ஸொமேட்டா - இந்தி விவகாரம் வெடித்துக் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த பின்னணியில் எனது பெங்களூர் டைரியை சற்றே புரட்டிப் பார்த்தேன்...
தமிழனாக இருப்பதை விட சுத்தமான தமிழில் பெயர் வைத்துக் கொண்டோர்தான் வாழ்க்கையில் பல சிரமங்களைச் சந்திப்பார்கள்.. அதை அனுபவப் பூர்வமாக பெங்களூரில் கண்ட காலம் அது. ஒரு தமிழனாக எனக்கு அங்கு பெரிய சங்கடங்கள் வந்ததில்லை.. தங்கமான உள்ளங்களைத்தான் நிறைய பார்த்திருக்கிறேன்.. ஆனால் எனது "பெயர்"தான்.. அந்தப் பெயர்தான்.. அதுதான்.. அதை நினைச்சாதான்!
சற்றேறக்குறைய 25 வருடங்களுக்கு முன்பு நடந்த சில மொழி களேபரங்கள் குறித்த ஒரு சுவாரஸ்ய தொகுப்பு.. உங்களுக்காக!
"கான், அறிவழகா.. இரண்டு பேரும் பெங்களூர் ஆபீஸ்ல வேலை பார்க்கறீங்களா.. அங்கு டெஸ்க் வீக்கா இருக்கு.. சிலரை ரிப்பேர் பார்க்கணும்.. போறீங்களா.. உங்க ஒப்பீனியன் என்ன?"
ஆ.. பெங்களூரா.. செம கூலா இருக்குமே.. போகலாமே.. இதுல என்ன பிரச்சினை இருக்கப் போகுது... எடிட்டர் ஆர்.எம்.டி. சொன்னவுடன் மனதில் உதித்த எண்ணம் இது. மதுரை, சென்னையைத் தாண்டி வேறு எந்த வெளியூரைப் பற்றியும் கனவு கூட கண்டிராத "கழுதைகளுக்கு" அது ஒரு ஸ்வீட் செய்தியாகவே தெரிந்தது.
"ஓகே சார்.. போறோம்"
"குட்.. சம்பளம் உயர்த்திக் கொடுப்பாங்கப்பா.. இதே சம்பளம் இருக்காது.. போய் ஒழுங்கா வேலை பாருங்க.. டெய்லி எனக்கு ரிப்போர்ட் தரணும்.. அப்புறம் போய்ட்டு மறக்காம டூவீலர் வாங்கிருங்க.. அது மஸ்ட்.. இல்லைன்னா வேலையை விட்டுத் தூக்கிருவேன்".. அத்தோடு விடலை.. "இப்படியே கிளம்பிப் போய்ராதீங்க.. கொஞ்சம் டிரஸ் வாங்கிக்கங்க.. ஸ்வெட்டர் வாங்கிக்கிங்க.. அங்க ரொம்ப குளிரும்.. பேர் பாடியோட திரிய முடியாது.. அட்வான்ஸ் வேணும்னா சொல்லுங்க.. ஆபீஸ்ல சொல்றேன்" என்று பாசத்தையும் கூடவே குழைத்துக் கொடுத்தார்.
இப்படியாக சில பல கண்டிஷன்களுடன் எங்களது பெங்களூர் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தார் எங்கள் எடிட்டர். டூவீலர் மேட்டர் மட்டுமே சற்று இடித்தது. மற்றபடி எங்களுக்கு எல்லாமே ஓகேதான்.. கல்யாணம் ஆகாத மொட்டப் பசங்களாச்சே... பெங்களூர் போக கசக்குமா என்ன!
ஒரு வழியாக பெங்களூர் கிளம்பியாச்சு.. போகும் வழியெல்லாம் ராத்திரி முழுக்க தூங்கவே இல்லை.. அங்க போய் என்ன பண்றது, எங்கெல்லாம் சுத்திப் பார்க்கலாம், விதான் சவுதா சுத்திப் பார்க்கணும்.. பார்க்கெல்லாம் நிறைய இருக்குமாமே.. அதெல்லாம் பார்க்கணும்.. இப்படி வேலையைத் தவிர மற்ற எல்லா விஷயத்தையும் அலசிக் கொண்டே பயணம் தொடர்ந்தது. பெங்களூரை ரயில் நெருங்கும்போது எல்லோரும் பெட்டியைத் திறந்து ஸ்வெட்டரைப் போடத் தொடங்கினர். நாங்களோ அவர்களை விசித்திரமாக பார்த்து விட்டு எங்களுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டோம்.. "ஒரு குளிர் தாங்க முடியாதாய்யா... அட என்னய்யா" என்று எங்களுக்குள் எகத்தாளமாக நகைத்துக் கொண்டோம்.
