கிராமங்களில் புதுமைப் புயலைக் கிளப்பிய அரசியல்வாதிகளில் ஒருவர் கமல்ஹாசன். அவர் கையில் எடுத்த "கிராம சபை" உத்திதான் அக்கட்சிக்கு வெளிச்சம் கொடுத்தது. ஆனால் அந்த வெளிச்சம், நகர்ப்புறங்களில் கொடுத்த பலனை, கிராமப்புறங்கள் தரத் தவறி விட்டதையே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்தபோதே அது நகர்ப்புற மக்களுக்கான கட்சியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இல்லை, நாங்கள் கிராமப்புறங்களுக்கான மய்யத்தினர்தான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கிராம சபை கூட்டங்களைக் கையில் எடுத்தார் கமல்ஹாசன். கிராம சபைக் கூட்டங்கள் மூலம் கிடைக்கும் லாபங்களை அவர் பட்டியலிட்டுப் பேசியபோது கிராமங்களில் மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இந்த உத்தியைத்தான் பின்னர் திமுக உறுதியாக பற்றிக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரையில் கிராம சபைக் கூட்டங்களை முக்கிய களமாக மாற்றிக் கொண்டார்.
கமல்ஹாசன் கட்சிக்கு நகர்ப்புற வாக்காளர்களுக்கான கட்சி என்ற பெயர் வைத்தது சரிதான் என்பது போல இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. விரல் விட்டும் எண்ணும் அளவில்தான் இக்கட்சிக்கு ஊரக தமிழ்நாட்டில் ஆதரவு கிடைத்துள்ளது. இது நிச்சயம் அக்கட்சிக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான்.
கமல்ஹாசன் கட்சியைப் பொறுத்தவரை கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே அக்கட்சி பெரும் சரிவைக் கண்டு விட்டது. வாக்குகளை கணிசமாக பெற்றதே தவிர கமல்ஹாசனால் கூட தேர்தலில் வெல்ல முடியாமல் போனது கட்சிக்கு பெரிய பலவீனமாக மாறிப் போனது. அதை விட முக்கியமாக மகேந்திரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு வெளியேறியதன் மூலம் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டு விட்டது.
இந்த சூழ்நிலையில்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தைரியமாக களம் கண்டது மக்கள் நீதி மய்யம். தேர்தலைப் புறக்கணிக்காமல், பயந்து ஓடாமல் உறுதியான எண்ணத்தோடு களம் கண்டதை நாம் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஆனால் கமல்ஹாசன் கட்சிக்கு ஊரகப் பகுதிகளில் பெருத்த ஆதரவு கிடைக்காமல் போயிருப்பது ஆச்சரியம்தான். நடிகர் விஜய் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ளனர். ஆனால் ஒரு நல்ல அரசியல் சக்தியாக உருவெடுத்து நிற்கும் கமல்ஹாசன் கட்சிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
நிச்சயம் கமல்ஹாசன் சற்று சீரியஸாக அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க வேண்டும். கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்த வேண்டும். ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் களம் இறங்க வேண்டும். நல்ல நிர்வாகிகளை உருவாக்க வேண்டும். அடுத்தடுத்து வரும் தேர்தலுக்கு ஏற்றவாறு கட்சியை பலப்படுத்த வேண்டும். இதற்கெல்லாம் அவர் முதலில் முழு நேர அரசியல்வாதியாக மாற வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், அடுத்த தேர்தலில் காணாமல் போன கட்சிகளில் மக்கள் நீதி மய்யமும் ஒன்றாக இணைந்திருக்கும்.
"உள்ளாட்சியில் தன்னாட்சி" எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்" என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.. பார்க்கலாம்.. விசையின் வீச்சும், வீரியமும் எப்படி இருக்கப் போகிறது என்பதை.


Comments