கே டிவிக்கு 20 வயதாகிறது.. நேற்றுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது.. அதற்குள் 20 வயதைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் திரை ரசனைக்கு பெரும் தீனி போட்ட பெருமை கே டிவிக்கு நிச்சயம் உண்டு.
தமிழ் திரை ரசிகர்களின் வாழ்க்கையை மாற்றிப் போட்டதிலும் பெரும் பங்குண்டு கே டிவிக்கு. முன்பெல்லாம் தியேட்டருக்குப் போக வேண்டும் அல்லது கேசட் வாங்கிப் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற நிலைதான். அதை விட முக்கியமாக தியேட்டருக்குக் குடும்பத்துடன் போக வேண்டும் என்றால், டிக்கெட் செலவு, நொறுக்குத் தீனி செலவு, போக்குவரத்து செலவு என 500 ரூபாயாவது எடுத்து வைத்தாக வேண்டும்.
இந்த இடையூறுகளை எல்லாம் துடைத்துப் போட்டு சினிமா பார்க்கும் அனுபவத்தை மிக மிக இலகுவான ஒன்றாக மாற்றியது கே டிவி. சினிமா பார்ப்பதை சாதாரண விஷயமாக மாற்றிப் போட்டது கேடிவி. இந்த சானல் வந்த புதிதில் திரையுலகின் கடும் அதிருப்திகளையும் சம்பாதிக்கத் தவறவில்லை. ஆனால் அதையும் கூட சன் குழுமம் லாவகமாக சமாளித்தது.. கடைசியில் திரையுலகின் அன்பையும், ஆதரவையும் பெற்று கேடிவியின் வளர்ச்சி பல படி மேலே உயர்ந்தது.
கே டிவி வந்த பிறகுதான் தொலைக்காட்சிகளில் சினிமா பார்க்கும் அனுபவம் மக்களிடையே அதிகரித்தது. அதேசமயம், தியேட்டர்களுக்கும் கூட்டம் குறையவில்லை. நல்ல படம் வந்தால் நிச்சயம் மக்கள் தியேட்டர்களுக்கு செல்லவே செய்தனர். சினிமா என்பது கஷ்டமான காரியம் அல்ல என்ற புதிய பாதையை ஏற்படுத்தியது கே டிவி. இருந்த இடத்திலேயே அதிக படங்களை பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்தது கே டிவி.
ஆரம்பத்தில் 3 படம் என்ற ஆரம்பித்து இப்போது 9 படங்கள் வரை வந்து விட்டது கே டிவி. கே டிவியைப் பார்த்து பல தொலைக்காட்சி சானல்கள் அடுத்தடுத்து பிறந்தன. ஆனாலும் யாரும் கே டிவிக்கு அருகில் கூட வர முடியவில்லை. காரணம் சன் டிவி வைத்துள்ள பிரமாண்ட பட அணிவரிசைதான்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் கே டிவிதான் மக்களின் பொழுதுபோக்குக்கு மிகச் சிறந்த ஊடகமாக இருந்தது. லாக்டவுன் சமயத்தில் மக்களை மகிழ்விக்கும் பணியை கே டிவி திறம்பட செய்தது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் நாட்டு மக்களின் சினிமா பார்க்கும் அனுபவத்தை புதுமையாக மாற்றியமைத்த கே டிவியின் கதை நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.
கே டிவியின் வெற்றிக்கு அங்கீகாரமாக, அந்த சேனலின் 20வது ஆண்டையொட்டி அதன் சக போட்டி சானலான ஜீ திரை வாழ்த்து சொல்லியுள்ளது.. ஆரோக்கியமான போட்டிதான்.. வரவேற்கலாம், வாழ்த்தலாம்.
Comments