நாயகன் படத்துக்கு இப்போது 34 வயசு.. அப்ப எனக்கு 16 வயசு.. ஊரெங்கும் இந்தப் படம் குறித்துதான் பேச்சு. கமல்ஹாசனின் நடிப்பையும், இளையராஜாவின் இசையையும் மெச்சிப் பேசாத வாய்களே இல்லை. எங்கெங்கிலும் இந்தப் படம் குறித்த விரிவான விவாதங்களைத்தான் கேட்க முடிந்தது.
என் அண்ணன் இந்தப் படத்துக்குக் கூட்டிப் போயிருந்தார். படத்தைப் பார்த்தது முதல் எனக்கு சில நாட்களுக்கு எதுவுமே ஓடவில்லை. இளையராஜாவின் இசையில் கட்டுண்டு கிடந்த காலம் அது. கமல்ஹாசனின் நடிப்பென்றால் ஓடி ஓடிப் போய்ப் பார்த்த காலம். இருவரும் இணைந்த படம் என்றால் எப்படி இருக்கும்.
சீன் பை சீனாக எனது சக நண்பர்களுடன் தெரு முனையில், வீடுகளில், பள்ளியில் என மாற்றி மாற்றி விவாதித்த அந்த நாட்கள் இப்போது நினைவுக்கு வருகிறது.
நாயகன் மாபெரும் வெற்றி பெற என்ன காரணம்...?
படம் முழுக்க இசையில் வித்தை செய்திருப்பார் ராஜா. இப்படி ஒரு இசையா என்று மெய் சிலிர்க்கப் பேசியவர்கள்தான் அன்று அதிகம் (விகடன் தந்த அந்த மோசமான விமர்சனத்தைத் தவிர). படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி சீன் வரை இளையராஜாவின் இசைதான் படத்தை நகர்த்திக் கொண்டு போயிருக்கும். அது போக பிசி ஸ்ரீராம் என்ற மாயாஜாலக்காரரின் விளையாட்டு வேறு படத்தின் தரத்தை உயர்த்திக் கொண்டு போயிருக்கும்..
வசனங்கள் இன்னொரு மிகப் பெரிய பலம். பாலகுமாரன் என்ற ஜாம்பவானின் வார்த்தைகளில் அனல் பறந்ததோடு, சமூக அவலங்களும் பட்டுத் தெறித்தன.
"நாலு காசு சம்பாதிக்க நாய் மாதிரி சாகணும்
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை
நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா"
கமல்ஹாசனுக்கும் சரண்யாவுக்கும் இடையிலான வசனங்கள், வாப்பாவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான வசனங்கள், வேலு நாய்க்கருக்கும் மகளுக்கும் இடையிலான வசனங்கள்.. அந்த "பாபா மர்கயா".. வசனங்களும் சரி, அந்த வசனங்களுக்குப் பலம் கொடுத்த இசையும் சரி.. சிம்ப்ளி பிரில்லியன்ட்.
நாயகன் படத்தின் பாடல்கள் ஒரு கிளாஸ் என்றால் பின்னணி இசை மாஸ் ரகம்.. இன்று வரை பிரமிக்க வைக்கிறது. இப்படி ஒரு தேர்ந்த இசையை ராஜாவைத் தவிர வேறு யாராலும் கொடுக்கவே முடியாது. நாயகன் படம் மணிரத்தினத்திற்கு மிகச் சிறந்த அடையாளமாக மாற இவர்கள் எல்லோரும் பக்க பலமாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
34 வருடங்கள் கடந்தோடியும் கூட நாயகன் இன்றும் பேசப்படுகிறான்.. அதன் இசைக்காகவும், வசனத்திற்காகவும் என்றால்.. காலத்தைக் கடந்த படங்களின் வரிசையில் இந்தப் படமும் என்றோ இணைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.
1987ம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வந்த படம் இது. முதலில் கமல்ஹாசனிடம் வேறு கதையைத்தான் சொல்லியிருந்தார் மணிரத்தினம். ஆனால் கமலுக்கு அது பிடிக்கவில்லை. பிறகுதான் நாயகன் கதையைச் சொன்னார். அது மும்பை தாதா வரதராஜ முதலியாரின் கதையைத் தழுவியது. கூடவே ஆங்கில ஹிட் படமான தி காட்பாதர் படத்தின் சாயலும் இதில் இருக்கும். இருப்பினும் கமல்ஹாசனும், மணிரத்தினமும் இணைந்து இதை தமிழ் மயமாக்கி விட்டனர்.. இளையராஜாவும் இதில் இணைய படம் வேறு லெவலுக்குப் போய் விட்டது.
இந்தப் படத்தில் நிறைய விஷயங்கள் சிலாகிக்கப்பட்டன. டெல்லி கணேஷின் ரோல், ஜனகராஜின் அற்புதமான நடிப்பு.. வாப்பாவின் தத்ரூபம், தாராவின் கேரக்டர், கார்த்திகாவின் பாத்திரம்.. சின்னதாக வந்தாலும் அசத்தி விட்டுப் போன நிழல்கள் ரவி.. டினு ஆனந்த்தின் கதாபாத்திரம்.. இப்படி நிறைய.
இந்தப் படத்திற்குப் பிறகு எத்தனையோ காட்பாதர் டைப் படங்கள் வந்தாலும், அதில் எல்லாம் சற்று உயர்ந்துதான் நிற்கிறான் நாயகன்.
Comments