விக்கிபீடியாக்கள், சேட்(ஜிபிடி)டன்கள், ஜெமினி(கணேசன்கள்) வருவதற்கு முன்பு, நடமாடி வந்த ஒரு டிஜிட்டல் மூளைக்காரர்.
எந்த விவரம் கேட்டாலும் கண்ணை மூடி சில நொடி யோசித்து, கண்ணைத் திறக்காமலேயே கடகடவென அவரது வாய் உதிர்க்கும் தகவல்களைக் கேட்டு பயந்து போயிருக்கிறேன்.
"என்ன சுதா சாப்பிட்டீங்களா.. சோறு முக்கியம்.. சாப்பிடாம வேலை பார்க்காதீங்க.. ஏன்னா வேலையை ஆரம்பிச்சுட்டா சாப்பிட டைம் இருக்காது".. என்று அவருக்கே உரிய பாணியில் சிரித்தபடி கேட்டது இப்போதும் மலர்ந்த நினைவாக இருக்கிறது.. ஆனால் அவர் ஒழுங்காக சாப்பிட மாட்டார். வேலை வேலை வேலை.. இதைத் தவிர வேறு எதையுமே அறியாதவர் அவர். தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை சென்னையில் உள்ள சேவல் பண்ணையிலேயே (மேன்சன்) கழித்தவர்.
எனது ஆரம்ப கால பத்திரிகையாளர் வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களில் இவரும் ஒருவர். மாலைமுரசு அலுவலகத்தில் ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய போதிலும் கூட இவர் ஏற்படுத்திய தாக்கம் இதோ இப்போது இந்த அஞ்சலியை எழுதும் வரையிலு்ம் கூட வீரியத்துடன் உலவிக் கொண்டுள்ளது.
மெஷின்களிடம் வேலையைக் கொடுத்து விட்டு மூளையை தூக்கி மூலையில் போட்டு விட்டு முடங்கிப்போன பலருக்கு இவர் ஒரு மிகப் பெரிய ஆச்சரியமாகத்தான் இருப்பார்.
மொழிபெயர்ப்புக் கலையை இவரிடமிருந்தும் நான் கற்றுக் கொண்டேன். ஆங்கிலத்தில் உள்ள செய்தியை பார்த்த வேகத்தில் அப்படியே மொழிபெயர்த்து சொல்லக் கூடியவர். தலைப்பு பெரிதாக இருக்கிறது.. சுருக்குங்கள் என்றால் அடுத்த நொடியே புதுத் தலைப்பு அவரிடமிருந்து பிறக்கும்.
சமயோஜிதம், வேகம், விவேகம், புத்திசாலித்தனம், நிதானம், அறிவை முறையாகப் பயன்படுத்தக் கூடிய திறமை அவரது அடையாளங்கள்.
ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையே மூளையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதுதான். அது ஒரு டிரங்குப் பெட்டி போல.. எல்லாவற்றையும் அதில் போட்டு வைத்திருக்க வேண்டும். தேவைப்படும்போது, தேவைப்படுவதை தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். தேடி எடுக்கும் திறமை இருக்க வேண்டும். அது அவரிடம் இருந்தது.
நல்ல சிந்தனையாளர், மார்க்சிஸம், மானுடம் என பல தலைப்புகளில் இவர் பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே இருப்பார். இதழியல் வாழ்க்கையே போதும் என்று இல்லற வாழ்க்கைப் பக்கம் திரும்பாதவர்.
போய் வாருங்கள் முருகேசன் சார்.. உங்களிடமிருந்தும் கற்றுக் கொண்டது இன்னும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.. அதற்கு நன்றி.
அறிவழகன்
Comments