Skip to main content

"என்னப்பா கிளம்பிட்டியா".. உலாப் போகும் உணர்வுகள் (14)



இன்னும் ஒரு புத்தம் புது காலை.. இதமான குளிருடன்.. ஜில்லென்ற உற்சாகத்துடன்.. 7வது நாளின் காலையை வரவேற்றான் ஆதவன்.

இத்தனை நாட்கள் ஒரு மருத்துவமனையில் தங்கியது இதுவே முதல் முறை.. இனி மேல் இப்படி ஒரு நிலை வரக் கூடாது.. எனக்கு மட்டுமல்ல.. யாருக்குமே என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ஆதவன்.. அன்று காலை அருமையான டிபன்.. அவனுக்குப் பிடித்த உப்புமா, சட்னியுடன்.

உப்புமா என்றால் அவனுக்கு ரொம்பப் பிரியம். பலரும் உப்புமாவைப் பார்த்தால் போட்டது போட்டபடி தலை தெறிக்க ஓடுவார்கள்.. ஆனால் இவனுக்கோ உப்புமா என்றால் வாயில் நீர் ஊற ஆரம்பித்து விடும். மதுரை பக்கம் உப்புமாவை சர்க்கரை தொட்டுத்தான் சாப்பிடுவார்கள். ஆனால் சில காலம் பெங்களூரில் இருந்தபோது, அங்கு உப்புமாவை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டுப் பழகி.. இப்போது சட்னியுடன்தான் உப்புமாவை சாப்பிட முடிகிறது. 

நர்ஸ் வந்து வழக்கமான செக்கப்பை செய்தார். 

"எப்பம்மா டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க"

"மதியம் சீஃப் டாக்டர் வந்ததும் பண்ணிடுவாங்கப்பா"

"ஓகேம்மா"

வீட்டுக்குப் போன் செய்து சொல்லியாச்சு. துணிமணிகளையும், இதர பொருட்களையும் எடுத்து அடுக்கி வைக்க ஆரம்பித்தான் ஆதவன்.. இளங்கோவன் மெல்ல நடந்து வந்தார்.

"என்னப்பா கிளம்பிட்டியா"

"ஆமாய்யா.. டாக்டர் வந்து பார்த்துட்டுப் போனதும் கிளம்ப வேண்டியதுதான்.. வாங்க உட்காருங்க"

"இருக்கட்டும்.. உட்கார்ந்தாலும் சிரமமா இருக்கு. படுத்தாலும் சிரமமா இருக்கு.. சரியா தூங்கவும் முடியலை.. டாக்டர் கிட்ட கேட்கணும். ஏன் இப்படி பண்ணுதுன்னு. நான்லாம் சுறுசுறுப்பா இருக்கிற ஆளு.. இங்க ரொம்ப சிரமமா இருக்கு" 

"இந்த வியாதி வந்தால் இப்படித்தான் கொஞ்சம் படுத்தி எடுக்கும். இறுமல் இல்லைல்லை.. அதனால கவலைப்படத் தேவையில்லை.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.. தூக்கம் வராட்டியும் பரவாயில்லை, சும்மாவாலது படுத்திருங்க.. உடம்பு ரெஸ்ட் எடுத்தால்தான் நல்லது. கஞ்சி சாப்பிட்டாச்சா"

"அட அது எங்க வந்துச்சு.. போய் இந்த புள்ளைகளை கேட்கணும்"

"பசங்க யாரும் வந்து பாத்தாங்களாய்யா"

"இல்லப்பா.. நான்தான் வர வேண்டாம்னுட்டேன்.. எதுக்கு வந்துக்கிட்டு.. அதான் இங்கேயே எல்லாம் பண்றாங்கள்ள.. எதுக்கு அலைஞ்சிக்கிட்டு"

"அதுவும் சரிதான்.. உள்ளேயும் வந்து பார்க்க முடியாது.. ஜன்னல் வழி பேச்சு மட்டும்தான் முடியும்"

"அதெல்லாம் உடம்பு சரியாய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டேன்.. அது போக இங்க என்னெல்லாம் எனக்குப் பண்றாங்களோ அதையெல்லாம் உடனே போன் போட்டு சொல்லிடுவேன்.. அதனால் பயம் இல்லை"

"சூப்பர்..ய்யா"

"சரி வர்றேன்ப்பா".. கிளம்பிச் சென்றார் இளங்கோவன்.

இளங்கோவன் அந்தக் காலத்து வயதுக்காரர். மன தைரியம் அதிகம் இருக்கிறது.  இந்த வயதிலும் தொப்பை இல்லாமல் நல்ல உடல் தேகத்தோடு இருக்கிறார். கூன் விழவில்லை, நன்றாக நிமிர்ந்து நடக்கிறார். அதை விட தெளிவாக பேசுகிறார். உடல் வியாதிதான் அவரை முடக்கியிருக்கிறதே தவிர மனதளவில் சூப்பர் தைரியமாக இருக்கிறார்.. இவரிடமும் கற்றுக் கொள்ள விஷயம் இருக்கிறது.. புன்னகைத்துக் கொண்டான் ஆதவன்.

ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருக்கிறது.. கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கும் வரை நாம் தெளிவாக இருக்க முடியும்.. நம்மிடமிருந்தும் நாலு விஷயங்களை மற்றவர்கள் கற்க வாய்ப்பும் உருவாகும். தேடலும், கற்கும் வேட்கையும் இல்லாத யாரும் வளர்ச்சி அடைய முடியாது.. மனதளவில். இந்த மருத்துவமனைக்கு வந்தது முதல் தினசரி ஏதாவது ஒன்றைக் கண்டும் கேட்டும் கற்கும் வாய்ப்பை பெற்றுக்கொண்டேதான் இருந்தான். நிகழ்வுகள் இல்லாத நாளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பக்கத்து அறை வக்கீலின் மனைவி அறை பக்கம் வந்தார்.

"ஒரு வழியா கிளம்பியாச்சு போல"

"ஆமாம்மா.. நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க. சார் எப்படி இருக்கார்.. டாக்டர் கிட்ட பேசுனீங்களா"

"பேசிட்டேன்.. எனக்கு சரியாய்ருச்சு.. பட்.. அவரை இப்போதைக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்லிருக்காங்க.. அவருக்காக நானும் கூடவே இருக்கணும். இருக்க அனுமதிப்பாங்களான்னு தெரியலை.. கேட்டுப் பார்க்கணும்"

"அதெல்லாம் இருக்க விடுவாங்க.. அவரும் சீக்கிரம் வார்டுக்கு வந்துட்டா.. பிரச்சினை இல்லை.. 2, 3 நாள்ல போயிடலாம்.. கவலைப்படாதீங்க"

"இது திரும்ப வருமா.. வரும்னு சிலர் சொல்றாங்களே"

"வராதுன்னு சொல்ல முடியாது. வரலாம், வராமலும் போகலாம். ஆனால் உடனே வராது. இப்போது இம்யூனிட்டி டெவலப் ஆகியிருக்கும். நாம தொடர்ந்து கவனமா இருந்தா போதும், மறுபடியும் வராது. நீங்க இப்போது பூஸ்டர் ஊசியெல்லாம் போடத் தேவையில்லை"

"ஓஹோ.. ஆமா,  சாப்பாடு பத்தியெல்லாம் டூட்டி டாக்டர் சொன்னாங்க"

"ஒரு மாதத்துக்குக் கவனமா இருங்க. உங்களோட ஏஜ் ஒரு பிரச்சினை.. கவனமா இருந்தால் போதும். திரும்ப வராதுன்னு நம்புங்க.. வராது.."

"கண்டிப்பா.. நீங்களும் கவனமா இருங்க சார்"

"எஸ் மா"

இது டாக்டர் வரும் நேரம்.. தயாராக இருப்போம் என்று கட்டிலில் கிடந்த பேகை எடுத்துக் கீழே வைத்தான். எடுத்து வைத்து ஒழுங்குபடுத்திய அதே நேரத்தில் டாக்டர் வந்து விட்டார். வழக்கமான விசாரிப்புகள்.. கிளம்பிப் போய் விட்டார்.. அவர் போனதும் சற்று நேரத்தில் டூட்டி டாக்டர் வந்தார்.. 

