எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்லை.. வேலை கிடக்கு தலைக்கு மேல.. காலில் வெந்நீர் ஊற்றிக் கொள்ளாத குறையாக ஓடிக் கொண்டிருப்போரை இழுத்துப் பிடித்து தலையில் லேசாக ஒரு கொட்டு வைத்திருக்கிறது.. விநோதய சித்தம்... தமிழ்ப் படம்.
ஒரு அருமையான Feel Good படம்.. வழக்கமாக கருத்துக்களைப் பிழிந்து பிழிந்து ஜூஸ் போட்டுக் கொடுக்கும் சமுத்திரக்கனியை இதில் வேற லெவலில் பார்க்கலாம். படத்தை இயக்கியிருப்பவரும் அவரே.
கொஞ்சம் கேரக்டர்கள்தான். அதை வைத்து மிகப் பெரிய கருத்தை மக்களுக்குப் "பாஸ்" செய்துள்ளார் சமுத்திரக்கனி.
தம்பி ராமையாதான் கதையின் நாயகன்.. என்னால்தான் எல்லாம் நடக்கிறது.. நான் இல்லாவிட்டால் ரொம்பக் கஷ்டம்.. எனக்கு நேரமே இல்லை... என்று எப்போதும் சதா வேலையிலேயே கருத்தாக இருக்கும் நபர்தான் நம்ம தம்பி சார். அவரது மனைவியாக ஸ்ரீரஞ்சினி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள்.
ஒரு நாள் தம்பி ராமையா கோவை போய் விட்டு சென்னை திரும்பும் வழியில் மரணத்தைத் தழுவுகிறார். அதன் பிறகு நடப்பதுதான் படத்தின் கதை.. வித்தியாசமான சப்ஜெக்ட்தான். அதை பிரசன்ட் செய்த விதம்.. சபாஷ் போட வைக்கிறது.
சமுத்திரக்கனி கேரக்டர் இந்தப் படத்தில் அதிகம் பேசவில்லை.. அதுவே ஒரு பெரிய ஆச்சரியம்தான். பக்கம் பக்கமாக வசனம் பேசாமல், காட்சிகளையும், காட்சிக்கான சூழலையும் வைத்து ரசிகர்களைப் பேச வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. படம் முழுக்க "ரிச்"சாக எடுத்திருக்கிறார்கள்.. அதேசமயம், மக்களுக்கு எது "ரீச்" ஆக வேண்டுமோ அதையும் கரெக்டாக செய்து முடித்துள்ளார் சமுத்திரக்கனி.
தம்பி ராமையாவின் கேரக்டர் மூலம் மக்களுக்கு அருமையான செய்தியை கொண்டு சென்றுள்ளனர். எல்லாம் உங்களால்தான் என்று தலையில் பாரத்தை ஏற்றி வைத்துக் கொள்ளாதீர்கள். எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்.. அது நீங்கள் இருந்தாலும் நடக்கும், இல்லாவிட்டாலும் நடக்கும். உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களையும் பாருங்கள். அவர்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்.. என்ற கருத்தை சொல்லிச் சென்றிருக்கிறது இந்தப் படம்.
குழப்பமில்லாத திரைக்கதை, முகம் சுளிக்க வைக்காத காட்சிகள், சிம்பிளான வசனங்கள், எளிமையான கதைச் சூழல்.. பாடல் கிடையாது.. படம் முழுக்க அருமையாக இருக்கிறது.. படத்தின் கடைசியில் வரும் வசனம் கை தட்ட வைக்கிறது.
வழக்கமாக தமிழில் இதுபோன்ற படங்களை எடுப்போர் குறைவு.. அதை விட எடுத்ததை பார்க்க வைக்கும் வகையில் படைப்போர் அதை விட குறைவு.. எனவே இந்தப் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் தமிழிலும் இதுபோன்ற சிந்தனையைத் தூண்டு விக்கும் வகையிலான படங்கள் அதிகம் வரும்.
ஜீ 5 ஓடிடி தளத்தில் படம் இருக்கிறது.. பார்க்க வேண்டிய படம்.
Comments