Skip to main content

நானும் ஒரு நாள் ராசி பலன் எழுதினேன்!


நாளிதழ்களில் வரும் ராசி பலன்களை நான் பொழுது போக்காக பார்ப்பது வழக்கம்.. அதன் மீது ஆழ்ந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது. சில ஜோதிடர்கள் எழுதும் வார்த்தைகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்.. அந்த சுவாரஸ்யத்திற்காக படிப்பேன்.. அவ்வளவுதான்.

இப்போதெல்லாம் சுயேச்சையான ராசி பலன்கள் அதிக அளவில் வருகின்றன. முன்பெல்லாம் முக்கியமான நாளிதழ்களில் மட்டும்தான் ராசி பலன் வரும். அதுவும் பிரபலமான ஜோதிடர்கள்தான் எழுதுவார்கள். அதற்கு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. தினதந்தி, தினமலர் என முக்கியமான நாளிதழ்களில் வரும் ராசிபலன் படிக்க பெரும் கூட்டமே இருக்கும்.

ஜோதிடம் என்பதே ஒரு கணக்குதான். அதை சரியாக கணிப்பவர்கள் வெகு சிலரே.. அப்படிப்பட்டவர்கள் சொல்வதுதான் கிட்டத்தட்ட சரியாக இருக்கும்.  அதில் ஒருவர்தான் நம்புங்கள் நாராயணன் (இப்போது மறைந்து விட்டார்).. இவரது பலன்களைப் படிக்க பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். பல விஷயங்கள் நமக்கு நடப்பது போலவே இருக்கும் (அந்த பாசிட்டிவிட்டி மட்டும்தான் எனக்குப் பிடிக்கும்).

நம்புங்கள் நாராயணன், ஒரு நியூமராலஜிஸ்ட். பெரிய பெரிய விஐபிகள் எல்லாம் இவரது கஸ்டமர்களாக இருந்தனர். எம்ஜிஆருக்கு ரொம்பப் பிடித்தமானவர். காரணம், அவரது அமைச்சரவை டிஸ்மிஸ் ஆகும் என்று கணித்துக் கூறியவர் நாராயணன். அதன் படி நடந்ததும், எம்ஜிஆரே இவரைக் கூப்பிட்டு எப்படி சரியா கணிச்சீங்க என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டாராம்.

இது மாதிரி சிலர் இருக்கிறார்கள், இருந்தார்கள். இன்று நிறையப் பேர் ஜோதிடர்களாக உள்ளனர். ஆனால் அவர்களில் எத்தனை பேரால் துல்லியமாக கணிக்க முடிகிறது என்பதுதான் முக்கியமானது.

நான் கூட ஒருமுறை "திடீர் ஜோதிடராக" மாறினேன். எங்களுடைய அலுவலகத்தில் வழக்கமாக எழுதும் ஜோதிடர் ஒருவர் வேறு வேலை கிடைத்து விட்டது என்று நின்று விட்டார். அவர் புதன்கிழமை வேலையை விடுகிறார். வெள்ளிக்கிழமை காலை ராசி பலன் போட்டாக வேண்டும். இடையில் ஒரு நாள் இருக்கே , யாரையாவது பிடித்து விடலாம் என்று மெத்தனமாக இருந்து விட்டோம். ஆனால் ஒருவரும் கிடைக்கவில்லை (நீங்கள் யாரையாவது தேடினால் அவர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று நம்ம ராசியில் இருந்ததோ என்னவோ!)

என்ன செய்வதென்று தெரியவில்லை. "ஆண்டவன்" மேல் பாரத்தைப் போட்டு விட்டு, சரி நாமளே "ஏதாவது" எழுதலாம் என்று நினைத்து அடிப்படையான ராசி குணங்களை கையில் வைத்துக் கொண்டு நானாக ஒன்றை எழுத ஆரம்பித்தேன். படித்து முடித்த பிறகு எனக்கே "அது" பிடித்திருந்தது. கூட இருந்தவர்களிடம் இதை செக் செய்யலாமே என்று நினைத்து, வேறு ஒரு ஜோதிடர் அனுப்பியது.. சரியா இருக்கா பாருங்க என்று நூல் விட்டுப் பார்த்தேன். அவர்களும் படித்துப் பார்த்து விட்டு,  சூப்பரா இருக்கு, பழைய ஜோதிடரை விட இவர் கொஞ்சம் பாசிட்டிவா நிறைய சொல்லியிருக்கிறார் என்று பாராட்டவே, எனக்கு ஆஹா.. என்றாகி விட்டது.

ஆனால் நல்ல வேளையாக அதைப் பிரசுரிக்கவில்லை.. காரணம், வேறு ஒரு ஜோதிடர் கிடைத்து விட்டதால், அவரை வைத்து அந்த வாரத்தை ஒப்பேற்றினோம்.. நான் எழுதிய ராசி பலன் இன்று வரை எனக்கு மறக்க முடியாது.. அது கற்பனையாக எழுதியதுதான்.. ஆனால் அதை படித்துப் பார்த்தவர்களுக்கு, மனதில் பாசிட்டிவிட்டி தோன்றியது அல்லவா.. அது எனக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பாசிட்டிவிட்டி மட்டுமே போக வேண்டும்.. அதுதான் "சிறந்த மனிதம்" என்று புரிந்து கொண்ட நாள் அது.

இன்று காலை ஒரு ராசிபலனைப் படித்தபோது ஏற்பட்ட நினைவுகள் இது.. பகிர்ந்து கொண்டேன். அப்புறம் முக்கியமானது, எனது ராசி கன்னி.. இன்று எனது ராசியில் "வராத பழைய பாக்கிகள் வசூலாகும்" என்று சொல்லியுள்ளனர்.. ஸோ,  வாங்கிட்டுப் போன எல்லோரும் தயவு செய்து வந்து எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடுங்க.. I am waiting!

Comments

387 Booma said…
தினம் ஒரு தகவல்...ராசி பலன் பற்றிய வலைப்பதிவு ரசிக்கும்படியாக இருந்தது...சிரித்து மகிழ்ந்தோம்...மென்மேலும் பணி தொடரட்டும்...வாழ்த்துகள்...
S.T.Arivalagan said…
Thank you mam

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்