தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் திறந்து விட ஆரம்பித்து விட்டார்கள். கோவில்களை திறக்கச் சொல்லி விட்டார்கள். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளையும் திறக்கச் சொல்லி விட்டார்கள். பீச்சுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் போகலாம் என்று ஓகே சொல்லி விட்டார்கள்.. திரும்பும் பக்கமெல்லாம் திறப்பு செய்திகளாகவே இருக்கிறது.
என்னாச்சு.. கொரோனா முடிஞ்சு போச்சா.. அல்லது ஒழிஞ்சு போச்சா...?
அரசு எடுக்கும் முடிவுகள் எல்லாமே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இருக்கும், இருக்க வேண்டும். அதேசமயம், பல நேரங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சில முடிவுகளை அரசு எடுக்க வேண்டியிருக்கும். அப்படித்தான் சில முடிவுகளைப் பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நேற்று மட்டும் 20 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். நேற்று பதிவான புதிய கேஸ்களின் எண்ணிக்கை 1280. மீண்டு வந்தோர் இதை விட அதிகம் என்பது சந்தோஷமானது, அதாவது 1438 பேர் நேற்று கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்றைய நிலவரப்படி 15,451 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.
சென்னையும், கோவையும் தான் தொடர்ந்து அதிக கேஸ்களை பதிவு செய்கின்றன. ஆனால் இரண்டு ஊர்களிலுமே 200க்குக் கீழ்தான் கேஸ்கள் பதிவாகி வருகின்றன. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் தலா 10க்கும் கீழான கேஸ்களே பதிவாகியுள்ளது. இது சந்தோஷமான செய்திதான். அதேபோல 25 மாவட்டங்களில் புதிதாக எந்த மரணமும் சம்பவிக்கவில்லை.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் காலம் இது.. இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. அடுத்து தீபாவளி வரப் போகிறது. பர்ச்சேஸுக்காக மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளை மொய்த்து வருகின்றனர். ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் என எங்கு பார்த்தாலும் பெரும் கூட்டமாக இருக்கிறது. அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதற்கிடையே வட கிழக்குப் பருவ மழை காத்திருக்கிறது.
இத்தனை சவால்களுக்கு மத்தியில்தான் அரசு பல விஷயங்களை ஓபன் செய்துள்ளது. இது அரசின் கடமை. அதை அது செய்துள்ளது. மக்களின் கடமை, எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே. ஆனால் மக்களிடையே அந்த விழிப்புணர்வைப் பார்க்க முடியவில்லை. தியேட்டர்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் வருகிறது. பல தியேட்டர்களில் ஒரு சீட் விட்டு ஒரு சீட் என்ற ஒதுக்கீட்டைப் பார்க்க முடியவில்லை. கூட்டம் அதிகமாக வந்தால் எல்லா சீட்டுகளையும் கூட நிரப்பி விடுகிறார்கள். இதெல்லாம் பேராபத்தில்தான் போய் முடியும்.
பலர் மாஸ்க் போடுவதையே மறந்து விட்டனர். மாஸ்க் போடாமல் வெளியில் திரிவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. அப்படியே மாஸ்க் போட்டாலும் சரிவர போடுவதில்லை. தாடையுடன் நிறுத்தி விடுகின்றனர். அல்லது வாய் வரை மட்டுமே போட்டு ஸ்டைல் காட்டுகின்றனர். இதெல்லாம் அரசு பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.
அரசு திறந்து விட்டுப் போய் விடும்.. அது வேலையை அது செய்கிறது.. ஆனால் மாட்டிக் கொண்டால் முழிக்கப் போவதும்.. உயிர் துறக்கப் போவதும் நாம்தான்.. எனவே அரசு என்னதான் முடிவெடுத்தாலும் கவனத்துடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்கத் தவறினால்.. சிக்கல் நமக்குத்தான்.
நேத்து வரை நல்லாதாங்க இருந்தாரு.. திடீர்னு மூச்சுத் திணறல் வந்தது.. கூட்டிட்டுப் போனாங்க.. கொஞ்ச நேரத்துல இறந்துட்டாரு.. என்ற செய்திகள் இன்னும் கூட ஓயவில்லை. காரணம் கொரோனா இன்னும் போகவில்லை.
கொரோனா இன்னும் ஒழியவில்லை.. ஒரு ஓரமாக உட்கார்ந்து நம்மையே பார்த்துக்கொண்டுதான் உள்ளது. புரிந்து நடந்து கொண்டால் சரி.

Comments