இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான வாத்தியார் கிடைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு கோச்சாக இருப்பதற்கெல்லாம் பெரிய பாண்டித்யம் தேவைப்படாது. அதற்குப் பதில், அணியின் சீனியர்களை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அந்த கோச் தனது முழு பதவிக்காலத்தையும் சத்தமில்லாமல் முடித்து விடலாம்.
இதுதான் இன்று வரை உள்ள நிலவரம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் மென்டார் ஆக மாறியுள்ள மகேந்திர சிங் தோனி மீது ஒரு தனி எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் அறிமுகமாகியபோது ஒரு புயலென கலக்கியவர் அவர். அதன் பின்னர் அவரிடம் கேப்டன் பொறுப்பு வந்த பிறகு அந்த பொறுப்பை யாரும் எதிர்பாராத வகையில் திறமையாக நிர்வகித்தவர்.
அவர் தொட்டதெல்லாம் துலங்கியது, அவர் சொல் பேச்சு கேட்டு நடந்த ஒவ்வொரு வீரரும் அவரவர் திறமையில் உச்சம் தொட்டனர். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதிலும், யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதன் போக்கில் அவர்களைக் கொண்டு சென்று சிறந்ததைப் பெறுவதிலும் தோனிக்கு நிகர் தோனிதான்.
இதனால்தான் ஒவ்வொரு கோப்பையையும் தோனி அணி சொல்லி சொல்லி அடித்து வந்தது. இந்த சாதனையை முறியடிப்பதெல்லாம் அசாதாரணமானது. விராட் கோலியால் கூட அது முடியுமா என்பது சந்தேகம்தான். இந்த நிலையில்தான் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் மென்டார் ஆக உருவெடுத்துள்ளார் தோனி.
தோனி கூட இருந்தாலே 100 யானைகளின் பலம் கிடைத்தது போல. அப்படி இருக்கையில் அவரே மென்டார் ஆக வரும்போது இந்திய அணி வீரர்களுக்கு குறிப்பாக கேப்டன் கோலிக்கும், ஜூனியர் வீரர்களுக்கும் நிச்சயம் மிகப் பெரிய பலம்தான் என்பதில் சந்தேகம் தேவையில்லை. குறிப்பாக இளம் வீரர்களுக்கு தோனி மிகப் பெரிய பூஸ்ட் ஆக அமைவார் என்று நம்பலாம்.
இளம் திறமையை அதிகமாக நம்புபவர், ஊக்குவிப்பவர் தோனி. அவரே ஒரு இளைஞராக பல சாதனைகள் புரிந்தவர்தானே. அந்த அனுபவத்தை அப்படியே இளம் வீரர்களுக்குப் பாய்ச்சி, சீனியர்களுக்கு நிகராக அவர்களையும் விஸ்வரூபம் எடுக்க வைப்பார் தோனி என்ற நம்பிக்கை இப்போதே கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வந்து விட்டது.
புது வாத்தியாரை வரவேற்போம்.. விரைவில் "ஹெட் மாஸ்டராகவும்" மாறட்டும்!
Comments