கரெக்டாக பெங்களூர் ரயில் நிலையங்கள் ஒவ்வொன்றாக வர வர.. வந்துச்சு பாருங்க ஒரு குளிர்... தாவாங்கட்டை ஆட ஆரம்பித்து விட்டது. பல்லெல்லாம் கிடுகிடுவென தந்தி அடிக்க.. "யோவ் பாய்.. என்னய்யா இப்படி குளிருது" என்று நண்பனைக் கேட்க.. சவுண்டைக் காணோம்.. என்னாச்சுன்னு அவனைத் திரும்பிப் பார்த்தால், பதிலளிக்கக் கூட இயலாத நிலையில் நடுங்கிக் கொண்டிருந்தான் நண்பன்.." யோவ் எனக்கும் குளிருதுய்யா" என்று மெல்ல பதில் வந்தது!
சக பயணிகள் சென்டிரலில் ஏறியபோதே எச்சரித்திருந்தார்கள்.. தம்பி ஸ்வெட்டர்லாம் வச்சிருக்கீங்களான்னு.. நாங்கதான் பகுமானமாக.. அதெல்லாம் எங்களுக்குத் தேவைப்படாது சார்.. நாங்க பார்க்காத குளிரா என்று சொல்லியிருந்தோம்.. இப்போது அவர்கள் எல்லாம் எங்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க.. "காலக் கொடுமைடா கருத்த ராவுத்தா" கதையாக.. எழுந்து போய் அங்குமிங்கும் நடமாடி குளிரைப் போக்க முயற்சித்தோம்.. ஆனாலும் அந்தக் குளிரும் கூட சுகமாகவே இருந்தது.
அதிகாலையில், கடும் குளிரில் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இறங்கி வெடவெடத்துக் கொண்டிருந்த எங்களைக் கூட்டிக் கொண்டுப் போக ரவி என்ற நண்பர் வந்திருந்தார், அவரோட பூர்வீகம் தஞ்சாவூர். (இப்போது அவர் காலமாகி விட்டார்) . அவரைப் பார்த்தால் நாசாவிலிருந்து வந்த அஸ்டிரானாட் போல போல தெரிந்தது... "ஃபுல் ஜெர்க்கின்".. தலையில் குல்லா போல போட்டிருந்தார்.. கண்ணு, மூக்கு, வாய் மட்டும்தான் தெரிந்தது.
எங்களது "ஆட்டத்தைப்" பார்த்து விட்டு ஸ்வெட்டர் போட்டுக்கலையா என்று அவர் கேட்ட கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை.. வாயைத் திறந்தால்தானே பேசவே முடியும்... அதுதான் குளிரில் ஒட்டிப் போய்க் கிடக்கே!
கர்நாடக முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அருகில் "குமார கிருபா" என்ற அரசு கெஸ்ட் ஹவுஸ் அப்போது இருந்தது (இப்போது இதை ஸ்டார் ஹோட்டலாக்கி விட்டார்கள்). அந்த கெஸ்ட் ஹவுஸில்தான் தங்கினோம்.. எங்களுக்கு முன்பே அங்கு வந்திருந்த துணை செய்தி ஆசிரியர் ரங்கராஜுலு, குளிருடன் போராடியபடி எங்களை வரவேற்றார். மங்கி கேப்புடன் படு வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளித்தார் அவர்.
