தெற்கத்தி அரசியல் தமிழ்நாட்டு அரசியலில் எப்போதுமே தனி டிசைனாக இருக்கும். இங்கு முக்கியமான வாக்கு வங்கியாக இருப்பது முக்குலத்தோர் சமுதாயத்தினர்.
வடக்கில் வன்னிய சமுதாயத்தினர் பெரும்பாலும் பாமக பக்கம் இருக்கிறார்கள். அது சில நேரம் கூடவோ, குறையவோ செய்யும்.. மற்றபடி வன்னியர் வாக்கு வங்கி பாமகவை இன்னும் வலுவாகவே தாங்கிப் பிடிக்கிறது. ஆனால் முக்குலத்தோர் வாக்கு வங்கி அப்படி இல்லை.
எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவை வலுவாக ஆதரித்தது. பின்னர் திமுக கொஞ்சம் வாக்குகளை உறுவியது. திடீரென நடிகர் கார்த்திக் ஒரு அலை பரப்பினார். ஆனால் வாக்கு வங்கியை முழுமையாக சேர்ப்பதற்குள் அவர் அடித்த பல்டிகளும், செய்த கோமாளித்தனமும், அந்த வாக்கு வங்கியை வேறு பக்கம் போக வைத்து விட்டது. இப்படி யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலையில்தான் முக்குலத்தோர் வாக்குகள் இன்று வரை சிதறிக் கிடக்கின்றன.
தென் மாவட்டங்களில் வலுவாக உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினரை வழி நடத்த சரியான தலைவர் இல்லாததே இதற்குக் காரண்ம். வன்னியர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கிடைத்தது போல, ஒரு ஆணித்தரமான தலைவர் முக்குலத்தோர் சமுதாயத்திற்குக் கிடைக்கவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குப் பிறகு பல சமுதாயத் தலைவர்கள் உருவெடுத்திருந்தாலும் கூட யாரும் தனிப்பெரும் தலைவராக நிலைக்க முடியவில்லை. இதுதான் இந்த வாக்கு வங்கி சிதறிப் போய்க் கிடக்க முக்கியக் காரணம்.
இதனால்தான் திமுக, அதிமுக, பிறகு அமமுக என இந்த வாக்கு வங்கி அலை பாய்ந்தபடி கிடக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது சசிகலா தென் மாவட்டங்களின் பக்கம் தனது பார்வையைத் திருப்புகிறார். அரசியலில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் சசிகலா, ஒரு பெரிய "பிரேக்"குக்காக காத்திருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த பின்னர், அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்த சசிகலா இப்போது மெதுவாக அரசியல் களத்தில் புகுந்து வருகிறார்.
"அக்கா" ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று வழிபட்டு வந்த பிறகு அவர் சுறுசுறுப்பாக களத்தில் புகத் தயாராகி விட்டார். தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள அவர் அதற்கு கையில் எடுத்திருப்பது முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை நாளைத்தான். தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் விசேஷங்களில் ஒன்று இந்த தேவர் குரு பூஜை. அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் இந்த விழாவுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு வருவார்கள்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் கூட முக்குலத்தோர் சமுதாயத்தினர் தேவர் நினைவிடம் வந்து செல்வார்கள். கோவிலுக்கு வருவது போல இதை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். மொட்டை போடுவது, காது குத்துவது என விமரிசையாக இருக்கும். பசும்பொன் கிராமம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழாவின் எதிரொலி காணப்படும்.
இந்த நாளைத்தான் தற்போது சசிகலா கையில் எடுத்துள்ளார். ஆனால் அவர் 30ம் தேதி குரு பூஜையன்று தேவர் நினைவிடம் வரவில்லை. மாறாக, 29ம் தேதியே செல்லத் திட்டமிட்டுள்ளார். அவரது வருகையால் தென் மாவட்டங்கள் நிச்சயம் பரபரக்கும், அமமுகவினர் மட்டுமல்லாமல், அதிமுகவினரும் கூட திரண்டு வருவார்கள் என்று சசிகலா தரப்பு எதிர்பார்க்கிறது. இதற்காகத்தான் முன்கூட்டியே பாதுகாப்பு கேட்டு எஸ்பியிடம் மனுவும் கொடுத்து வைத்துள்ளது சசிகலா தரப்பு. இந்த பாதுகாப்பு கோரிக்கையை விடுத்திருப்பது அதிமுக நிர்வாகி சரவணன் என்பவர் என்பதுதான் விசேஷமே!
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை மட்டும் ஓரணியில் திரட்டி விட்டால், அதன் பிறகு அவர்கள் ஓட்டுப் போடும் கட்சியை யாராலும் அசைக்க முடியாது என்பதே எதார்த்தம். ஆனால் இதை பல தலைவர்களும் உணர மறுத்து விட்டதால்தான் இந்த வாக்கு வங்கியின் பலம் இன்னும் கூடாமல் உள்ளது. இந்த வாக்கு வாங்கி பலமாகாமல் பார்த்துக் கொள்ளும் கட்சிகளும் உள்ளன, அதற்கான உத்திகளும் அவ்வப்போது அரங்கேறுவதும் வழக்கம்தான்.
சசிகலா தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தால் நிச்சயம் தனது பலத்தை நேரிலேயே பரீட்சித்துப் பார்க்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும், அமமுகவுக்கும் தனது பலம் என்ன என்பதை உணர முடியும். இதை வைத்து அடுத்த கட்ட நகர்வுகளுக்கு அவர்கள் திட்டமிடலாம் என்று தெரிகிறது.. அவர்களுக்கு ஓ.பி.எஸ்ஸும் கை கொடுத்தால், நிச்சயம் சசிகலா - ஓபிஎஸ் கூட்டணி அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக அமையும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
ஆனால் இதெல்லாம் நடக்க "அவர்கள்" அனுமதிப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
Comments