. இந்த வாஜ்பாய் ஆட்சிதான் இன்று வரை பாஜகவுக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்து வருகிறது.
ராஜஸ்தானில் 2008ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இதேபோல ஒரு கூத்து நடந்தது. முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிபி ஜோஷி பரிதாபமாகத் தோல்வியைத் தழுவினார். எத்தனை ஓட்டுக்களில் தெரியுமா.. ஜஸ்ட் ஒரே ஒரு ஓட்டில். அவரை தோற்கடித்தவர் கல்யாண் சிங் செளஹான். ஜோஷிக்கு கிடைத்த வாக்குகள் 62,215, கல்யாண் சிங்குக்குக் கிடைத்த வாக்குகள் 62,216. என்ன கொடுமை என்றால் இந்தத் தேர்தலில் ஜோஷியின் அம்மா, மனைவி, டிரைவர் ஆகியோர் ஓட்டுப் போடவில்லை. போட்டிருந்தால் ஜோஷி வென்றிருப்பார்.. முதல்வர் பதவியும் கிடைத்திருக்கலாம்.
இதேபோன்ற ஒரு கொடுமை 2004 கர்நாடக சட்டசபைத் தேர்தலில் கிருஷ்ணமூர்த்திக்கும் நடந்தது. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சட்டசபைத் தேர்தலில் 40,751 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட துருவநாராயணன் 40,752 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கர்நாடக அரசியல் வரலாற்றிலேயே ஒரே ஒரு ஓட்டில் தோற்ற முதல் அரசியல் தலைவர் கிருஷ்ணமூர்த்திதான். என்ன விசேஷம்னா.. கிருஷ்ணமூர்த்தி போட்டியிட்ட தொகுதியில்தான் அவரது டிரைவருக்கும் ஓட்டு இருக்கிறது. ஆனால் அவர் தேர்தலில் வாக்களிக்கவே இல்லை!
உள்ளூர் ஆட்டக்காரர்கள்தான் இப்படி என்றால் வெளிநாட்டிலும் இதுபோன்ற காமெடிகளை நிறையவே பார்த்திருக்கிறது. ஜான்ஸிபார் நாட்டில் 1961ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஆப்ரோ ஸிராஜி என்ற கட்சி 1538 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றது. அதை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான்ஸிபார் தேசியவாத கட்சிக்கு 1537 ஓட்டுக்களே கிடைத்தன. அதாவது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அக்கட்சி வென்றது.
ஒரு ஓட்டுதான்.. ஆனால் அதன் வலிமை.. நாம் நினைப்பதை விட அதிகம் என்பதை இந்த தேர்தல்கள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன... ஸோ, "சிங்கிள்"தானே என்று யாரும் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம்.. அதில்தான் வரலாறு புதைந்திருக்கும்.. உண்மையில் பல நூறு வாக்குகளை வாங்கி தோற்றவர்களை விட கார்த்திக் போன்ற சிங்கிள் ஓட்டுக்காரர்களைதான் வரலாறு அதிகம் நினைவுபடுத்தும்!

Comments