காலின் பாவல்.. அமெரிக்கர்களால் மட்டுமல்ல, உலக நாடுகளாலும் மறக்க முடியாத பெயர்.
அமெரிக்காவின் முதல் கருப்பர் இன வெளியுறவு அமைச்சர், அமெரிக்க ராணுவ தளபதியாக இருந்தவர்.. மிக முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக செயல்பட்டவர். 84 வயதான பாவல், ரத்த புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார்.
அவரது மரணம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதன் பின்னர் அவர் மரணமடைந்துள்ளார். இத்தனைக்கும் அவர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர். இதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கொரோனா தடுப்பூசியினால் உண்மையில் பலன் இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் அமெரிக்காவில் வெடித்துள்ளது. பாவலுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டும் அவர் மரணமடைந்திருப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர் தடுப்பூசிக்கு எதிரானவர்கள். ஆனால் பாவல் மரணத்திற்கு கொரோனா காரணம் அல்ல என்றும் அவருக்கு ஏற்கனவே இருந்த ரத்தப் புற்றநோய் பாதிப்பே காரணம் என்றும் டாக்டர்கள் விளக்குகின்றனர்.
பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் லீனா வென் இதுகுறித்துக் கூறுகையில், அறிவியலையும், அறிவியல் ஆய்வுகளையும் முதலில் நாம் நம்ப வேண்டும். கோவிட் 19 தடுப்பூசிகள் எல்லாமே திறன் வாய்ந்தவைதான் என்று அறிவியல் பூர்வமாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை இது தடுக்கிறது என்றும், தீவிர பாதிப்பு ஏற்படுவதிலிருந்து நம்மைக் காக்கிறது என்றும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி எடுத்துக் கொண்டால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 6 மடங்கு குறைகிறது என்றும், மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 11 மடங்கு குறைவு என்றும் சமீபத்திய ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. இது பாவல் விவகாரத்திற்கும் பொருந்தும். அதேசமயம், கோவிட் 19 தடுப்பூசிகள் நம்மை முழுமையாக காப்பதில்லை என்பது உண்மைதான். இந்த வாக்சின் மட்டுமல்ல, எந்த தடுப்பூசியுமே முழுமையான பாதுகாப்பு தருவதில்லை. ஓரளவுக்கு தடுக்கும் அவ்வளவுதான். அதற்காக தடுப்பூசிகள் திறனற்றவை என்ற முடிவுக்கு வர முடியாது.
காலின் பாவலைப் பொறுத்தவரை அவருக்கு ஏற்கனவே பல உடல் உபாதைகள் இருந்துள்ளன. குறிப்பாக ரத்த புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்துள்ளார். அதற்கான சிகிச்சையிலும் இருந்து வந்துள்ளார். அவருக்கு Multilple Myeloma இருந்துள்ளது. இதுதான் அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம், கொரோனா அல்ல. அவரது வயதும் இன்னொரு முக்கியக் காரணம். இதனால் ரிஸ்க் அதிகரித்துள்ளது என்று டாக்டர் லீனா வென் விளக்கியுள்ளார்.
காலின் பாவல் அமெரிக்க வரலாற்றில் தனிக்கென தனி முத்திரை பதித்தவர். வியட்நாம் போரில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர். அந்தப் போரின்போது அவர் மேஜராக பதவி வகித்தார். வியட்நாம் போரிலிருந்து தாயகம் திரும்பிய பின்னர் படிக்கப் போய் விட்டார். எம்பிஏ படிப்பை முடித்தார். பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.
முப்படைத் தளபதியாக இவர் பணியாற்றியபோது நல்ல பெயரைப் பெற்றார். இதனால் அவர் அதிபர் தேர்தலில் நிற்கலாம் என பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இவரோ, ஜார்ஜ் டபிள்யூ புஷ் சீனியரை குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக நிறுத்த ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து நடந்த தேர்தலில் புஷ் வென்றார். அவரது அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றார் காலின் பாவல்.
ஆனால் 2003ம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் ஊடுறுவிய விவகாரத்தில் பாவலுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. பலரது விமர்சனங்களை அவர் சந்தித்தார். ஆனால் சதாம் உசேனுக்கு எதிரான புஷ்ஷின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வந்தார் பாவல். இருந்தாலும் புஷ்ஷின் முதல் பதவிக்காலத்தின் இறுதிப் பகுதியில் அவருக்கும், பாவலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
ஜார்ஜ் புஷ் 2வது முறையாக அதிபராக வென்ற சில மணி நேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் பாவல். புஷ்தான் அவரை ராஜினாமா செய்யச் சொன்னதாக செய்திகள் வெளியாகின. பாவலுக்குப் பதவில் மற்றொரு ஆப்பிரிக்க அமெரிக்கரான கான்டலீசா ரைஸ் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாவல் அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை பாவல். அவ்வப்போது முக்கியப் பிரச்சினைகளில் கருத்து மட்டும் தெரிவித்து வந்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரை அதிகரிக்க அப்போதைய அதிபர் ஒபாமா முடிவெடுத்தபோது அதை எதிர்த்தார் பாவல். ஆனாலும் அதை நிராகரித்தார் ஒபாமா. இதனால் ஒபாமா அரசை விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார் பாவல்.
பாவல் மீது பெரிய அளவில் கறை எதுவும் இல்லை என்ற போதிலும், ஈராக் விவகாரத்தில் அவரது பெயர் மிக மோசமாக கெட்டது என்பது வரலாறு.
Comments