Skip to main content

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)


இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன். 

செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான். 

அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக.

ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை.

"நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா"

"நல்லாருக்கேன் சார்.. புது அட்மிஷனா.."

"ஆமாங்க.."

"நல்லா ரெஸ்ட் எடுங்க"

"தேங்ஸ்ங்க"

தனது அறையின் எதிரில் இருந்த அறையைப் பார்த்தான் ஆதவன். அது பாதி திறந்து கிடந்தது. உள்ளே இரு மூதாட்டிகள். ஒருவர் யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். "டாக்டர் வந்து பார்த்தா.. நல்லாயிட்டேன்னு சொன்னா. 2 நாள்ல அனுப்பிடுவாளாம்.. நான் இப்பதான் சாப்பிட்டேன். நர்ஸ் வந்து மருந்து கொடுத்துட்டுப் போயிருக்கா. ஒரு பிரச்சினையும் இல்லை. சரி சரி படுத்து தூங்கறேன்.. இல்லை இல்லை.. ரொம்ப நேரம் முழிச்சிருக்கலை.. தூங்கிடுவேன்"

அவருக்கு அருகில் இருந்த கட்டில் காலியாக கிடந்தது. மூலையில் கிடந்த இன்னொரு கட்டிலில் இன்னொரு பாட்டி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இரு பாட்டிகளுக்கும் குறைந்தது 80 வயதாவது இருக்கும். ஒருவர் ஆக்டிவாக காணப்பட்ட நிலையில் இன்னொருவர் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தார். இருவரையும் பார்த்து பெருமூச்செறிந்தான் ஆதவன்.

ஆதவன் இருந்த அறைக்கு வலது புறத்தில் யாரும் இல்லை. அறை காலியாக கிடந்தது. விளக்குகள் அனைத்தும் எரிந்தபடியும், ஃபேன் ஓடியபடியும் இருந்தது. அதற்கு எதிர்புற அறை காலியாக கிடந்தது. அந்த அறைக்கு பக்கத்து அறையும் காலி.

அந்த அமைதியான காரிடாரில் சின்னதாக ஒரு வாக் போய் விட்டு மீண்டும் அறைக்குத் திரும்பினான் ஆதவன்.

"உங்க சொந்த ஊர் எது சார்".. ரவிச்சந்திரன் பேச்சைத் தொடர்ந்தார்.

"மதுரை சார்.. சென்னைக்கு வந்து செட்டிலாகி கிட்டத்தட்ட 30 வருஷம் ஆகப் போகுது."

" ஓ அப்படியா.. எனக்கு கும்பகோணம்.. ஆனால் அப்பா அரசுப் பணியில் இருந்ததால் பல ஊர்களுக்குப் போயிருக்கேன், படிச்சிருக்கேன். மதுரையில் பள்ளிப் படிப்பு படிச்சிருக்கேன். திண்டுக்கல்லில் படிச்சிருக்கேன். திருச்சி, சென்னை.. பல ஊர்களில் வாசம். நீங்க என்ன பண்றீங்க?"

"நான் ஜர்னலிஸ்ட் சார்"

"ஓ சூப்பர்.. நான் நியூஸ் ரீடர்.. இப்ப இல்லை..  ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஆல் இந்திய ரேடியோ, சன் டிவி நிறைய சானல்களில் நியூஸ் வாசிச்சிருக்கேன்"

சுவாரஸ்யமாக தொடர்ந்தது அந்த உரையாடல். அப்போது ஒரு நர்ஸ் வந்தார்.

"இங்க ஆதவன் யாரு?"

"நான்தாம்மா"

"அப்பா.. இந்த டேப்ளட்ஸ் சாப்பிடணும்.. காலைல மட்டும் சாப்பிட்டா போதும். வேற மருந்து எதுவும் இல்லை இப்போதைக்கு. நிறைய தண்ணி குடிங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. வேற ஏதாவது கம்ப்ளெயின்ட் இருந்தா சொல்லுங்க"

