எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் இனி கழகத்தைக் காப்பாற்ற வேண்டும் .. காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன் என்று சசிகலா கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தன்னால் இனி கட்சியை மீட்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டியுள்ளாரா என்ற அர்த்தத்திலும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
மறைந்து போய் விட்ட இந்த தலைவர்கள் கழகத்தைக் காப்பாற்றுவார்கள் என்று சசிகலா ஏன் கூற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அதிகமுவைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் சிறையிலிருந்து வந்த முதல் நாள் ஏற்படுத்திய பரபரப்போடு அப்படியே அமைதியாகி விட்டார். திடீரென ஒரு நாள் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் கூறி விட்டு கப்சிப்பென்று ஆகி விட்டார்.
பின்னர் தேர்தல் சமயத்தில் கட்சிக்காரர்களுடன் போனில் பேசினார். அந்த ஆடியோக்கள் வெளியாகி புதிய பரபரப்பைக் கிளப்பின. ஆனால் அதிமுகவை அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இன்று ஜெயலலிதா சமாதிக்கு வந்து போயுள்ளார். சிறையிலிருந்து வந்த பிறகு முதல் முறையாக இன்றுதான் ஜெயலலிதா சமாதிக்கு வந்தார் சசிகலா. சிறைக்குப் போவதற்கு முன்பு வந்து விட்டு போன பிறகு இன்றுதான் முதல் முறையாக சமாதிக்கு வந்தார் சசிகலா.
சரி சமாதிக்கு வந்துள்ளதால் ஏதாவது பரபரப்பாக பேசலாம் அல்லது ஏதாவது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் அமமுக கட்சியினரும் பெரும் திரளாக வந்திருந்தனர். ஆனால் அவரோ செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறி விட்டுப் போனது சப்பென்று ஆகி விட்டது. அதிமுகவை மீட்க என்னால் இயலவில்லை, இனி எம்ஜிஆர், ஜெயலலிதாவால் ஏதாவது மாஜிக் நடந்தால்தான் உண்டு என்று மறைமுகமாக சொல்லியுள்ளாரா சசிகலா என்ற சந்தேகமும் எழுகிறது.
சசிகலாவைப் பொறுத்தவரை சிறைக்குப் போவதற்கு முன்பு இருந்த ஆவேசமும், வேகமும் அவர் வெளியே வந்த பிறகு இல்லை, அது போய் விட்டது. இப்போது அவர் வெறும் சசிகலாவாக மட்டுமே இருக்கிறார். அவர் எதிர்பார்த்த எந்த பலமும் அவருக்கு வந்து சேரவில்லை. பெரிய தலைவர்கள் யாருமே அவருக்காக பகிரங்கமாக குரல் கொடுத்து அதிமுகவிலிருந்து வெளியே வரவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தன்னால் மட்டுமே எதுவும் செய்ய முடியாது என்ற எதார்த்தத்தை சசிகலா உணர்ந்துள்ளபடியால்தான் இவ்வாறு பொதுவாக பேசி விட்டுப் போயுள்ளதாக கருதப்படுகிறது.
எப்படி இருந்தாலும் மாறிப் போய் விட்ட அரசியல் சூழலில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தி நிலவி வரும் நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், சசிகலாவால் கட்சியைக் கைப்பற்றினாலும் கூட எந்த வகையிலும் சோபிக்க முடியாது என்றே கருதப்படுகிறது. எனவே சசிகலா இப்போதைக்கு அதிமுகவைக் கைப்பற்றும் எந்த நடவடிக்கையிலும் தீவிரம் காட்டுவாரா என்பது சந்தேகமே.. பொறுத்திருந்து பார்க்கலாம்.
Comments