ஒரு கதவு காத்திருந்தது
அதன் பெயர் மரணம்"
அவர்தான் லூயிஸ் கிளக்.. ஆம்.. மரணத்தையும் கூட அழகாக வர்ணித்தவர் லூயிஸ்.. அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் க்ளூக், இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர்.
77 வயதாகும் லூயிஸ், நியூயார்க்கைச் சேர்ந்தவர்.. அவர் தொடாத தலைப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கவிதைகளில் ஊறித் திளைத்தவர். அவரது கவிதைகளை ரசிக்க மட்டுமில்லை.. அறிவுப்பூர்வமாகவும் நுகர முடியும்.. அதுதான் லூயிஸ் டச்!
தனிமை, குடும்ப உறவுகள், விவாகரத்து, ஏன் மரணத்தையும் கூட தனது கவிதைகளால் அலங்கரித்துள்ளார் லூயிஸ். இவரது கவிதைகளில் ரோம் மற்றும் கிரேக்க கலாச்சாரங்களின் சாயல்களும் மெல்ல இழையோடியபடி காணப்படும்.
ஆரம்ப காலத்தில் அவரது கவிதைகளில் நிறைய காதல் தோல்வி குறித்துதான் இருந்தன. குடும்ப உறவுகளில் ஏற்பட்ட சீர்குலைவுகள், மனம் உடைந்து போய் குமுறிய நாட்கள், வாழ்வதற்கான வழிகளே புலப்படாமல் சிரமப்பட்டது என்று தன்னை மையப்படுத்தியே நிறைய கவிதைகளை வடித்து வந்தார் லூயிஸ்.. ஆனால் பின்னாட்களில் அவரது கவிதைகளின் பயணம் பாதை மாறியது.. ஆனாலும் கூட அதிலும் துயரங்களே மிகையாக தெறித்து விழுந்தன.
"எனக்கு நினைவிருக்கிறது
தலைக்கு மேலே சத்தம்.. பைன் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன..
பிறகு ஒன்றுமில்லை..
பலவீனமான சூரியன்
வறண்டு கிடக்கும் நிலப்பரப்பை மேலும் வறளச் செய்தபடி!
அவரது ஒவ்வொரு படைப்பும் ஒரு விதமான தாக்கத்தின் பின்விளைவே.. அவரது ஒவ்வொரு கவிதையும் ஏதாவது தாக்கத்தை நமக்கும் உணர்த்திச் செல்லத் தவறாது.. அப்படித்தான் அவற்றை லூயிஸ் படைத்திருப்பார்.. Meadowlands.. இது அவரது படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.. ஒரு ஆதி கால பூமியுலாவாசிக்கும், அவனது மனைவி மெடோலேன்ட்ஸுக்கும் இடையிலான காதல், அதன் பின்னர் நடந்த திருமணம்.. அந்த உறவில் ஏற்படும் உணர்வுப் பிரளயங்கள்.. என்று படிப்படியாக கொண்டு போயிருப்பார் லூயில். ரொம்பப் பிரமாதமான படைப்பு இது.
விடா நோவா என்ற நூலை ஒரே மூச்சில், தான் எழுதி முடித்ததாக கூறியுள்ளார் லூயிஸ். பல விருதுகளைப் பெற்றுக் குவித்த நூல் இது. இதைப் படிக்கும்போதே இதை நான் எந்த வேகத்தில் எழுதியிருப்பேன் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் லூயிஸ். 1999ல் வெளியான படைப்பு இது.
"வாழ்வது ரொம்ப கடினம்
இருண்ட பூமியில்
மனசாட்சியைப் புதைத்து விட்டு..!"
2009ல் வெளியான "ஏ வில்லேஜ் லைஃப்" ரொம்ப வித்தியாசமானது. ஒரு கவிதாயினியாக அறியப்பட்ட லூயிஸுக்குள் இருந்த நாவலிஸ்ட் மற்றும் சிறுகதையாளரின் தாக்கத்தை கலந்தெடுத்து பிறந்த படைப்பு இது. ஒரு கிராமத்து வாழ்க்கையை ரொம்ப அற்புதமாக இதில் விவரித்திருப்பார் லூயிஸ். அதில் அவரது வாழ்க்கையும் கூட கலந்து இழையோடியிருக்கும். இதில் கிராமத்து வாழ்க்கையை, அதன் அழகை, அதன் அவலத்தை என எல்லா உணர்வுகளையும் உள்ளது உள்ளபடி சொல்லியிருப்பார் லூயிஸ். குறிப்பாக இத்தாலியில் அழிந்து கொண்டிருக்கும் விவசாய வாழ்க்கையை அதன் துயரத்தை, தடுமாற்றத்தை அப்படி அழகுற விவரித்திருப்பார்.. படிக்கும்போதே மனதை பிசையும்.
"என் வாழ்க்கையின் மையப் பகுதியிலிருந்து
ஒரு ஊற்று பிறப்பெடுத்தது..
நீல நிறத்தில்...
கடல் மேல் கலந்து அமிழ்ந்து..."
சமகால பெண் கவிஞர்களில் லூயிஸுக்கு தனி இடம் உண்டு. இருளையும் கூட வெளிச்சம் போட்டு அழகுபடுத்திக் காட்டியவர் லூயிஸ்.. அவர் எழுதியவை என்று சொல்ல முடியாது... மாறாக ஒவ்வொரு கவிதையையும், படைப்பையும் பிரசவித்து சுமந்து வெளிக் கொண்டு வந்தவர் லூயிஸ்.. இலக்கியத்திற்கான நோபல் பரிசை லூயிஸ் தாமதமாகத்தான் வென்றார்.. ஆனால் அவரது ரசிகர்களோ அவரது படைப்புகளை பாராட்டி கொண்டாடி மகிழ தாமதம் செய்ததே இல்லை.
கவிதை வரிகள்: The Wild Iris
(ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு)
Comments