உன் விரல் உரசியபொழுது
மண்ணைத் தொட்ட அந்த மழை
என் மனதைக் கிளறிய பெரு மழை!
கொட்டும் துளிகளுக்கு மத்தியில்
பத்து விரல்களும் கோர்த்தபடி
பத்திரமாய் பார்த்துப் பார்த்து
தாவித் தாவி நாம் நடந்தபோது
மழையும் நம்மை ரசித்திருக்கும்
நாம் மழையை ரசித்தது போல
தூரத்தில் தெரிந்த வெளிச்சப் புள்ளி
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி
பளீரென வெடித்த மின்னல் சிரிப்புடன்..
கால் நடக்க..
தூரம் கடந்தும்.. மழையின் துளிகளில் கலந்து..
மறக்க முடியாத மழைக்காலம்..!
இருவருக்கும் இடையில் பெய்த மழையில்
நனைந்து கிடந்தது நம் காதல்
வான் மழை வரும்பொழுதெல்லாம்..
நினைவுகளும் சடசடவென
மெல்ல மெல்ல.. சொட்டுச் சொட்டாய்...
துளித் துளியாய் பருகியபடி..
ஒவ்வொரு துளியிலும் நம் முகம் பார்த்தபடி!
காதலின் துணைக்கோள்தான் இந்த மழையா?
நம் காதலைச் சுற்றிச் சுற்றி வருகிறதே!
மழை வரும்போதெல்லாம் நீயும் வந்து விழுகிறாய்
மழைத் துளி என் கன்னம் தொடுவதற்குள்
நீ என் உள்ளம் நனைத்து விடுகிறாய்
மின்னலின் வேகத்தில்!
முன்பு போல மழையில் நனைவதில்லை
ஆனாலும் உள்ளுக்குள் பெய்யும் மழையில்
எப்போதும் நனைந்தபடி.. நினைவலைகளில் நீந்தியபடி..
கா(கி)தல் கப்பலை ... மிதக்க விட்டபடி!
Comments