விக்கிபீடியாக்கள், சேட்(ஜிபிடி)டன்கள், ஜெமினி(கணேசன்கள்) வருவதற்கு முன்பு, நடமாடி வந்த ஒரு டிஜிட்டல் மூளைக்காரர். எந்த விவரம் கேட்டாலும் கண்ணை மூடி சில நொடி யோசித்து, கண்ணைத் திறக்காமலேயே கடகடவென அவரது வாய் உதிர்க்கும் தகவல்களைக் கேட்டு பயந்து போயிருக்கிறேன். "என்ன சுதா சாப்பிட்டீங்களா.. சோறு முக்கியம்.. சாப்பிடாம வேலை பார்க்காதீங்க.. ஏன்னா வேலையை ஆரம்பிச்சுட்டா சாப்பிட டைம் இருக்காது".. என்று அவருக்கே உரிய பாணியில் சிரித்தபடி கேட்டது இப்போதும் மலர்ந்த நினைவாக இருக்கிறது.. ஆனால் அவர் ஒழுங்காக சாப்பிட மாட்டார். வேலை வேலை வேலை.. இதைத் தவிர வேறு எதையுமே அறியாதவர் அவர். தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சென்னையில் உள்ள சேவல் பண்ணையிலேயே (மேன்சன்) கழித்தவர். எனது ஆரம்ப கால பத்திரிகையாளர் வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களில் இவரும் ஒருவர். மாலைமுரசு அலுவலகத்தில் ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய போதிலும் கூட இவர் ஏற்படுத்திய தாக்கம் இதோ இப்போது இந்த அஞ்சலியை எழுதும் வரையிலு்ம் கூட வீரியத்துடன் உலவிக் கொண்டுள்ளது. மெஷின்களிடம் வேலையைக் கொடுத்து விட்டு மூளையை தூக்கி மூலையில் போட்டு விட...