ஒரு சிறிய தவறுதான்.. ஆனால் இன்று ஒட்டு மொத்த ஸொமேட்டோ நிறுவனத்தையும் ஆட்டம் காண வைத்து விட்டது. "வாயடக்கம்" தேவை.. அதை விட முக்கியம், வாடிக்கையாளர்களை மதிப்பது. இதில் கோட்டை விட்டதால் ஸொமேட்டோ நிறுவனத்துக்கு பாடம் புகட்டி ஒரு காட்டு காட்டி விட்டார்கள் மக்கள்.
வாடிக்கையாளர்கள் சேவைக்காக விழுந்து விழுந்து பாடுபட்ட காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இப்போதெல்லாம் பொருளையும் வாங்கி விட்டு அதில் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்ய அந்த நிறுவனங்களுடன் போராடி போராடி தாவு தீர்ந்து போகும் அளவுக்கு படுத்தி எடுத்து விடுகின்றன பல நிறுவனங்கள்.
சாதாரண பிரச்சினைக்குக் கூட பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எதையுமே எளிதாக பெற முடிவதில்லை. மாறாக, பல்வேறு சண்டைகளுக்குப் பிறகுதான் நிவாரணம் கிடைக்கிறது. ஸொமேட்டோ விவாகரமே அதற்கு சான்று.
ஒரு வாடிக்கையாளர் தான் ஆர்டர் செய்த உணவுப் பொருளில் ஏதோ ஒன்று வரவில்லை, அதற்கு ரீ ஃபன்ட் செய்யுங்கள் என்று கேட்கிறார். சாதாரண பிரச்சினைதான் இது.. ஒன்று ஸாரி சொல்லி விட்டு ரீஃபன்ட் செய்திருக்கலாம் அல்லது நிவர்த்தி செய்கிறோம் சற்று பொறுமை காக்கவும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு மொழியை கையில் எடுத்தது ஏன் என்றுதான் புரியவில்லை.
வாடிக்கையாளர் தான் பேசும் பாஷையை புரிந்து கொள்ள அங்கு ஆள் இல்லையா என்று கேட்கிறார். அதில் தவறு இல்லை.. சென்னைக்காரர் என்றால் அவர் முதலில் தமிழைத்தான் பேச முயற்சிப்பார். எதிர்முனையில் அது புரியாவிட்டால் ஆங்கிலத்துக்கு மாற முயற்சிப்பார். அதைத் தாண்டி வேறு வேறு மொழியெல்லாம் அவர் பேச வேண்டிய அவசியமும் இல்லை, கட்டாயமும் இல்லை. இதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் காமன்சென்ஸ் போதும். ஆனால் அதை விடுத்து, இந்திதேசிய மொழி, அது கொஞ்சமாவது தெரிஞ்சிருக்க வேண்டாமா என்றெல்லாம் பாடம் நடத்துவது சரியான செயலாக தெரியவில்லை.
உ.பியில் போய் ஒருவர் தமிழில் கேட்டால், இந்தியில் கேளுப்பா என்று உரிமையுடன் சொல்லலாம். நீ தமிழில் பேசுவது தவறுப்பா என்றும் கூட கூறலாம். ஆனால் தமிழ்நாட்டுக்காரரிடம் போய் இந்தியில் பேசாமல் எப்படிப்பா என்று கேட்டால் தப்பில்லையா.. லாஜிக் ஏதாவது இருக்கிறதா...?
இப்போது இது பெரும் விவகாரமாக வெடித்து நாடு முழுவதும் டிரெண்ட் ஆகி ஆயிரக்கணக்கானோர் ஸொமேட்டோ செயலியை அன் இன்ஸ்டால் செய்யப் போய் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டது ஸொமேட்டோ. தொழில் முக்கியமா, கெளரவம் முக்கியமா? .. தொழில்தானே முக்கியம்.. எனவே இறங்கி வந்து விட்டது ஸொமேட்டோ. தனது ஊழியர் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதை தமிழிலேயே வெளியிட்டு பகிரங்கமாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
இப்படித்தான் பல நிறுவனங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மொழிகளில் தங்களது வாடிக்கையாளர் சேவையை மேற்கொள்ளாமல் எடுத்ததுமே இந்தியில் ஆரம்பிக்கிறார்கள்.. எனக்குப் புரியாது, ஆங்கிலத்தில் பேசு என்றால்தான் ஆங்கிலத்துக்கு மாறுகிறார்கள். அதிலும் நமது பெயரையெல்லாம் அவர்கள் உச்சரித்து கொச்சைப்படுத்தி கொலை செய்வதைப் பார்க்கும்போது அப்படி பற்றிக் கொண்டு வரும்.. எனது பெயரையெல்லாம் ஒரு வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் கூட சரியாக உச்சரித்ததே இல்லை. குத்திக் குதறி கடைசியில் "ஹரி"வழகன் என்று உருமாற்றியதுதான் மிச்சம்!
தற்போதைய விவகாரத்தால் சம்பந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறியுள்ளது ஸொமேட்டோ. அதைத் தவிர்த்திருக்கலாம். மாறாக அந்த ஊழியருக்கு "எந்த இடத்தில் எப்படி வேலை பார்க்க வேண்டும்" என்ற அடிப்படையை, அறிவுரையை அழுத்தம் திருத்தமாக தெரிவித்து அவரை திருத்த முயற்சித்திருக்கலாம். இது "பான்டமிக்" நேரம். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில் இந்த வேலை நீக்கம் என்பது சரியான செயலாக தெரியவில்லை. அதையும் திருத்திக் கொண்டால் ஸொமேட்டோ நல்ல பிள்ளையாக மக்கள் மனதில் தொடர்ந்து வலம் வரலாம்.
Comments