Skip to main content

"தைரியம்தான் சார் என்னோட பலமே..".. உலாப் போகும் உணர்வுகள் (15)


ஒரு நீண்ட மருத்துவமனை வாசம். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள்.. இதுவரை கண்டிராத அனுபவங்கள். ஒரு சாதாரண நபராக இல்லாமல், எனது அனுபவங்களை நான் எல்லோருக்கும் பதிவு செய்ய முக்கியக் காரணம்.. சில விஷயங்களைச் சொல்லத்தான்.

அரசு மருத்துவமனைகள் மீது பலருக்கும் இன்னும் நம்பிக்கை இல்லை, பயம் இருக்கிறது. ஆனால் அத்தனையையும் பொய் என்று சொல்ல வைத்து விட்டது எனது இந்த மருத்துவமனை அனுபவம். மருந்து வாசனையே இல்லாத அரசு மருத்துவமனையை இப்போதுதான் பார்க்கிறேன். அத்தனை சுத்தம். அருமையான டாக்டர்கள்.. பரிவு காட்டும் செவிலியர்கள்.. தேவையில்லாமல் மருந்துகளைப் போட்டு கஷ்டப்படுத்துவதில்லை. தேவையில்லாமல் எந்த விஷயத்தையும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் நிதானம், பக்குவம் காட்டுகிறார்கள். . பல விஷயங்களை மனது அசை போட்டுப் பார்க்க இந்த அனுபவம் உதவியது.

அனுபவங்கள்தான் நமக்கு ஆசான். அனுபவம் பெறாத மனிதன் என்னைப் பொறுத்தவரை அரை மனிதன்தான். நல்லதோ கெட்டதோ எதையும் உணர்ந்து தெளிந்தால்தான் ஒருவருக்கு முழுமை கிடைக்கும். எந்த அனுபவமாக இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்பதும் கற்ற பாடத்திலிருந்து நம்மைத் சரி செய்து கொள்வதும்  மிக முக்கியமானது.

கொரோனா எல்லோருக்குமே நிறைய வலிகளையும், வேதனைகளையுமே கொடுத்துச் சென்றுள்ளது. என் வீட்டிலேயே கூட ஒரு இழப்பை நாங்கள் சந்தித்தோம்.. அந்த சோகத்திலிருந்தும், அதிர்ச்சியிலிருந்தும் இன்னும் கூட நாங்கள் மீளவில்லை. எல்லோருக்கும் வந்து சென்ற கொரோனா கடைசியில் எனது குடும்பத்தையும் தீண்டிச் சென்றது நானே எதிர்பாராதது.. முடியாத நீண்ட ஒரு தொடர் கதையாக நீடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பேரிடர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ள பாடம்..  உறவுகளின் அருமையைத்தான்.

உண்மையிலேயே இந்த ஒரு வார கால மருத்துவமனை தங்கலில் எனக்கு எந்தவிதமான உடல் ரீதியான பிரச்சினையும் ஏற்படவில்லை. சிற்சில இடர்பாடுகளைத் தவிர.. ஆனால் அத்தனை உறவுகளையும் நான் அதிக நெருக்கமாக இந்த ஒரு வாரத்தில் உணர்ந்தேன். நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் என உணராத உறவுகள் இல்லை.  அது மன ரீதியாக பலத்தைக் கொடுத்தது. ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது.. இத்தனை அன்பு நம்மைச் சுற்றி இருக்கும்போது எது வரினும் தைரியமாக கடப்போம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. 

எல்லோருக்கும் இதுபோன்ற அன்பும் உறவும் உண்டு. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதை பேணிக் காக்கிறோம்.. பிடித்த விரலை விடாமல் பற்றிச் செல்லும் மனிதர்கள் எத்தனை பேர்.. எனது 2ம் வகுப்பு நண்பர்கள் பலரின் பெயர்களை நான் இன்னும் கூட நினைவில் வைத்திருக்கிறேன். இத்தனை கால வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு முக்கிய சம்பவத்தையும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன்.. இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடம் பகிரவும் செய்திருக்கிறேன். என் வீட்டில் இதைப் பற்றி அவ்வப்போது மலரும் நினைவுகளாகப் பகிரும்போது, "நீங்க நினைக்கிற அளவுக்கு அவங்கெல்லாம் உங்களைப் பற்றி நினைப்பாங்களா"ன்னு கேட்பதுண்டு. 

சில மாதங்களுக்கு முன்பு நான் முன்பு பணியாற்றிய மாலைமுரசு அலுவலகத்திற்குச் சென்று எனது முன்னாள் ஆசிரியரை சந்தித்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்த வார்த்தை கிடையாது.. அவர் சொன்ன வார்த்தை எனக்கு கிடைத்த மரியாதை.

