Skip to main content

ஆர்ட்டிகிள் 15.. அப்படியே எடுப்பாங்களா.. இந்தி சூடு குறையாமல்?

இந்தியில் அவ்வப்போது நல்ல சினிமாக்கள் வருகின்றன. கிட்டத்தட்ட மலையாள சினிமாவுக்குப் போட்டியான படங்களை  ஆங்காங்கே பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட அபூர்வ படங்களில் ஒன்றுதான் ஆர்ட்டிகிள் 15.

ஆயுஷ்மான் குராணா நடிப்பில் வெளியான ஆர்ட்டிகிள் 15 படமானது, 2 தலித் சிறுமிகளின் கொடூர பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குறித்த கதை. வட இந்தியாவில் ஜாதித் தீயின் கொடூர நாவுகளில் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது.

இந்தப் படத்தைத்தான் தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். 

Article 15 என்றால் என்ன.. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15 என்ன  சொல்கிறது என்றால், ஜாதி, இனம், மொழி, பிறப்பிடத்தின் அடிப்படையில் யாரும், யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல.. அனைவரும் சமமே...  இந்த கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை பின்னியுள்ளனர்.

ஒரு குக்கிராமம்.. ஜாதி வெறியின் உச்சத்தில் உழன்று கிடக்கும் கிராமம். உயர்ந்த ஜாதியினரின் அடிமைகள் போல பட்டியலின மக்கள் நடத்தப்படுகின்றனர். அன்ஷு நெஹரியா என்பவனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிறுமி ஒருவர் 3 ரூபாய் கூலியை உயர்த்திக் கொடுக்குமாறு கேட்க அவரையும், அவரது 2 சகோதரிகளையும் கடத்திச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்கிறான். அதில் இரு சிறுமிகளை கொடூரமாக கொலை செய்து தூக்கில் தொங்க விடுகிறான். இன்னொருவரை காட்டுக்குள் கொண்டு போய் போட்டு விடுகிறான். இந்த  சிறுமிகள் என்பதால் இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றுகிறான் அன்ஷு.

அந்தக் கிராமத்திற்கு போலீஸ் அதிகாரியாக வரும் அயான் ரஞ்சன், இந்த வழக்கில் தீவிரம் காட்டுகிறார். ஆனால் அவருக்கு ஜாதி வெறியர்கள் மூலமாக பலவிதங்களில் நெருக்கடி வருகிறது. உடன் வேலை பார்க்கும் காவலர்களே, எதுக்கு சார் வீண் பொல்லாப்பு,, நீங்க விசாரிட்டு போய்ருவீங்க.. ஆனால் நாங்க இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்,  ஆணவக் கொலைன்னு அப்பாவைக் கைது பண்ணிட்டோம். கேஸை முடிச்சுடலாம் என்று ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் புறம் தள்ளும் ரஞ்சன், காணாமல் போன பூஜாவை கண்டுபிடித்து மீட்கிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படம் முழுக்க ஜாதியின் கோர முகத்தை துகிலுரித்திருப்பார்கள். இன்னமும் கூட உ.பி, பீகார் என பல வட மாநிலங்களில் தலைவிரித்தாடும் ஜாதியக் கொடுமைகளை இப்படத்தில் அப்பட்டமாக காட்டியிருப்பார்கள் (இதில் வரும் பல சம்பவங்கள் நம்ம தமிழ்நாட்டிலும் கூட இன்னும் இருக்கத்தான் செய்கிறது). படத்தில் பல ஜாதிகளின் பெயர்களை தைரியமாக பகிரங்கமாக வெளியே கூறிப் பேசியிருப்பார்கள்.. மிகவும் பாராட்டுக்களைக் குவித்த படம் ஆர்ட்டிகிள் 15.

இந்தப் படத்தை எப்படி தமிழில் கொண்டு வரப் போகிறார்கள் என்ற பெரும் கேள்வி எழுகிறது. தமிழ் சினிமா இதுவரை ஜாதியக் கொடுமை குறித்து ஆக்கப்பூர்வமாகவோ, உருப்படியாகவோ அல்லது தைரியமாகவோ எதையும் பேசியதில்லை. ஒன்று பொத்தாம் பொதுவாக எடுப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு  ஜாதியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அதிலேயே வில்லனையும், ஹீரோவையும் உருவாக்கி சேப்டியாக படம் எடுத்துக் கொள்வார்கள். இதுதான் ஜாதி குறித்த நம்ம ஊர் சினிமாக்களின் நிலவரம்.

இப்படிப்பட்ட நிலையில் எல்லா சாதிய வெறியர்களையும் பகிரங்கமாகவே கிழித்துத் தொங்க விட்ட ஆர்ட்டிகிள் 15 படத்தை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை விட முக்கியமாக யானைக் கட்சி, சைக்கிள் கட்சி, தாமரைக் கட்சி என்று பகிரங்கமாகவே முக்கிய அரசியல் கட்சிகளை கிழித்திருப்பார்கள்.  அந்த துணிச்சலான காட்சிகளை தமிழில் எப்படி வைக்கப் போகிறார்கள் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு உள்ளது.. நியாயப்படி பார்த்தால் சூரியக் கட்சி, இலைக் கட்சி, பானைக் கட்சி, மாம்பழக் கட்சி என்று  சொல்ல வேண்டும்.. சொல்வார்களா என்று தெரியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் முன்பு வெறும் நடிகராக இருந்தார். ஆனால் இப்போது ஆளுங்கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருக்கிறார், சட்டசபை உறுப்பினராக இருக்கிறார்.. கூடவே மக்கள் செல்வாக்கையும் பெற்றுத் திகழ்கிறார். அப்படிப்பட்டவர் பேசப் போகும் கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே செய்கிறது. ஆயுஷ்மான் குராணா இந்தப் படத்தில் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். அதை அப்படியே உதயா செய்தால் கூட போதும் மிகப் பெரிய படமாக இது உருவாகி விடும். இந்தப் படத்தை ஒரிஜினல் கதையை சீர்குலைக்காமல் அப்படியே எடுத்தால், நிச்சயம் உதயநிதிக்கு இது மிகப் பெரிய பிரேக்காகவும் அமையலாம்.

Comments

Popular posts from this blog

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)

இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன்.  செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான்.  அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக. ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை. "நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா" "நல்லாருக்கேன் சார்.. புது

"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)

 "என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?" லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது. கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக.