Skip to main content

Chennai: மழை வரும்போதெல்லாம்.. நாம் நனைவோமே.. நினைவில்!


மழைக்காலம் என்றாலே காகிதக் கப்பல் விட்ட பழைய காலம் போல இப்போதெல்லாம் இல்லை.. அதிலும் சென்னைவாசியாக இருந்தால்.. அயயோ மறுபடியும் மழையா.. இந்த வாட்டி வீட்டுக்குள் வெள்ளம் வருமா இல்லை வராமல் தப்பிருவோமா என்ற பய பீதிதான் முதலில் வந்து முகத்தில் அப்புகிறது. அப்படி ஊரை நாசப்படுத்தி வச்சிருக்கோம்!

திட்டமிடாத வளர்ச்சி, திரும்பிய பக்கமெல்லாம் கான்க்ரீட் காடுகள், கால்வாய் எங்கெல்லாம் இருக்கிறதோ அதையெல்லாம் ஆக்கிரமித்து அழித்து வைத்திருப்பது, ஏரிகள் இருந்த இடமெல்லாம் இன்று ஏரியாவாக மாறியிருக்கும் அவலம் என்று சென்னையை மானபங்கப்படுத்தி வைத்திருக்கிறது நகர்ப்புற வளர்ச்சி!

அதை விடுங்க.. பல காலத்துக்கு முந்தைய சென்னையின் ஒரு மழைக்காலத்தை இப்போது பார்க்கலாம். அது 1995, மாதம் சரியாக நினைவில்லை. நான் கதிரவன் நாளிதழில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம். மதியம் ஷிப்ட்.. ஸோ காலையில் நல்லா தூங்கிட்டு லேட்டாக எழுந்த நான் 12 மணி போல அலுவலகம் கிளம்பினேன். தங்கியிருந்த இடம் திருவல்லிக்கேணி.. அலுவலகம் ஆயிரம் விளக்கு. வழக்கமாக பஸ்ஸில் வரும் நான், அன்று நடந்து போகலாமா என யோசித்தேன்.. காரணம் ரம்மியமான கிளைமேட்.

வெளியில் அப்படி ஒரு குளிர்ச்சி.. குளிர் காற்று.. சூப்பராக இருந்தது.. சரி அப்படியே நடக்கலாமே என்று கால்களை எட்டிப் போட ஆரம்பித்தேன்.. ஸ்டார் தியேட்டர் வரை பெரிதாக பிரச்சினை இல்லை.. மெதுவா நடந்து வந்தாச்சு.. அங்கு வந்த பிறகு தியேட்டருக்கு நாலு கடை தள்ளி வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கும் போய் ஒரு சுவையான ஏலக்காய் டீ.. சொல்லி விட்டு  காத்திருந்தபோது மெல்ல  ஆரம்பித்தது மழை.. சின்னச் சின்ன துளிகளாய் விழ ஆரம்பித்தது.

அப்போது எக்ஸ்பிரஸ் மால் எல்லாம் கிடையாது. அந்த இடமே வித்தியாசமாக இருக்கும்.. மழைத் துளியை ரசித்தபடி டீயை வாங்கி மெல்ல உறிஞ்சியபோது கிடைத்த சுகம், இந்த நிமிடம் வரை வேறு எந்த வெளியிடத்திலும் கிடைத்ததில்லை. அந்த இடமே அத்தனை அம்சமாக காட்சியளித்தது. மழை பெய்ய ஆரம்பித்ததும் சென்னைவாசிகள் என்ன செய்வார்கள் என்றால் இருப்பதை இருந்த இடத்திலேயே விட்டு நனைவதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். அப்போதும் அதுதான் நடந்தது. இந்த இடத்தில்தான் வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

யாரங்கே?

வாருங்கள்...


விண்ணுக்கும் மண்ணுக்கும்

தண்ணீர்ப்பாலம் பாருங்கள்


திரவ முத்துக்கள்

தெறிப்பது பாருங்கள்


யாசித்த பூமிக்கு

அந்த வானம்

வைரக் காசுகள்

வீசுவது பாருங்கள்


மழை மழை மழை

மழை மழை மழை


மண்ணின் அதிசயம் மழை


பூமியை வானம்

புணரும் கலை மழை


சமுத்திரம் எழுதும்

சமத்துவம் மழை


மழைபாடும்

பள்ளியெழுச்சியில்

ஒவ்வொர் இலையிலும்

உயிர் சோம்பல்முறிக்கிறது


இது என்ன...?


மழையை இந்த மண்

வாசனையை அனுப்பி

வரவேற்கிறதா?


என்ன...?

என்ன சத்தம்...?

சாத்தாதீர் ஜன்னல்களை

அது மழைக்கெதிரான

கதவடைப்பு


குடையா?

குடை எதற்கு?

அது

மழைக்கெதிராய்

மனிதன் பிடிக்கும்

கறுப்புக் கொடி


ஏன்...?

ஏனிந்த ஓட்டம்?

