குப்பையில் கிடந்த தங்கத்தை எடுத்து போலீஸில் ஒப்படைத்து தான் அந்த தங்கத்தை விட பல மடங்கு உயர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார் மேரி என்ற பெண்மணி.
நேர்மைன்னா கிலோ என்ன விலை என்று கேட்கும் இக்காலத்தில், குறுக்குப் புத்தியுடன் மட்டுமே அலையும் மனிதர்கள் நிறைந்து விட்ட இந்தக் காலத்தில் பசும் பொன்னாக மிளிர்ந்து நிற்கிறார் திருவொற்றியூர் மேரி.
மேரி ஒரு தூய்மைப் பணியாளர். சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் துப்புறவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கவர் கிடந்ததைக் கண்டார். அதைப் பார்த்தால் குப்பை போலத் தெரியவில்லை. இதனால் சந்தேகப்பட்டுப் பிரித்துப் பார்த்தால் அதில் தங்க நாணயம் இருந்துள்ளது.
உடனடியாக சற்றும் மனம் சலனப்படாமல் அந்த பாக்கெட்டுடன் காவல் நிலையத்திற்குப் போய் போலீஸாரிடம் இது குப்பையில் கிடந்தது என்று கொடுத்துள்ளார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட போலீஸார், மேரியின் நியாயமான, நேர்மையான மனதைப் பாராட்டினர். பின்னர் விசாரணையில் அது கணேச ராமன் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்து அவரிடம் ஒப்படைத்தனர்.
மேரிக்கு இப்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தனது கையால் எழுதி மேரியைப் பாராட்டி நீண்டதொரு கடிதம் எழுதியுள்ளார். அதுவும் தனது கைப்பட கடிதத்தை வரைந்துள்ளார் இறையன்பு. ஆத்மார்த்தமான விஷயங்களை வெளிப்படுத்த நினைக்கும்போது அவர் தனது கைப்பட எழுதுவார் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி.
இறையன்புவின் அந்த நெகிழ்ச்சி உரை...
அன்புள்ள மேரி அவர்களுக்கு
வணக்கம்
தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது.
குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து
உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக
உங்களிடம் இருக்கும் நேர்மையான உள்ளத்தை
எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது
நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல
தூய்மையான பணியாளர்
உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
குறுக்கு வழிகளெல்லாம் நேர்வழியைக் காட்டிலும் நீளமானவை
என்பதற்கு நீங்கள் சான்று'
வாழ்த்துகள்
அன்புடன்
வெ. இறையன்பு.
தங்கத்தை விட பரிசுத்தமானவராக மாறி நிற்கிறார் மேரி.. இன்று நாட்டுக்கு மேரி போன்றவர்கள்தான் அதிகம் தேவை.
Comments