அந்த இடத்திலிருந்து "அறிவழகன்" என்ற நான் பல சோதனைகளை சந்திக்க ஆரம்பித்தேன். எனது பெயரை தமிழர் அல்லாதோர் யாருமே ஒரு முறை கூட முழுமையாக, சரியாக உச்சரித்ததே இல்லை. அந்த ஹோட்டலில் எனது பெயரைப் பதிவு செய்தபோது அங்கிருந்த ஊழியருக்கு எனது பெயரை "ஸ்பெல்" செய்யத் தெரியவில்லை. "Harivlagan" இப்படி அவர் உச்சரித்தார். இல்லை இல்லை ari-va-la-gan என்று நான் பிரித்துப் பிரித்து சொன்ன பிறகும் கூட அவருக்கு சரியாக சொல்ல வரவில்லை.. "hari-v-la-gan" என்று அவர் பங்குக்கு எனது பெயரை பிரித்து மேய.. அட வாயிலே வசம்பு வச்சுத் தேய்க்க என்று நானும் விட்டு விட்டேன்.
இப்படியாக எனது பெயரின் ஒரு பாதி "ஹரி"யாக மாற்றம் கண்டது. அதன் பிறகு அலுவலகத்திற்குப் போனபோதும் அங்கும் சந்தித்த ஒவ்வொருவரும் ஹரிவழகன் என்றுதான் சொல்லத் தொடங்கினர்.. சரி.. இதுவும் நல்லாதானே இருக்கு.. ஒரு எழுத்துதானே மாறிப் போயிருக்கு போய்ட்டுப் போகுது என்று நானும் தாராள மனசுடன் விட்டுத் தர, பெரும்பாலான பேருக்கு நான் இன்று வரை "ஹரி"தான்.
கன்னடக்காரர்களுக்கும், மலையாளிகளுக்கும் கூட எனது பெயரை ஓரளவு புரிய வைத்து விட முடியும். ஆனால் இந்தி பேசுவோருக்கு எனது பெயரை சரிவர உச்சரிக்க வைக்க கடைசி வரை முடியவில்லை. பலர் என்ன "Ariv" என்று கூப்பிடுவார்கள்.. முழுப் பெயரை சொல்வது கடினம் என்பதால்.. சிலர் "Hariv" என்று புது விதமாக கூப்பிடுவார்கள். சிலர் "Algan" என்று ஹாலிவுட் ஸ்டைலில் கூப்பிடும்போது அடடே இப்படியெல்லாம் நம்மை "அழகுபடுத்தி"க் கொள்ளலாம் போலேயே என்று நானே புளகாங்கிதப்பட்டுக் கொண்ட மொமன்டுகள் ஏராளம்.!
ஆனால் இப்படி எனது பெயர் பலவிதமாக சித்திரவதைப்பட்ட போதிலும் கூட எனது பெயருக்காக நான் ஒரு போதும் வருந்தியதில்லை. காரணம், எனக்கு எனது பெயரை ரொம்பப் பிடிக்கும். எனது வீட்டில் எல்லோருக்குமே சுத்தமான தமிழ்ப் பெயர்கள்தான்.. நல்ல வேளையாக நான் மொத்தப் பேரையும் பெங்களூருக்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ கூட்டிப் போனதில்லை.. போயிருந்தால்.. எங்க பெயரையெல்லாம் கேட்டு.. நாங்க சந்தித்த எத்தனை பேர் மயங்கி விழுந்திருப்பார்களோ !
தமிழ்நாட்டில்தான் தனித்துவமான பெயர்கள் அதிகம் உண்டு. இந்தப் பெயர்களுக்கு தமிழ்நாட்டுக்குள் நல்ல மரியாதை கிடைக்கும் என்பதும் உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டை தாண்டி வெளியே போய் விட்டால்தான் தெரியும்.. நம்ம பெயரை எந்த அளவுக்கு உச்சரிக்க கஷ்டப்படுகிறார்கள் என்று. சுத்தமான தமிழ்ப் பெயர் வைத்துக் கொண்ட பலரும் இந்த சங்கடங்களை சந்தித்திருக்கக் கூடும். ஸொமேட்டோ விவகாரத்தைப் பார்த்தபோது இந்த பழைய நினைவுகள் வந்து உதடுகளில் புன்னகையை வர வைத்தது.
அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் ராஜஸ்தான் பக்கம் போய்ப் பார்க்கணும்.. நம்ம பெயரை எப்படி மாத்தி சொல்றாங்கன்னு!
Comments