எத்தனை கனவுகள்
என்னென்ன நினைவுகள்
மாடியில் ஓடியாடி
உன் மடியில் படுத்துறங்கி
செல்லச் சண்டைகள் போட்டு
படபடவென பட்டாம் பூச்சியாய்
ஒவ்வொரு அறைக்குள்ளும் புகுந்து புறப்பட்டு
மழைக்காலங்களில் காகிதக் கப்பல் விட்டு
மொத்தக் குடும்பமாய் மொட்டை மாடியில் படுத்துறங்கி
வான் நோக்கி விழி பார்க்க கதை பேசி..
ஜன்னலோரம் வந்தமர்ந்த குருவிகள் எத்தனை எத்தனை
பெல்லடித்தபடி ரோட்டில் சென்ற சைக்கிள்கள்
பார்த்துச் சிரித்த பல நாட்கள்
காற்றடித்த காலத்தில் படபடத்த கதவு ஜன்னல்கள்
பத்திரமாய் பாய்ந்தோடி சாத்தி வைத்த பொழுதுகள்..
தூரத்தில் தெரிந்த அப்பாவின் தலை பார்த்து
கதவு திறந்து ஓடிச் சென்று
கையில் பிடித்து வரும் பையை பிடுங்கி
அப்பையில் பொதிந்து கிடக்கும் அன்பைப் பகிர்ந்து..
உன் மடியில் சாய்ந்த போதெல்லாம்
அரவணைத்து ஆறுதல் தந்து
சிந்திய கண்ணீரையும்
கிளர்ந்து முகிழ்த்த புன்னகைகளையும்
சுகமான பாரமாய் தாங்கி நின்ற சுவர்கள்..
ஓர்மைகளின் பாரம் சுமந்து
நீ வீழ்ந்த அந்தத் தருணம்
மழை நீரில் கலந்து கரைந்தது எங்கள் ஓலங்கள்
உன்னைப் பார்த்துப் பார்த்துக் கட்டிய..
அம்மையும் அச்சனும்
விவரிக்க முடியா விசனத்துடன்..!
நீரில் நீ விழவில்லை
எங்கள் உள்ளத்தில் விழுந்து புதைந்தாய்...!
பல வெள்ளங்களைப் பார்த்த உன் கால்கள்
இந்த ஓர் மழைக்கு உள்ளிழுத்துக் கொண்ட சோகம்
போய் வா மனையே..
உன் சுகமான நினைவுகளோடு
எங்கள் மனதோடு வாழ்வாய்!
Comments