நடிகர் மம்மூட்டிக்கும், நெடுமுடி வேணுவுக்கும் இடையிலான நட்பு மலையாளிகள் நன்கு அறிந்த ஒன்று. தனது ஆருயிர் நண்பரின் மறைவால் வேதனை அடைந்துள்ள மம்மூட்டி ஒரு இரங்கல் குறிப்பை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.. அதன் தமிழாக்கம்.
அது 80கள்.. கோமரம் படப்பிடிப்பின்போதுதான் எனக்கும், வேணுவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. ஒரு நீண்ட நெடிய நட்புப் பயணத்தின் தொடக்கம் அது.
இருவரும் இணைந்து சென்னையில் தங்கிய காலம்தான் எங்களுக்கு வசந்த காலம். ஆரம்பத்தில் ரஞ்சித் ஹோட்டலில் தங்கியிருந்தோம். பிறகு உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு மாறினோம். உட்லண்ட்ஸ் காட்டேஜில் தங்கியதை மறக்க முடியாது. இருவரும் ஒரே அறையில் தங்கியிருப்போம். 85 வரை சென்னையில் தங்கியிருந்தோம்.
வேணுவுக்கும் எனக்கும் இடையிலான நட்பில் மறக்க முடியாத நிறைய அனுபவங்கள் உள்ளன. பல புதிய விஷயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தவர், அறிமுகம் செய்து வைத்தவர் வேணுதான். எதையுமே புதிய பார்வையில் பார்க்க கற்றுக் கொடுத்தார். பல விஷயங்களை எனக்கு கற்பித்தார். நாடகம், இசை, நாட்டுப்புறக் கலை, கதகளி, கூடியாட்டம் என அவரிடமிருந்து புதிது புதிதாக எனக்கு பல விஷயங்கள் வந்தவண்ணம் இருந்தன. நான் அதுவரை அறிந்திராத பல விஷயங்களை அவர் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
வேணுவுடன் இருந்த நாட்கள் மிகவும் சந்தோஷமானவை. கொஞ்சம் கூட போரடிப்பதாக நான் உணர்ந்ததே இல்லை. எப்போதும் ஏதாவது என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார். நிறைய பேசுவார். நான் அப்படி இருந்ததில்லை. அப்படி பேச என்னிடம் எதுவும் இருக்காது. ஆனால் அவரிடம் ஏதாவது இருந்து கொண்டே இருக்கும்.
மிகவும் நுட்பமான, காதலுடன் கூடிய அருமையான நட்பு அது. 80களில் வேணுவுக்கு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. துணை நடிகர் விருது எனக்குக் கிடைத்தது. இருவரும் சேர்ந்தே திருவனந்தபுரம் போய் விருதைப் பெற்றுக் கொண்டோம். பின்னர் எர்ணாகுளம் வந்தோம். அங்கு காலை உணவை முடித்துக் கொண்ட பின்னர் திருச்சூருக்கு ரச்சனா பட ஷூட்டிங்குக்கு கிளம்பிப் போனது இன்று கூட பசுமையாக நினைவில் உள்ளது.
அப்போதெல்லாம் சென்னையில் அதிக அளவில் படப்பிடிப்புகள் நடந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து நடித்து வந்தோம். 83, 84ம் ஆண்டுகளில் இருவரும் ஒரே அறையில் பல மாதங்கள் தொடர்ந்து தங்கியிருப்போம். அப்போதெல்லாம் 2வது ஞாயிற்றுக்கிழமைதான் ஷூட்டிங்குக்கு விடுமுறை விடப்படும். அந்த நாளை சரியாக பயன்படுத்திக் கொள்வோம். அதேசமயம் ஊருக்கும் போக முடியாது. எனவே சென்னையை சுற்றி வருவோம். வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றக் கிளம்பி விடுவோம். கடைகளுக்குப் போய் ஷாப்பிங் செய்வது, ஏதாவது நல்ல மலையாளி ஹோட்டலுக்குப் போய் கேரள உணவை ஒரு கை பார்ப்பது, பிறகு மாட்னி ஷோ, செகன்ட்ஷோ படம் பார்ப்பது என பொழுது கழியும்.
அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனைக்கும் இருவரும் அப்போது பிரபலமான நடிகர்கள். கேரளாவில் நாங்கள் அப்படி சுற்றியிருக்க முடியாது. அதுவும் வாடகை சைக்கிளில் ஊரை வலம் வருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் சென்னையில் அந்த சந்தோஷத்தை நாங்கள் அனுபவித்தோம். மலையாளிகளைத் தவிர வேறு யாருக்கும் எங்களை அப்போது அடையாளம் தெரியாது. எனவே ஜாலியாக சைக்கிளில் ரவுண்ட் அடிக்க முடிந்தது.