பெற்ற மகளைப் போல வந்து பாசத்துடன் பேசி மருந்துகளைக் கொடுத்து விட்டுச் சென்ற  அந்த பெண்ணுக்கு தேங்ஸ் சொல்லிவிட்டு மருந்துகளை ஓரமாக வைத்து விட்டு மெல்லப் படுத்தான் ஆதவன்.. தூக்கம் வரவில்லை. ஆனாலும் கண்களை மூடிக் கொண்டான்.. மனதுக்குள் என்னென்னவோ ஓடின.. இலக்குகள் இல்லாத ஓட்டம் போல.. பாகவதர் காலத்து சினிமாக்களில் அடுத்தடுத்து வரும் பாடல்களைப் போல.. சிந்தனைகள் மெகா சீரியல் போல ஓடிக் கொண்டே இருந்தன. அப்படியே மெல்லத் தூக்கம் வரை, ஒருக்களித்துப் படுத்துக் கொண்ட ஆதவன்.. அப்படியே தூங்கிப் போனான்.

ஒரு மணி நேரம் ஓடியிருக்கும்.. திடீரென ஒரு சத்தம்...

" சூப் .. ஜூஸ்.. சூப்.. ஜூஸ்"

யார்ரா  என்று எழுந்து பார்த்தால் ஒரு தள்ளு வண்டியில் இரண்டு சின்ன டிரம்களுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

ரவிச்சந்திரனைத் திரும்பிப் பார்த்தான் ஆதவன்.

"இப்படித்தான் வரிசையா வரும். இப்ப சூப்பும், ஜூஸும் வந்திருக்கு.. வாங்க போய் வாங்கலாம்"

"ஓ.. ஓகே ஓகே."

இரண்டு டம்பளர்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான் ஆதவன்.

ஒரு டம்பளரில் சூப் ஊற்றினார் அந்த சேவகர். இன்னொரு டம்பளரில் ஜூஸ்.

காய்கறி சூப் போல.. நல்லாத்தான் இருந்துச்சு. ஆரஞ்சு ஜூஸ். கொஞ்சம் புளிப்புடன் இருந்தது. இரண்டையும் சற்று இடை வெளி விட்டு குடித்தான் ஆதவன். செல்போனை எடுத்து மணியைப் பார்த்தான் ஆதவன்.. 5.40 என்று காட்டியது. 

"அடுத்து என்ன வண்டி வரும் சார்"

"இனி டின்னர்தான்.. 7, 7.30 மணிக்கு வரும்.. அதுவரைக்கும் நமக்கு ரெஸ்ட் கொஞ்சம் படுத்துத் தூங்கலாம்" சிரித்தபடி கூறினார் ரவிச்சந்திரன்.

பதிலுக்கு சிரிப்பை சிந்திய  ஆதவன் மீண்டும் காரிடார் பக்கம் நடந்தான். இடது மூலையில் இருந்த ஜன்னல் அவனை அழைத்தது. மெல்ல நடையை அதை நோக்கி வீசினான். ஜன்னலுக்குப் போய் வெளியில் எட்டிப் பார்த்தான். நேற்று வரை அலட்சியமாக பார்த்த வெளியுலகம் இப்போது அச்சம் தருவதாக இருந்தது. எத்தனை எத்தனை அபாயங்களை தன்னுள் புதைத்துக் கொண்டுள்ளது இந்த உலகம்.. இத்தனைக்கும் மத்தியில்  ஓடிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு வாழ்க்கையும்.. துரோகங்கள், வன்மங்கள், சதிகள், சந்தோஷங்கள், துக்கங்கள், வேதனைகள், மகிழ்ச்சிகள், நட்பு, காதல், குடும்பம்.. எதற்காக வாழ்கிறோம்.. என்ன இலக்கை நோக்கி நமது பாதைகள்  போகின்றன.. இந்த குறுகிய வாழ்க்கையில்தான் எத்தனை விஷமங்கள்.. நாம் நல்லா இருக்கணும்.. நாம் மட்டும் நல்லா இருந்தா போதும்.. நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் கவலை இல்லை.. பெரும்பான்மையானோரின் எண்ணம் இப்படித்தானே இருக்கிறது.. சுயநலங்களின் மொத்த ரூபமாகத்தான் பலரும் இருக்கிறோம்... எத்தனை விசித்திரமானது இந்த வாழ்க்கை.. எண்ணங்கள் தீப்பொறியாய் கிளர்ந்து எரிய.. நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தான் ஆதவன்.

(தொடரும்)


3வது பகுதி

Comments

Popular posts from this blog

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க

"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)

 "என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?" லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது. கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக.