"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)
"என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?"
லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது.
கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக... "கொரோனா".. 2 வருடங்களில்தான் நம் வாழ்க்கை எப்படி மாறிப் போய் விட்டது. காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி என்று கவிஞர் பாடினார்.. ஆனால் அந்தக் காற்றை சுதந்திரமாக சுவாசிக்க முடியவில்லை.. கடலைப் போய் சந்தோஷமாக வேடிக்கை கூட பார்க்க முடியவில்லை.. கண்களை மூடியபடி பயணித்த ஆதவனுக்குள் அலை கடலென ஆயிரம் சிந்தனைகள்.
சென்னையின் சிணுங்கலான டிராபிக்கில் மெல்ல நீந்தியபடி கார் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தது.. நீண்டு கிடந்த காம்பஸின் கடைக்கோடியில் இருந்த கோவிட் மருத்துவமனை முன்பு போய் நின்றது கார்.. மீண்டும் ஒரு மருத்துவமனை வாசம்.. ஆனால் துணைக்கு ஆள் இருக்கப் போவதில்லை.. தனித்து இருக்க வேண்டும்.. எத்தனை நாட்களோ தெரியாது.. மனசுக்குள் எண்ணங்கள் மாறி மாறி வலை வீச.. மெல்ல ரிசப்ஷனை அடைந்து டாக்டர் முன்பு அமர்ந்தான் ஆதவன்.
"சொல்லுங்க சார்"
"பாசிட்டிவ் சார்"
கையில் இருந்த ரிப்போர்ட்ஸ், சிடி ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட அத்தனையையும் டாக்டரிடம் கொடுத்தான் ஆதவன். வாங்கிப் பார்த்த டாக்டர், "மைல்ட்தான் சார்.. பயப்பட தேவையில்லை. அட்மிட் ஆகணுமா இல்லாட்டி வீட்டிலேயே இருந்துக்கறீங்களா"
"ஒரு வாரத்துக்கு முன்னாடியே பாசிட்டிவ் ஆகி வீட்டுலதான் இருந்தேன் சார். 2 நாளா ஆக்சிஜன் லெவல் 93க்கு கீழே போய்ட்டு வருது.. அதான் இங்கே வந்தேன். அடிக்கடி குளிருது.. உடம்பில் நடுக்கம் வேற வருது அப்பப்ப.."
"ஓ.. ஓகே அட்மிட் ஆகிக்கோங்க.. நோ பிராப்ளம்"
அடுத்த சில நிமிடங்களில் பிராஸஸ் முடிய, பத்திரமாக காரில் அழைத்து வந்த மாப்பிள்ளை அப்பாஸுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு வார்டுக்கு செல்ல லிப்ட்டை நோக்கி நடந்தான் ஆதவன். முதல் மாடியில் வார்டு... பரந்து விரிந்து கிடந்த அந்த முதல் தளத்தில் அப்படி ஒரு மயான அமைதி.. சில வெள்ளுடை தேவதைகள் அங்குமிங்கும் நடக்க நோயாளிகள் யாரையும் காணவில்லை. டூட்டி டாக்டரிடம் முதலில் அனுப்பப்பட்டான் ஆதவன்.
"உட்காருங்க சார்"... மீண்டும் சில பார்மாலிட்டிகள்.
சில நிமிட சம்பிரதாயங்களுக்குப் பிறகு "112-எஃப் வார்டுக்கு இவரை கூட்டிட்டுப் போங்க ராஜிக்கா" என்ற நர்ஸின் குரலுக்குப் பின்னர் ஆயாம்மா முன் நடக்க தனது அறையை நோக்கி நடந்தான் ஆதவன். இரு புறமும் வார்டுகள். கதவுகள் மூடிக் கிடக்க ஒவ்வொரு அறையாக கடந்து வந்து தனக்கான அறைக்கு வந்து சேர்ந்தான் ஆதவன்.
அந்த அறையின் கதவு திறந்தே கிடந்தது. உள்ளுக்குள் இரண்டு படுக்கைகள். இடது ஓரம் இருந்த படுக்கை காலியாக கிடந்தது. வலது ஓர படுக்கையில் ஏற்கனவே ஒருவர் இருந்தார். அலமாரிக்குள் எதையோ குடைந்து கொண்டிருந்த அவர் மெல்ல திரும்பி வாங்க சார் குட் ஈவ்னிங் என்று மெல்லிய புன்னகையுடன் வரவேற்க... ஆதவனுக்குள் கிளர்ந்தெழுந்தது ஒரு நம்பிக்கை.
"ஹாய் சார்... வணக்கம்.. நான் ஆதவன்"
"நான் ரவிச்சந்திரன்.. "
"எப்படி இருக்கீங்க சார்.. எத்தனை நாளாச்சு... இப்போ எப்படி இருக்கு பரவாயில்லையா"
"வந்து 4 நாளாச்சு சார்.. முதல்ல வந்ததை விட இப்போ கொஞ்சம் டயர்டாயிட்டேன்.. அதுக்குக் காரணம் நோய் இல்லை.. அதுக்காக கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் ஊசிதான்.. டெய்லி 2 சார்.. அதுதான் டயர்ட் ஆக்கிருது.. ஆனால் நல்லா கவனிக்கிறாங்க சார்.. அதை பாராட்டியே ஆக வேண்டும்"
"ஓ.. ஓகே ஓகே சார்.. எனக்கு பாசிட்டிவ் ஆகி ஒரு வாரமாச்சு. ஆனால் நேத்து சிடி எடுத்து பார்த்தபோது லங் இன்பெக்ஷன் இருந்தது தெரிய வந்தது. அதனாலதான் முன்னெச்சரிக்கையாக இங்க வந்துட்டேன்"
"என்ன பர்சன்டேஜ் சார்"
"5/25”
"ஓ.. எனக்கு 6.. இது மைல்ட்தான் சார்.. எனக்கு சுகர் இருக்கு, பிபியும் இருக்கு.. பட் எல்லாமே கன்ட்ரோல்ல இருக்கு. பேசிக்கலி நான் அத்லெட் சார்.. 100 மீட்டர் ரன்னிங்கில் ஓடிருக்கேன். 6 அடி உயரம்.. எழுந்து நின்று சல்யூட் வச்சா ஆர்மி ஆபீசர் மாதிரியே இருப்பேன் சார்.. ஆனால் முடியாது.. எனக்கு சில வருடத்திற்கு முன்பு நடந்த ஆக்சிடன்ட்ல கால் பாதிச்சிருச்சு.. ஸோ, வாக்கிங் ஸ்டிக்தான் எனக்கு துணை.. வேகமாக நடக்க முடியாது.. பட் எனக்குள்ள அந்த தைரியம் அப்படியே இருக்கு.. 2 வருஷமா டெய்லி விடாம ஆவி புடிச்சேன்.. எனக்கெல்லாம் கோவிட் வந்திருக்கவே கூடாது.. 2 அலையைத் தாண்டிட்டேன்.. சரி இந்த முறையும் தப்பிச்சுரலாம்னு நினைச்சேன்.. ஆனால் எப்படியோ வந்திருச்சு.. என்ன பண்றது, கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்" என்று சொல்லி சிரித்தார் ரவிச்சந்திரன்.
பல வருடம் பழகியவர் போல அத்தனை இயல்பாக ரவிச்சந்திரன் பேசிக் கொண்டே போக.. ரிலாக்ஸான மனதுடன் அதை புன்னகையுடன் கேட்க ஆரம்பித்தான் ஆதவன்.. மனதுக்குள் அப்பிக் கிடந்த புழுக்கமும், இறுக்கமும் மெல்ல மெல்ல அவிழ்ந்து கலைய.. கட்டிலின் மேல் நன்றாக அமர்ந்து கொண்டான் ஆதவன்.
(தொடரும்)
Comments
ஊசி வன்முறை ஆஸ்பத்திரியில்...