உடன் பிறப்பே.. சசிக்குமார், சமுத்திரக்கனி, ஜோதிகா என பெரிய தலைகள் நடித்து வெளியாகியுள்ள படம். அருமையான குடும்பப் படம்.. குடும்பங்களுக்குள் நடக்கும் சலசலப்புகள், மனக்கசப்புகள்.. அதிலிருந்து மீண்டு மீண்டும் இணையும் குடும்பங்கள்.. என வழக்கமான பார்முலா. ஆனால் வித்தியாசமாக சொல்லியுள்ளனர்.
படம் முழுக்க வசனங்கள் நிறைய.. பார்த்துப் பார்த்து நிதானமாகத்தான் பேசுகிறார்கள். ஆனாலும் ஒரு நாடகத்தன்மை அதில் மிளிர்வதை தடுக்க முடியவில்லை, தவிர்க்க முடியவில்லை. ஹீரோயின் ஓரியன்டட் படம்.. ஜோதிகா மீது நிறைய பாரத்தை ஏற்றியுள்ளனர். முடிந்தவரை சமாளித்து கரையேறியுள்ளார்.
அதேசமயம், நடிப்பில் பல படி மெருகேறியுள்ளார் ஜோதிகா. நகரத்து கேரக்டர்களில் பார்த்துப் பழகிய கண்களுக்கு ஜோதிகாவின் இந்த கிராமத்து அவதாரம் வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால், கிழக்குச் சீமையிலே எப்படி ராதிகாவுக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுத்ததோ அதே போல இந்த உடன் பிறப்பே ஜோதிகாவுக்கு பெயர் வாங்கித் தரும். நடிப்பிலும் கூட பல இடங்களில் ராதிகாவின் சாயலை வெளிப்படுத்துகிறார் ஜோதிகா.
சசிக்குமார் அமைதியாக அசத்தியுள்ளார். வழக்கமான சசிக்குமார் படங்களுக்கே உரிய எந்த முத்திரையும் இதில் இல்லை. அதுவே இந்த கேரக்டருக்கு புது வண்ணம் கொடுத்துள்ளது. ரொம்ப இயல்பான நடிப்பு. அவரது கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் அழகாக செய்துள்ளார். வசனத்தையும் கூட இயல்பாக பேசி நடித்துள்ளார். மிகையில்லாத நடிப்பு.. நிச்சயம் அவரது கெரியரில் இது நல்ல படம் என்று சசிக்குமார் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். மச்சான்களுக்கு இடையிலான முறுக்கை ரொம்ப அழகாக காட்டியுள்ளனர் சமுத்திரக்கனியும், சசிக்குமாரும். இருவரும் இணைந்து நடித்த பல முந்தைய படங்களை ஒப்பிடுகையில் இதில் பல படி உயரப் போயுள்ளனர்.
சமுத்திரக்கனி நடிப்பு அருமை.. அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார். இயல்புத்தன்மை வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கிறது. நல்ல நடிப்பு. சண்டியராக இருப்பதை விட சட்டத்துக்கு உட்பட்டு நடப்பதே நல்லது என்ற சாத்வீக கருத்தை வலியுறுத்தும் நிதானப் போராளியாக இதில் வருகிறார். மிகப் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி.
சசிக்குமாரும் சரி, சமுத்திரக்கனியும் சரி இருவரும் தத்தமது நிலைப்பாடுகளில் உறுதியாக உள்ளனர். சமுத்திரக்கனி சண்டை சச்சரவு வேண்டாம் என்கிறார், ஆனால் தட்டிக் கேட்க வேண்டியதை தட்டிக் கேட்டுதான் ஆக வேண்டும் என்று நியாயம் கற்பிக்கிறார் சசிக்குமார்.. இருவரும் ஒருவரிடம் ஒருவர் தோற்றுப் போய் விடக் கூடாது என்று மனசு நிறைய பாரத்துடன் துடிக்கும் ஜோதிகா.. மிக மெல்லிய இழைதான்.. தவறினால் சொதப்பி விடும்.. ஆனால் இந்த குடும்பச் சிக்கலை மிக நுனுக்கமாக கையாண்டு அழகாக முடித்துள்ளார் இயக்குநர் சரவணன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு கேரக்டரில் வருகிறார் சூரி. லயித்துப் போய் ரசிக்க வைத்திருக்கிறார். வசனங்களில் கலக்கியுள்ளார். "நீங்க சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொல்லித் தர்றீங்க.. அவரு, சாதிகள் இல்லை - அடி- பாப்பான்னு சொல்லித் தர்றாரு" என்ற வசனம் சபாஷ் போட வைக்கிறது.
சின்ன காட்சியில் வரும் தீபா, பேசும் வசனம்.. பல குடும்பங்களுக்கு நல்ல அட்வைஸ்.. ஒரு பக்க அளவில் கூட இல்லாத வசனம் பேசி நடித்திருந்தாலும், அழுத்தம் திருத்தமாக மனதில் நிற்கிறார்.
சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் தேவையான கருத்துக்களை நிறையவே கொடுத்துள்ளனர். சில இடங்களில் அது மிகை போல தோன்றினாலும் கூட நாம் மறந்து போய்க் கொண்டிருக்கும் பல விஷயங்களை நினைவூட்டி நெகிழ வைத்துள்ளனர். சசிக்குமாருக்கு குழந்தை இல்லை என்பதால் அவருக்கு இரண்டாந்தாரம் கட்டி முடிக்க ஊரே கூடி வந்து பேசுகிறது. "வரன் பாருங்க, ஆனால் எனக்கு இல்லை, என் மனைவிக்கு.. அவ நல்லாருக்கா.. எனக்குத்தான் குறை இருக்கு" என்று கூறி சமூகத்தின் தலையில் நச்சென்று குட்டு வைக்கிறார் சசிக்குமார்.. எவ்வளவு பெரிய கருத்தை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார்கள்.
கலையரசன் கேரக்டர் மூலம் பொள்ளாச்சி சம்பவத்தை சற்று தொட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவரது காட்சிகள் படத்திற்கு பெரிய பலவீனம். அவரது கேரக்டரை வேறு விதமாக கொண்டு போயிருக்கலாம்.
படத்தில் ஆபாசக் காட்சிகள் இல்லை, கிராமத்துப் படமே என்றாலும் கூட டபுள் மீனிங் வசனம் இல்லை, ஜாதிச் சண்டை இல்லை... மிகையில்லாத காட்சிகள், இயல்பான கதையோட்டம்.. தேவையில்லாத எந்த செருகலும் இல்லாத அருமையான குடும்பப் படம்.. நாடகத்தனத்தை சற்று தவிர்த்திருந்தால்.. இன்னும் ரசித்திருக்கலாம்.
பார்க்கலாம்..!


Comments