"சார் நீங்க இப்பவே கிளம்பலாம்..  ரெடியாய்ட்டு சொல்லுங்க.. டிஸ்சார்ஜ் ரிப்போர்ட் தருவாங்க"

"ஓ.. தேங்க்ஸ் டாக்டர்"

அப்பாஸுக்கு போனைப் போட்டான். கிளம்பி வரச் சொல்லி விட்டு மிச்சம் கிடந்த பொருட்களை எடுத்து அடுக்கி வைத்து விட்டு, காருக்காக காத்திருந்தான். முக்கால் மணி நேரமாகியிருக்கும்.. 

"சார் வந்துட்டேன்" .. அப்பாஸிடமிருந்து  அழைப்பு.

நர்ஸிடம் சென்று டிஸ்சார்ஜ் ரிப்போர்ட் கேட்டபோது 5 நிமிடம் வெயிட் செய்யச் சொல்லவே, அங்கேயே அமர்ந்தான். ரிப்போர்ட் ரெடியானதும், அதில் உள்ள மருந்துகள் குறித்து விளக்கிய நர்ஸ்,  ஒரு மாதம் கழித்து போஸ்ட் கோவிட் மருத்துவமனைக்கு வந்து செக்கப் செய்து கொள்ளுங்க என்ற அறிவுறுத்தலுடன் விடை கொடுக்க, அவருக்கும், அங்கிருந்த பிற நர்ஸ்களுக்கும் "ரொம்ப நன்றிம்மா.. நல்ல கவனிப்பு.. நல்ல ட்ரீட்மென்ட்.. நல்லாருங்க" என்று சொல்லி விட்டு நகர்ந்தான்.

பேகை ஆயாம்மா எடுத்துக் கொள்ள, அங்கிருந்து கிளம்பியபோது, மனதை ஏதோ பிசைவது போலவே இருந்தது. வீட்டுக்குப் போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும்.. இன்னும் வீட்டுக்குத் திரும்ப முடியாமல் படுக்கையில் காத்திருக்கும் ஜீவன்களும் நலமாக திரும்பட்டும் என்ற வேண்டுதலுடன் அங்கிருந்து கிளம்பினான் ஆதவன்.

ஆஹா.. வெளிக்காற்று எத்தனை இதமாக இருக்கிறது.. ஒரு வாரமாச்சே இதை சுவாசிச்சு.. ரசித்து.. லயித்து.. மெய் மறந்து.. இத்தனைக்கும் நல்ல வெயில் வெளுத்துக் கொண்டிருந்தது.. ஆனால் அந்த வெயிலும் கூட சுகமாகவே தெரிந்தது.. கார் வீட்டை நோக்கிக் கிளம்ப.. மனசோ படித்த பாடங்களை ரீவைன்ட் செய்து கொண்டே வந்தது. 

வந்தாச்சு.. வீட்டுக்கு.. காரை விட்டு இறங்கி கேட்டைத் திறந்து  கதவை நோக்கிப் போனபோது அப்படி ஒரு நிம்மதி..  வீட்டுக்குள் போனதும் அகிலனைப் போய்ப் பார்த்த பிறகுதான் மனசுக்குள் நிம்மதி வந்து உட்கார்ந்தது.

"என்ன டாடி.. வந்தாச்சா... "

"எப்படிப்பா இருக்கே"

"நான் நல்லாதான் இருக்கேன்.. இருந்தாலும் நாம டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணிக்கனும். ஏன்னா.. உங்களுக்கு அம்மா, தாத்தாவுக்கு வந்துருச்சுல்ல.. அதனால டிஸ்டன்ஸ் வச்சுக்கிட்டாதான் எனக்கு வராது"

"சரிடாப்பா"

பையன் ரொம்ப விவரமாத்தாய்யா இருக்கான்.. அமைதி நிறைந்த மனதுடன் ஒரு செல்பியை எடுத்துப் பார்த்தபோது முகத்தில் முளைத்திருந்த தாடி முடிகளுக்கு மத்தியில் பதுங்கியிருந்த களைப்பு.. மெல்லப் புன்னகைத்தது

(தொடரும்)


இறுதிப் பகுதி

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்