ஒரே அறையில் பல மாதங்கள் கூட தங்கியிருந்தோம் என்ற போதிலும், இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது அரிதாக மாறியது. காரணம், இருவரும் ஷூட்டிங்கில் பிசியாக இருப்போம் அல்லது தூக்கத்தில் பாதி நாட்கள் கடந்து போய் விடும். ஒரு நாள் அதிகாலை இருக்கும்.. நல்லா அசதியாக தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்புக்கு என்னை அழைத்துப் போக வந்த புரடக்ஷன் மேனேஜர் என்னை தட்டி எழுப்ப வந்துள்ளார். அதைப் பார்த்த வேணு, அவரை திட்டி விட்டார். நல்லா தூங்குறவனைப் போய் எழுப்பறியே என்று திட்டி விட்டார்.
அப்போது நான் ஒரே சமயத்தில் 2, 3 படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். இரவு முழுவதும் ஒரு படப்பிடிப்பில் இருந்து விட்டு அதிகாலையில்தான் வந்திருந்தேன். அசந்து போய் தூங்கி விட்டேன். அது புரடக்ஷன் மேனேஜருக்குத் தெரியாது இல்லையா.. வேணு தன்னைத் திட்டி விட்டதாக பின்னர் அந்த மேனேஜர் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார்.
படப்பிடிப்புத் தளங்களில் எங்களுக்கு ஓய்வுக்கு சரியான வசதி கிடைக்காது. சமயங்களில் நியூஸ் பேப்பரையே தரையில் விரித்து அப்படியே படுத்துத் தூங்கி பிரேக் எடுத்துக் கொள்வோம். அப்போது எனக்கு அருகிலேயே வேணுவும் படுத்துக் கொள்வார். சில நேரங்களில் வெயில் என் மீது படுவதைக் கூட உணராமல் தூங்கியிருப்பேன். அப்போது அவர் என்னை மெதுவாக நகர்த்தி நிழல் உள்ள பக்கம் படுக்க வைத்து விடுவார்.
ஒரு முறை வெளிப்புறப் படப்பிடிப்பின்போது ஒரு பாறையில் படுத்துத் தூங்கி விட்டேன். சிறிது நேரம் கழித்து கண் விழித்துப் பார்த்தபோது ஒரு காரின் பின் சீட்டில் நான் படுத்திருந்தேன். இங்கு எப்படி வந்தேன் என்று கேட்டபோது, வேணுதான் என்னை அப்படியே அலேக்காக தூக்கி வந்து காரில் போட்டார் என்று தெரிய வந்தது. அப்ப நான் கொஞ்சம் ஒல்லியாகத்தான் இருப்பேன். அதனால் ஈசியாக என்னைத் தூக்கி வந்து காரில் போட்டுள்ளார்.
ஒரு தம்பியாக, ஒரு அண்ணனாக, ஒரு தந்தையாக, ஒரு மாமனாக பல ரோல்களில் என்னுடன் வேணு நடித்துள்ளார். அது எல்லாவற்றையும் விட, எனக்கு எல்லாமுமாக இருந்தவர் வேணு. எங்களது நட்பு சினிமாவைத் தாண்டி, குடும்பங்களுக்கு இடையிலானதாகவும் வலுவாக இருந்தது. கடந்த பிறந்த நாளின்போது எனக்கு அவர் வாழ்த்து அனுப்பியிருந்தார். கடந்த பிறந்த நாளை பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடியிருந்தோம்.
இப்போது கூட அவர் என்னுடன், புழு, பீஷ்மபார்வம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த முறை தனது பிறந்த நாளுக்கு அவரது மனைவி சுசீலாம்மா எனக்கு புது வேட்டியும், கூடவே வாழ்த்துக் கடிதத்தையும் வழக்கம் போல கொடுத்தனுப்பியிருந்தார்.
எனக்கு அவர் அண்ணனாக இருந்தார், நல்ல நண்பனாக இருந்தார், நல்ல மாமனாக இருந்தார், ஒரு தந்தையாக இருந்தார். வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு எனக்கு நல்ல உறவாக இருந்தார். என்னால் எதையுமே மறக்க முடியாது.
அவருக்கு நான் குட்பை சொல்ல முடியாது. எப்போதும் வேணு எனது மனதில் இருக்கிறார், இருப்பார். ஒவ்வொரு மலையாளியின் இதயத்திலும் அவர் ஒரு நட்சத்திரம் போல எப்போதும் பிரகாசித்தபடி இருப்பார்.
மூலம்: https://www.facebook.com/photo/?fbid=426520062171334&set=a.271462904343718

Comments