வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும்.
என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்!
இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள். அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன்.
ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்கும் உண்டு. அதில் ஒன்று, Neat and Clean Journalism.. ஒன்றைத் தர வேண்டும், புதிய திறமைகளை கண்டுபிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும், வாய்ப்பில்லாதவர்களுக்கான எழுத்துச் சரணாலயத்தை உருவாக்க வேண்டும் என்பது.. இதெல்லாம் மொத்தமாக சேர்ந்து உருவானதுதான் "தென்தமிழ்".. என் கனவின் மொத்த வடிவமும் இந்த இணையதளமாக இன்று மலர்ந்து மணம் பரப்ப ஆரம்பித்திருக்கிறது.
புதிய குழந்தை அல்லவா.. இப்போதுதான் தவழ்ந்து கொண்டிருக்கிறது.. ஆனால் எழுந்து நிற்கவும், சுவர் பிடித்து நடக்கவும்.. வேகமாக முயல ஆரம்பித்திருக்கிறது.. கைக்குக் கிடைத்த பொம்மையை வைத்து தத்தக்கா புத்தக்கா என்று விளையாடிக் கொண்டிருக்கிறது.. ஆனால், பல முனைகளிலிருந்தும் கிடைக்கும் பாராட்டுகளும், "நல்ல முயற்சி" என்ற தட்டிக் கொடுத்தல்களும், "ஜெயிக்கும்" என்ற நம்பிக்கை வார்த்தைகளும், மனசுக்கு சந்தோஷத்தை தருகிறது.
குடும்பத்தில் ஆதி முதல் அந்தம் வரை அத்தனை பேரும் "வாத்தியார்"கள் என்பதால் எனக்குள்ளும் அது தொற்றிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது.. "நீ போ வேண்டாம்" என்று சொன்னாலும் கூட அது போவதில்லை.. இப்போது வரை நானும் ஒரு வாத்தியாராகத்தான் உலா வந்து கொண்டிருக்கிறேன்.. எத்தனையோ பேரை உருவாக்கி, ஆளாக்கி, வளர்த்து விட்டாச்சு.. ஆனால் அப்போதெல்லாம் "யாரோ கட்டி வைத்த பள்ளிக்கூடத்தில்" வேலை பார்த்த வாத்தியாரின் நிலையில்தான் இருந்தேன்.. ஆனால் இப்போது நானே கட்டிய பள்ளியில் இருந்து கொண்டு சிஷ்யப் பிள்ளைகளை உருவாக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும், திருப்தியும் இருக்கிறதே.. ஆஹா.. அந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தையே கிடையாது.
முன்பு எனக்குக் கிடைத்த சிஷ்யப் பிள்ளைகள் ஏதாவது ஒரு வகையில் பால பாடம் பயின்றவர்களாக இருந்தார்கள்.. ஆனால் இப்போது கிடைத்திருப்பவர்கள்.. "அ முதல் ஃ" வரை முதல் முறையாக படித்தவர்கள்.. படித்த வேகத்தில் அதில் கை தேர்ந்தவர்களாக மாறி, அனுபவம் வாய்ந்தவர்களின் எழுத்துக்களுக்கு சமமாக எழுதும் அதி வேக வளர்ச்சியைக் காட்டி, எனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் என்பது மிகப் பெரிய சந்தோஷம்.. இந்த பிறந்த நாளில் உண்மையில் இவர்கள்தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய "பர்த்டே கிப்ட்".. இப்படி ஒரு கிப்ட் இதுவரை எனக்கு எந்த ஒரு பிறந்த நாளிலும் கிடைத்ததில்லை. அந்த வகையில் இந்த பிறந்த நாள் மிக மிக ஸ்பெஷலானது!
மீனாட்சி, வனிதா, மஞ்சுளா தேவி, லட்சுமி பாலா.. இந்த சிஷ்யப் பிள்ளைகளை உலகம் முழுமைக்கும் அறிமுகப்படுத்துவதை விட சிறந்த பெருமை எனக்கு இருக்க முடியாது. யாருக்குமே பத்திரிகைத்துறையில் பெரிய அனுபவம் கிடையாது.. சிலர் இதுவரை எழுதியதே இல்லை. ஆனால் கடந்த ஓராண்டில் இந்த நால்வருமே அருமையாக எழுதி வருகின்றனர் என்பது அவர்களுக்குள் புதைந்து கிடந்த திறமைக்கு மிகப் பெரிய அங்கீகாரம். மறைந்து கிடந்த திறமையை வெளிக் கொண்டு வந்தது மட்டுமே எனது பணி.. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு மேலெழும்பி வந்தது அவர்களின் சாமர்த்தியம். இந்துமதியும்.. இந்த வரிசையில் விரைவில் உருவெடுப்பார்.. மிகப் பெரிய அளவில் இவர்கள் வளருவார்கள்.. ஊடகத்துறையில் வலுவாக உலா வருவார்கள்.. நம்பிக்கை இருக்கிறது.. காரணம், இவர்கள் எனது சிஷ்யர்கள்!
எனது பிள்ளைகள் கார்த்தி, பாலமுருகன்.. பிறகு, எனக்குக் கிடைத்த அருமையான "டெக்னிக்கல் டீம்"... இதுபோல, என்னைச் சுற்றிலும், எனக்கு அரணாக, உறுதுணையாக, அரவணைப்பாக, சோல்ஜர்களாக, தளபதிகளாக எப்போதும் உடன் நிற்கும் எத்தனையோ அன்புள்ளங்கள்தான் என்னை மேலும் மேலும் உத்வேகத்துடன் இயங்க வைக்கின்றன.. இதுவரை கிடைத்திராத அற்புத உறவு இது.. இது டீம் அல்ல.. "என் குடும்பம்".. என்னைப் புரிந்து கொண்டு, எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது குடும்பம்.. இப்படி, எல்லா வகையிலும் இந்த பிறந்த நாள் எனக்கு மிகப் பெரிய சந்தோஷ நாள்.
எதையும் தடுக்க முடியாது, எதையும் முடக்க முடியாது, எதையும் முடிக்கவும் முடியாது.. இயற்கை ஒரு கதவை மூடினால், இன்னொரு கதவைத் திறந்து காட்டும்.. அதுவும் மூடினால்.. மேலும் ஒரு கதவு திறக்கும்.. மூட மூட கதவுகள் திறந்து கொண்டேதான் இருக்கும்.. ஒன்று நமக்கான பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது புதிய பாதையை உருவாக்க வேண்டும்.. நான் "உருவாக்கி"ப் பழகியவன்.. எனது புதிய ஆக்கம்.. பல சாதனைகளுக்கான ஆரம்பமாக இருக்கும்.. அடுத்தடுத்து வளர்ச்சிகளை தொட்டபடி இது தொடரும்..!
வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை.. அனுபவித்தபடி.. அழகாக பயணிப்போம்!
எனக்கு மறக்க முடியாத பிறந்த நாள் மகிழ்ச்சியைக் கொடுத்த அத்தனை பேருக்கும் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து .. அழகான தேங்க்ஸ்!
Comments