மலையாள சினிமாவுக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் உண்டு. நல்ல நல்ல கலைஞர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருப்பார்கள். புதுப் புது முயற்சிகளை அவர்கள் தந்து கொண்டே இருப்பார்கள்.. அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் வரை விடாமல் முயன்று கொண்டே இருப்பார்கள் - படம் ஓடுதோ இல்லையோ அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டார்கள்- வெற்றி வந்த பிறகும் கூட அவர்களது சோதனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். மலையாள சினிமாவின் மலைக்க வைக்கும் ஆரோக்கிய வளர்ச்சிக்கு இதுதான் அடிப்படை காரணம்.
ஜோஜு அப்படிப்பட்ட ஒரு கலைஞர்தான். இவரது திரைத்துறை வளர்ச்சி என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு, சக கலைஞர்களுக்கு ஈடு கொடுத்து அவர்களது நடிப்பையும் தூக்கி விடும் அசாத்தியம், சோதனை முயற்சிகளுக்கு கொஞ்சம் கூட தயக்கம் காட்டாத தன்மை, தோல்வி வெற்றியை தலைக்கு கொண்டு போய் அடைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நல்ல நடிப்பை தருவது, சின்ன ரோலாக இருந்தாலும் அதில் தாக்கத்தை உட்புகுத்துவது என்று அசத்திக் கொண்டிருக்கும் ஒரு நல்ல கலைஞன்தான் ஜோஜு.
ஜோஜு திடீரென வந்த நடிகர் அல்ல.. சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு சாதாரண ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். கிடைத்த ரோல்களை சரியாக பயன்படுத்திக் கொண்டு, இயக்குநர்களின் கண்களில் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தவர். கிடைத்த கிளைகளைப் பற்றி மெல்ல மெல்ல மேலே வந்தவர். சாதாரணை துணை நடிகராக இருந்து இன்று மலையாள சினிமாவின் முன்னணிக் கலைஞராக உருமாறி நிற்கிறார் ஜோஜு.
ஒரு செகன்ட் கிளாஸ் யாத்ரா, 10 கல்பனகள், ஜோசப், நாயட்டு, மாலிக், ஹலால் லவ் ஸ்டோரி, 1, ஹோட்டல் கலிபோர்னியா, சோழா, என இவர் நடித்த படங்களின் பட்டியல் மிகப் பெரியது. ஒவ்வொரு படத்திலும் ஒரு மாதிரியாக உருமாறி அசத்தியிருப்பார். இவரது மழவில் கூடாரம் இவருக்கு சின்னப் படமாக இருந்தாலும் கவனிப்புக்குரியதாக இருந்தது.
இவர் தனித்து நாயகனாக நடித்தது ஜோசப் படம்தான்.. அதில் அவரது கேரக்டர் மிகப் பிரமாதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும். இவரது நடிப்பும் தூக்கலாகவே இருக்கும். அத்தனை இயல்பாக நடித்திருப்பார். ஒரு ரிடையர்ட் போலீஸ்காரராக இவர் நடித்திருப்பார். நல்ல நடிப்புக்கு இந்த ரோலை உதாராணமாக காட்டலாம். அத்தனை எதார்த்தம், அத்தனை துல்லியம்.. கொஞ்சம் கூட மிகை இல்லாமல், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம்.
நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களையும் தயாரித்துள்ளார் ஜோஜு. தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுத்து வரும் ஜோஜு, இந்த கொரோனா காலத்தில் ஓடிடி பிளாட்பார்ம் மூலம் மலையாளத்தைத் தாண்டி பிற மொழி ரசிகர்களையும் தனது நடிப்பால் கட்டி இழுத்துள்ளார். அந்த வகையில் ஓடிடிக்குத்தான் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழில் கூட இவர் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். சின்ன ரோலாக இருந்தாலும் அதுவும் மனதை ஈர்க்கும் வகையில் இருந்ததை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஜோஜு போன்ற நடிப்பு ராட்சசர்கள் தமிழுக்கும் கூட நிறைய தேவை.. !
Comments