"யாராச்சும் பேசுனாங்களா சார்"

"ஒருத்தரும் பேசுறதில்லை அறிவு.. நீ மட்டும்தான் போன்ல பேசுவே.. நீ மட்டும்தான் நேர்ல பார்க்க வந்திருக்கே.. அப்படியே இருக்கே..  மகிழ்ச்சியா இருக்கு.. உன் மனசுக்கு எது நடந்தாலும் அது நல்லதாவேதான் நடக்கும்.. தைரியமா இரு"

"தைரியம்தான் சார் என்னோட பலமே.. விரல் பிடிச்சுக் கத்துக் கொடுத்த உங்க அன்பை விட வேற பெருசு இல்லை சார்.. பழசை எப்படி சார் மறக்க முடியும்.. அப்படி மறந்தா அந்த நிமிடமே உயிரற்றவனா மாறிடுவேன் சார்"

அவருடன் சுமார் ஒரு மணி நேரம் இருந்திருப்பேன்.. அதற்குள் அவருடன் வேலையில் பயணித்த அந்த ஒரு வருட காலத்தை,  மறக்க முடியாத சம்பவங்களை ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல அவருக்கு அத்தனை ஆச்சரியம்.. அத்தனை மகிழ்ச்சி..

"எப்படி அறிவு.. இவ்வளவையும் ஞாபகம் வச்சிருக்கே.. நீ சொல்லச் சொல்லத்தான் எனக்கும் இதெல்லாம் நினைவுக்கு வருது.. இப்ப செந்தில் இல்லாம போயிட்டான்.. அவன் இருந்திருந்தா வேற மாதிரி போயிருக்கும்"

"உண்மை சார்.. செந்திலை நான் நினைக்காத நாளே கிடையாது சார்.. அனுபவங்களையும் உணர்வுகளையும் மறக்க  கூடாது சார்.. அதுதான் நம்மை இயக்கும் சக்தி.. அது இல்லாவிட்டால் எப்படி சார்"

அருகில் இருந்த பக்கிரியப்பனுக்கும் ஆச்சரியம். சென்னை பத்திரிகையாளர்கள் வட்டாரத்திலேயே கிரைம் செய்திகளை எழுதுவதில் இவர் கில்லாடி. அனுபவம் வாய்ந்த  செய்தியாளர். இவர்கள் எல்லாம் ஓய்வு பெற்ற பின்னரும் கூட இவர்களுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, மாலைமுரசு செய்தி நிறுவனம், இவர்களை பணியில் தொடர்ந்து வைத்துள்ளது.


"முக்கியத்துவம்".. இதுதான் வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் முக்கியம். ஒருவரின் முக்கியத்துவம் புரிந்து அந்த முக்கியத்துவத்தை நாம் மதிக்கும்போதுதான் நமக்கான  மரியாதையும் கூடும்.. திறமைகளை சரியாக உணர்ந்து சரியான முறையில் அதை மதிக்கும்போதுதான் நம்மைச் சுற்றியிருப்போர் மத்தியில் நாமும் மதிப்பாக பார்க்கப்படுவோம்.

என்னுடைய இந்த 29 வருட பத்திரிகையாளர் வாழ்க்கையில், விரல் கொள்ள முடியாத அளவுக்கு பலருக்கு நான் வழிகாட்டியுள்ளேன். அரவணைத்து ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டி உச்சாணிக்குக் கொண்டு சென்றுள்ளேன்.  "உன்னால் முடியும்.. உன்னால் மட்டுமே முடியும்" என்று சொல்லிச் சொல்லியே பலரையும் எழுத வைத்துள்ளேன்.  என்னிடம் வரும்போது ஒரு ரூபத்தில் இருப்பவர்கள், வந்து சேர்ந்த பின்னர் வேரு ரூபத்திற்கு மாறி அவர்களுக்கே ஆச்சரியமாக மாறிப் போயிருக்கிறார்கள். தட்டிக் கொடுத்து ஒருவரை வேலை வாங்கும்போது சம்பந்தப்பட்டவருக்கு வரும் உற்சாகமும், நம்பிக்கையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நம்மை ஆதரிக்க, தட்டிக் கொடுக்க, உற்சாகப்படுத்த ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு ஒருவருக்கு வந்து விட்டால், அவர்களிடமிருந்து "பெஸ்ட்" மட்டுமே வரும்.  அதேபோல கற்றுக் கொடுக்கும்போது கிடைக்கும் திருப்தி உணர்வுகளை விவரிக்க வார்த்தையே இருக்காது. அதையெல்லாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.. அனுபவிக்க வேண்டும்.. துரதிர்ஷ்டவசமாக அந்த அனுபவம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

உழைத்துச் சம்பாதித்த பணத்தை விட, நான் சேர்த்த மிகப் பெரிய சொத்து இந்த நட்பும், அன்பும்தான்... அந்த உணர்வு கொடுத்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது.  ஒவ்வொரு நட்பையும் பெருமையாகவும், பேரின்பமாகவும் கருதுகிறேன்.