வரம் வரும் நேரம்

தபசி ஓடுவதா?


இதுவரை நீங்கள்

மழையைப் பார்த்தது

பாதிக் கண்ணால்


ஒலி கேட்டது

ஒரு காதால்


போதும் மனிதர்களே


பூட்டுப் போட்டுப்

பூட்டுப்போட்டுப்

புலன்களே பூட்டாயின


திறந்து விடுங்கள்


வாழப்படாத வாழ்க்கை

பாக்கி உள்ளது


உங்கள் வீட்டுக்கு

விண்ணிலிருந்து வரும்

விருந்தாளியல்லவா மழை


வாருங்கள்


மழையை

நம் வீட்டுத்

தேநீருக்கழைப்போம்


மழையில் நனைவதை ஏதோ அபச்சாரம் என்பது போல உணரும் மனிதர்களும் இருக்கிறார்கள். மழையில் நனைய வேண்டும்.. அந்த மண் வாசனையை நுகர வேண்டும்.. மழையில் நனையும் பாக்கியமெல்லாம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்..

டீ குறைய குறைய மழையின் வேகம் மெல்ல உயரத் தொடங்கியது.. "பாய்.. இன்னொரு டீ.." என்று ஆர்டர் கொடுத்தபடி மழையின் வேகத்தை நானும் சேர்ந்து அனுபவிக்கத் தயாரானேன்... முத்து மழையின் மொத்த உருவமும் இப்போது தெள்ளத் தெளிவாக.. பொத்துக் கொண்டு விட்டதோ வானம் என்று சொல்லும்படியாக மெத்து மெத்தென்று தரையில் வீழ்ந்த துளிகள்.. அள்ளி எடுத்த ஆனந்தமாக குதித்து விளையாடத் துடித்தது மனம்.

"என்ன.. இறங்கி விளையாடத் தோணுதோ".. டீ கிளாஸை நீட்டியபடி கடைக்காரர் கிண்டலடிக்க, "ஆமா பாய்.. ஆனால் ஆபீஸ் போகணுமே.. " என்று ஆதங்கப் பெருமூச்சை வெளிப்படுத்தியபடி 2வது டீயை உள்ளே தள்ள ஆரம்பித்தேன்.

டீயைக் குடித்தபடி மழையை அனுபவிக்கும் சுகத்திற்கு ஈடு இணையே கிடையாது.. அது என்னவோ அந்த இரண்டும் அப்படி பொருந்திப் போயிருக்கிறது. அதுவும் சுவையான டீயாக அது இருந்து விட்டால்.. அந்த சுவையை நுகரும் சுகம் இருக்கே.. அடடா.. இணையே இல்லை.

அந்த நேரத்தில்தான் அந்தப் பெண்.. கையில் குடை இல்லை.. நனைகிறோமே என்ற கவலையும் இல்லை.. அப்படி ஒரு ஆனந்த புன்னகையுடன்.. படு கூலாக நடந்து போன அந்த தருணம்.. மொத்த மழையும் அவர் மீது பட்டுத் தெறிக்க.. அவரது உருவம் மின்னல் போல மனதில் வெட்டி எழுந்து அமிழ.. அத்தனை  பார்வையும் அவர் மீது கவிழ.. "இதுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு".. இப்படியும் சிலர் வாயிலிருந்து வார்த்தைகள் விழ.. எனக்கு மட்டும்.. மழையில் நனைந்த தாமரையாய்... இன்று வரை மனதில் நிற்கும் சில்லவுட் கவிதை அது!

ஒருபக்கம் அலுவலகத்திற்கு நேரமாகிறது என்ற உணர்வு தட்டி எழுப்ப.. அது கிடக்கு.. பெய்யும் மழையை மெல்ல அனுபவிடா தம்பி என்று மனசு மறுபக்கம் தட்டிக் கொடுக்க.. மோக மழையின் தாகம் இன்னும் இன்னும் கூடக் கூட.. தரையெல்லாம் நனைந்து தத்தளிக்க.. தாளமிடும் அதன் ஜாலத்தில் மனது முங்கி எழ.. மொத்தமாக நனைந்து போனது மனசு.

கிட்டத்தட்ட அரை மணி நேரம்.. அடித்து விளையாடிய மழையின் ஆட்டம்.. அதன் பின்னர் மெல்லத் தணிந்தது. மெல்லத் தெளிந்தது வானமும்.. தலைவனும் தலைவியும் சேர்ந்து களைத்துப்  போய் திருப்தியுடன் ஓய்ந்தது போல எனக்குத் தோன்றியது அந்த சூழல்.

எத்தனை மழைக்காலம் வந்தாலும் இதுபோன்ற திவ்ய தருணங்களை மறக்க முடியாது.. மறக்கவும் கூடாது.. இதோ இப்போதும் வருகிறது  ஒரு மழைக்காலம்.. ஆனந்தம் இருக்கிறது.. ஆனால் அனுபவங்கள்தான் முன்பு போல இல்லை.

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்