Skip to main content

படமாப்பா இது.. பேயே குழம்பிப் போயிருச்சு பாருங்க!


ஒரு பேய்ப் படம்னா எப்படி இருக்கணும்.. எவ்வளவு தைரியசாலியா இருந்தாலும் சீட் நுனியில் கொண்டு வந்து உட்கார வைக்கணும்.. அவ்வப்போது திடுக்கிட்டு பயந்து அலறணும்.. வியர்த்துக் கொட்டணும்.. ம்ஹூம்.. அரண்மனை 3 படம் பார்த்தப்போ இதெல்லாம் ஒன்று கூட நடக்கவில்லை. 

சரி பேய்ப் படத்தில் காமெடி இருக்குமே.. நல்லா சிரிக்கலாமே என்று பார்த்தால் அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள். காமெடியர்கள் ஒன்றுக்கு நாலாகவே இருந்தும் கூட வயிறு வலிக்க சிரிக்க முடியவில்லை. அவ்வப்போது வாயை விரிய வைத்ததோடு சரி.. அதிலும் வஞ்சம் செய்து விட்டார்கள்.

அரண்மனை 3.. முதல் இரு படங்களும் அருமையாக இருந்ததால், 3வது படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெரிதாக சொதப்பியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.  முதல் இரு படத்தில் இருந்த கட்டுக்கோப்பான திரைக்கதை.. இந்த 3வது பாகத்தில் மிஸ்ஸிங்.

படத்தில் மொத்தம் 3 பேய். ஒரு குழந்தைப் பேய், பிறகு அதோட அம்மா பேய், அப்புறம் அந்த அம்மாவோட லவ்வர் பேய். இத்தனை பேய்கள் இருந்தாலும் ஒரு பேயும் பயமுறுத்தவில்லை.. அதுதான் சப்பென்று போய் விட்டது.

பேய்ப் படங்களுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் இருக்கிறது.. கரும்புகை போன்ற உருவம், விறைத்துப் பார்க்கும் முறைப்பு உருவங்கள், இருட்டு, வீரிட்டு கதறுவது.. என எல்லாமே இருக்கிறது. ஆனால் பயம்தான் சுத்தமாக வரவில்லை. 

ஒரு பழைய அரண்மனை மற்றும் அதைச் சுற்றி வரும் கதைதான் இதிலும். மொத்தமாக 3 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களின் ஆவியை வைத்து கதையை நகர்த்தியுள்ளனர். ஆன்ட்ரியா இந்தப் படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை.  அரண்மனை 1 படத்தில் ஆன்ட்ரியா அசத்தியிருப்பார். ஆனால் இந்தப் படத்தில் அவரது ரோல் மனதில் கொஞ்சம் கூட ஒட்டவில்லை. 

அதேபோலத்தான் ராசி கண்ணாவும். அவரது ரோலும் வலுவாக இல்லை. படத்தின் நாயகன் ஆர்யா. சார்பட்டா பரம்பரை டைமில் எடுத்த படம் போல.. .அதனால் அதே உருவத்துடன், உருண்டு திரண்டு கவர்ச்சி நாயகனாக காட்சி தருகிறார். மற்றபடி நடிப்பில் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆர்யாவுக்கு பெயர் வாங்கித் தராத படங்களின் வரிசையில் அரண்மனை 3 படத்தை சேர்க்கலாம்.


சுந்தர் சி. ரோல் நன்றாக இருக்கிறது. படத்தின் பெரிய குழப்பம் திரைக்கதைதான். தெளிவாக இல்லை. விவேக்கின் காமெடி பேசும்படி இருக்கிறது. அவரை மிஸ் செய்கிறோம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர வைத்துள்ளனர். நளினிக்குப் பதில் பேசாமல் கோவை சரளாவைப் போட்டிருக்கலாம்.. கலகலன்னு ஏதாவது கத்தி சிரிக்க வைத்திருப்பார். யோகிபாபு ரொம்பக் கஷ்டப்பட்டு காமெடி டிராக்கை சரியான பாதையில் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.. கூடவே மனோபாலாவும். ஆனாலும் பெரிதாக சிரிக்க முடியவில்லை.

ஆண்ட்ரியா கர்ப்பமாக இருக்கும்போது பாடும் தாலாட்டுப் பாடல் செங்காந்தளே ஈர்க்கிறது. ஆனால் இந்த தாலாட்டுப் பாடலை, பேய்க்கான பாடலாகாவும் மாற்றியிருப்பது வித்தியாசமாக இருக்கிறது. ரஸவாச்சியே பாடலில் சித் ஸ்ரீராம் ஈர்க்கிறார். பிறகு ஷாலுவாக வரும் அந்தக் குழந்தை அவ்வளவு அழகாக இருக்கிறது. நல்ல கண்ணு, செமையாக முழிக்கிறது. இதெல்லாம் படத்தின் சில பாசிட்டிவ் பக்கங்கள். சொல்ல மறந்துட்டோமே.. அந்த அரண்மனை.. சூப்பர் செலக்ஷன்.

ஹாலிவுட் பேய்ப் படங்கள் போலெல்லாம் நம்மாட்கள் பேய்ப் படம் எடுக்க முன்வருவதில்லை. பேய்ப் படம் என்றாலும் கூட அதில் ஒரு ரியாலிஸ்டிக் டச் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் வெறும் கிராபிக்ஸை மட்டும் வைத்து ஷோ காட்ட முயற்சித்தால் அது நிச்சயம் குழப்பவே செய்யும். அந்த வகையில் அரண்மனை 3 படமும் சுவாரஸ்யம் தரவில்லை, ரசிகர்களையும் ஈர்ப்பதாக இல்லை.. காரணம், உப்புச் சப்பில்லாத கதை.

அரண்மனை 3 வெற்றி பெற்றால் 4 வரும் என்று கூறியிருந்தார் சுந்தர் சி.. என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. 

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்