இந்த கொரோனா காலத்தில் ஒவ்வொருவரும் சந்தித்த அனுபவங்களை அவர்களுக்குள்ளாகவே வைத்துக் கொண்டார்கள்.. அல்லது அவர்களது குடும்பத்தோடு அது முடிந்து போய் விட்டது.. ஆனால் நான் நேரில் பார்த்த ஒவ்வொரு அனுபவத்தையும் எழுத்தில் கொண்டு வர விரும்பினேன்..  அரசு மருத்துவமனைகளில் கொட்டிக் கிடக்கும் பரிவையும், அன்பையும் விவரிக்க விரும்பினேன்.. என்னால் முடிந்த அளவுக்கு நான் சந்தித்த அனுபவங்களைக் கொடுத்து விட்டதாக உணர்கிறேன்.. எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடியே சொல்லியிருப்பதால் இது கதை போல இல்லாமல், ஒரு "டாக்குமென்டரி" உணர்வையும் கூட சிலருக்குக் கொடுத்திருக்கலாம். செயற்கைப் பூச்சை இதில் கலக்க நான் விரும்பவில்லை.. அப்படியே தந்திருக்கிறேன்.. பெயர் மாற்றங்களைத் தவிர்த்து நான் இதில் சொன்ன அனைத்துமே உண்மையான உணர்வுகள்.

எனது மனைவி சொல்வார் - எத்தனையோ பேரை கொரோனா பலி கொண்டும் கூட அதிலிருந்து பல ஆயிரம் பேர், லட்சம் பேர் மீண்டிருக்கிறார்கள். இதெல்லாம் கடவுளின் செயல். நமக்கும் கூட இது வந்து அதிலிருந்து நல்லபடியாக மீண்டெழவும் அந்த கடவுள் சக்திதான் காரணம்.. நமக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து மீளும் தைரியத்தையும், மன திடத்தையும் கடவுள் கொடுப்பார்" என்றார். அவரது நம்பிக்கையை நான் எப்போதும் தடுப்பதில்லை. 


எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. ரொம்ப மனசு சரியில்லாமல் போனால் அப்பாவை நினைத்துக் கொள்வேன்.. தன்னம்பிக்கை அதிகம்.. அந்த தன்னம்பிக்கைதான் ஒவ்வொரு சோதனையிலிருந்தும் என்னை புடம் போட்ட தங்கம் போல மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது. எனக்கான சில அடையாளங்கள் அழிக்கப்பட்டபோது, புதிய அடையாளங்கள்  தானாகவே பிறந்து வந்து என்னை உற்சாகமூட்டியது.. என் மிகப் பெரிய பலமும் அதுவே.. யாரும் இல்லாமல் சுயம்புவாக வந்து வளர்ந்தவன் நான். தேவையில்லாத வம்புகளுக்கும் போவதில்லை. வம்பே வந்தாலும்.. அதை அன்பாக மாற்றவும் தயங்குவதில்லை. நம்ம கேரக்டர் அப்படி.

உறவுகளுடன் எப்போதும் நெருக்கமாக இருங்கள்.. நட்புக்கு மரியாதை கொடுங்கள்.. முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள்.. அன்பு காட்ட தயங்காதீர்கள்.. தட்டிக் கொடுக்க யோசிக்காதீர்கள்.. பாசம் காட்டுவதால் எந்தப் பாதகமும் நமக்கு வந்து விடப் போவதில்லை..  எல்லோரும் 100 வருடமா வாழ்ந்து விடப் போகிறோம்... இல்லை.. இருக்கும் வரை நாம் சந்தோஷமாக இருப்பதை விட நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களை சந்தோஷப்படுத்திப் பாருங்கள்.. அதற்கு இணை எதுவுமே இல்லை... வெறுப்பையும், துவேஷத்தையும், துரோகங்களையும் தூக்கிப் போடுங்கள்.. அதெல்லாம் கால் செருப்புக்குக் கூட சமம் இல்லை.

ஒன்று முடிந்தால் இன்னொன்று ஆரம்பிக்கும்...  உறவுகளுக்கு முடிவு வரலாம்.. ஆனால் உணர்வுகள் என்றுமே தொடர் கதைதான்.. என்னுடைய உணர்வுப் பயணமும் எப்போதும் தள்ளாடாமல் தளராமல்  தொடரும்.. இந்த தொடருக்கு நான் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்தது என் மனதுக்கு மிகப் பெரிய திருப்தியைக் கொடுத்தது. இது எனது 2வது தொடர்.. பாதியில் நின்று போயுள்ள முதல் தொடரை மீண்டும் தொடங்க இது நம்பிக்கைக் கொடுத்துள்ளது. விரைவில் மீண்டும் எனது எழுத்துகளுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.. இந்த 15 நாட்களும் காத்திருந்து படித்த ஒவ்வொருவருக்கும் எனது அன்பும், நன்றியும்.

மீண்டும் சந்திப்போம்.

(எனது இந்த தொடரை எங்களை விட்டு சமீபத்தில் மறைந்த, எங்கள் உணர்வுகளிலும், நினைவுகளிலும் நீங்கா இடம் பிடித்துள்ள அன்புச் சகோதரிகள் லலிதா மற்றும் சங்கீதாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.)

Comments

Popular posts from this blog

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)

இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன்.  செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான்.  அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக. ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை. "நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா" "நல்லாருக்கேன் சார்.. புது

"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)

 "என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?" லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது. கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக.