Skip to main content

ரஜினிகாந்த் என்றொரு பிராண்ட்!

இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருதை நாளை பெறுகிறார் ரஜினிகாந்த்.. பள்ளிக்காலத்தில் ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கமும், கமல் ரசிகர்கள் மறுபக்கமுமாக பிரிந்து நின்று மல்லுக்கட்டிய காலம் நினைவுக்கு வருகிறது.

ரஜினி படம் வரும்போதெல்லாம் வகுப்பில் ஒரு பரவசமும், பரபரப்பும் கூடி விடும். முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரஜினி ரசிகர்கள் கச்சைக் கட்டிக் காத்திருப்பார்கள். அவர்களை கேலி செய்து கிண்டலடிக்கும் கமல் ரசிகர்கள் கூட்டம். இரு தரப்புக்கும் இடையே பலமுறை சண்டைகள் மூள்வதுண்டு. அடிதடியுடன் கடக்கும் மாலை நேரங்கள்தான் அப்போது அதிகம். சில நேரங்களில் ரத்தக் காயங்கள் வரை போய் விடுவதும் உண்டு.  நான் அப்போது இருவருக்குமே ரசிகன் இல்லை என்பதால் இந்த சண்டையை ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி.


ரஜினி படம் என்றால் அப்போதெல்லாம் ஒரு திருவிழா  ஃபீலிங்தான் ரசிகர்களுக்கு (இன்று வரை அது தொடர்வது ஆச்சரியமானது). முன்பெல்லாம் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்க்க முடியும் என்பதால் ஒவ்வொரு படமும் சில்வர் ஜூப்ளியை தொடாமல் தியேட்டரை விட்டுப் போனதே இல்லை.. பெரும்பாலான ரஜினி படங்களுக்கு இளையராஜாதான் இசை என்பதால் ரசிகர்கள் திரும்பத் திரும்ப படம் பார்க்கப் போன காலம் அது.

ரஜினி, கமல் பீக்கில் இருந்த காலம் தமிழ்த் திரையுலகம் புகழ் மழையில் குளித்த காலம். பொருளாதார ரீதியாக ஒரு படத்தை லாபம் பார்க்க வைக்கும் சக்தி இந்த இரு நடிகர்களுக்கும் இருந்தது. என்னதான் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் வெற்றிகரமான படங்களை அவர்கள் கொடுத்திருந்தாலும் கூட சம்பளம் என்று பார்த்தால்  அவர்கள் வாங்கியது சொற்பம்தான். ஆனால் ரஜினி, கமல் காலத்தில்தான் சம்பளம் கோடிகளைத் தொட்டது.. பண மழையில் தயாரிப்பாளர்கள் குளித்த காலம் இந்த ரஜினி கமல் காலம்தான். திரைப்பட மார்க்கெட்டிங்கில் புதிய வழியைக் காட்டியவர்கள் இந்த இரு பெரும் ஸ்டார்களும்தான்.

கமலும், ரஜினியும் இணைந்து கொடுத்த படங்கள் அத்தனையும் அட்டகாசம்தான். ஆனால் பிரிந்து வந்து தனித் தனியாக  கொடுத்த படங்கள் வேறு லெவலுக்கு இருவரையும் கொண்டு போயின. கமல் ஒரு மாதிரியான திறமை என்றால், ரஜினி இன்னொரு வகையான Breed.. தன்னை ஒரு பிராண்ட்  ஆக உருவாக்கிக் கொண்டவர் ரஜினி.. அந்தப் பெயர் மட்டும் இருந்தால் போதும் அந்தப் படம் இமாலய வெற்றி என்ற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொண்டவர். சினிமா வர்த்தகத்தில் ரஜினி எப்போதும் டாப்தான்.


நடிக்கும் படத்தில் தனது நடிப்பை 100 சதவீதம் முழுமையாக கொடுத்தவர். அது வேண்டும், இது வேண்டும் என்று கிராக்கி பண்ணாதவர். தன்னை நம்பியவர்களுக்கு முழுமையான அர்ப்பணிப்பைக் கொடுத்தவர். எதிரிகளுக்கும் அன்பு காட்டியவர். இவரால் வளர்ந்தவர்கள், லாபத்தில் கொழித்தவர்கள்தான் அதிகம். 

எம்ஜிஆர் என்ற இமேஜுக்கு நிகராக வளர்வதெல்லாம் அப்போது ஒரு அசாத்தியமான விஷயம். ஆனால் அந்த இடத்தை கெட்டிக்காரத்தனமாக பிடித்தவர் ரஜினிகாந்த். வில்லத்தனம் மட்டுமே செய்து கொண்டிருந்த அவரை கலைஞானம் தனி ஹீரோவாக மடை மாற்றி விட்டார்.. அவர் எடுத்த துணிச்சலான முடிவு அது.. அவரது நம்பிக்கையை ரஜினியும் கெடுக்கவில்லை.. மகேந்திரன் வேறு உருவத்தில் ரஜினியை மாற்றிக் காண்பித்து.. இப்படியும் இவரை ரசிங்கள் என்று ஆச்சரியம் கொடுத்தவர்.. வில்லனாக மட்டுமல்லாமல், ஹீரோவாக மட்டுமல்லாமல், தனக்குக் கிடைத்த அத்தனை ரோல்களையும் அடித்து நொறுக்கி மின்னல் வேகத்தில் புகழின் உச்சத்தைத் தொட்டவர்.. மறுபக்கம், இவருக்கு இணையாக கமல்ஹாசன் தனது பாணியில் ஓடிக் கொண்டிருந்தார்.

அடி உதை, ஸ்டைல் என்று ரத்தக் காட்டாறாக ஓடிக் கொண்டிருந்த ரஜினியை, "இப்படியும் நீ நடிக்கலாம்" என்று காமெடியைக் கையில் கொடுத்து "இதெப்படி இருக்கு" என்று அசர வைத்தவர் கே. பாலச்சந்தர்.. தில்லுமுல்லு.. ரஜினியின் பன்முக பரிணாம வளர்ச்சியை வெளிப்படுத்திய அருமையான படம். அந்தப் படத்திற்கு பிறகு ரஜினி படத்தில் அவருக்கு காமெடியும் வைக்க ஆரம்பித்தனர். பெரும்பாலான ஹீரோக்களுக்கு காமெடி சரியாக வராது.. ஆனால் ரஜினிக்கு அது எளிதாகவே வந்தது.

வீட்டிலும், வேலையிலும் புழுக்கமா.. ஓடிப் போய் ஒரு ரஜினி படத்தைப் பாரு.. இன்ஸ்டன்ட் உற்சாகம் வரும் பாரு என்று சொல்லும் அளவுக்கு ரஜினி படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தும் ஒரு உற்சாக டானிக்காக இன்று வரை இருக்கின்றன. லாஜிக் பார்க்கக் கூடாது.. ரொம்ப நுனுக்கமாக பார்க்கக் கூடாது.. அப்படியே பார்த்து என்ஜாய் செய்ய வேண்டும்.. சினிமா என்பதே Fantasy தானே.. பிறகு எதற்கு ரஜினி மட்டும் இயல்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்.. ரஜினி படத்தின் பார்முலாவை பலரும் பின்பற்றிப் பார்த்தனர்.. ஆனால் அத்தனை பேருக்கும் தோல்விதான் கிடைத்தது.. காரணம், ரஜினி என்ற பார்முலா அந்த ரஜினிக்கு மட்டுமே பொருந்தும்.. 60 வயதுகளைக் கடந்த பிறகும் பேட்ட என்ற படத்தில் பழைய ரஜினி ஃபீலிங்கை உணர வைத்திருக்கிறார் என்றால் அதெல்லாம் மற்ற நடிகர்களிடம் நாம் எப்போதுமே எதிர்பார்க்க முடியாத மாயாஜாலம்தான்.


ரஜினி என்ற பிராண்ட்தான் ரொம்ப காலமாக உச்ச நடிகர் அந்தஸ்தை கையில் வைத்துள்ள ஒரே நடிகர். எம்ஜிஆருக்குப் பிறகு அந்த சாதனையைப் படைத்தவர் ரஜினிதான். ஆனால் உண்மையில் ரஜினி ஒரு Versatile Actor.. அவரை ஒரு அதிரடி நாயகனாகவும், ஸ்டைல் மன்னனாகவும் மட்டுமே காட்டி விட்டார்கள் என்ற வருத்தம் பலருக்கு உண்டு. கமல்ஹாசனைப் போல இவரையும் பல விதமான ரோல்களில் நடிக்க வைக்கும் துணிச்சல் இயக்குநர்களுக்கும் சரி, தயாரிப்பாளர்களுக்கும் சரி அப்போது இல்லை. ஒரு வேளை அப்படி செய்திருந்தால் இந்தியாவின் மிகப் பெரிய நடிகராக ரஜினிகாந்த் இன்னும் அதிக வீச்சுடன் புகழ் பெற்றிருப்பார்.

ஆனாலும் ரஜினிக்கும் ஆறிலிருந்து அறுபது வரை, மூன்று முடிச்சு, அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் என வித்தியாசமான கதாபத்திரங்கள் கிடைக்கத்தான் செய்தது. அதில் அவர் முத்திரை பதிக்கவும் தவறவில்லை.

தாதா சாஹேப் பால்கே விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் ரஜினிகாந்த்.. இதை விட சிறந்த உயரிய விருதுகளும் கூட இவரது காலத்திலேயே இவருக்கு வழங்கப்பட வேண்டும்.. இந்திய திரையுலகின் மார்க்கெட்டை வெளியிலும் வலுப்படுத்திய சாதனையாளர் என்பதால் ரஜினிக்கு அத்தனை உயர் விருதுகளும் பொருத்தமானவையே.. சூப்பர் ஸ்டாரை வாழ்த்துவோம்.

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்