அறை எண் 112 எச்.
கதவு மூடியிருந்தது. மெல்லத் தட்டி விட்டு கதவைத் திறந்தான் ஆதவன்.
ஆதி நாராயணனின் மனைவி எழுந்து வந்தார். கதவை நன்றாகத் திறந்தபடி உள்ளே நுழைந்த ஆதவன், "அம்மா நான் ஆதவன். முனியாண்டி அவரோட மருமகன்" என்று கூறியதும் அந்த அம்மா முகத்தில் புன்னகை.
"வாங்க சார்"
அதற்குள் படுக்கையில் ஒருக்களித்துப் படுத்திருந்த ஆதி நாராயணன் திரும்பிப் பார்த்தார்.
"சார் நல்லாருக்கீங்களா.."
"வாங்க தம்பி.. நல்லாருக்கேன்.. முனியாண்டி ஐயாவோட மருமகனா"
"ஆமா.. எப்படி இருக்கீங்க"
"பரவாயில்லை. மாமா சொல்லித்தான் நாங்க வந்தோம். வாயெல்லாம் கசக்குது. எதையும் சாப்பிட முடியலை.. வாந்தியா வருது. இருக்கவே பிடிக்கலை"
அவரது மனைவி "அரசு மருத்துவமனையில் சாப்பாடு இப்படித்தானே சார் இருக்கும். அதைச் சொன்னா இவருக்கு கோபம் வருது. சாப்பிட்டுத்தானே ஆகணும்"
"முடியலங்க.. சாப்பிட்டாலே வாந்தி வருது"
"சாப்பிடுவதற்கு முன்னாடி ஒரு மாத்திரை கொடுத்திருப்பாங்களே.. அதைப் போட்டீங்களா"
"அதைப் போட்டும் கூட வாந்தி வருது தம்பி"
"சரியாய்ரும்.. உடம்புல வைரஸ் இருப்பதால் இதெல்லாம் நடக்கும். பயப்படாதீங்க.. வைரஸ் தாக்கம் குறையக் குறைய எல்லாம் சரியாய்ரும்"
ஆதி நாராயணன் மனைவி முகத்தில் திடீரென சோகம்... கண்களில் கண்ணீர் துளிர்க்க மாறியிருந்தார்.
"என்னாச்சும்மா"
"பையன் குடும்பத்தோட வந்திருக்கான். செவ்வாய்க்கிழமை காலைல சவூதி போகணும்.. எங்களைக் கிளம்பி வரச் சொல்றான்.. எப்படிப் போறது.. இங்க டாக்டர் கிட்ட கேட்டா செவ்வாய்க்கிழமை சாயந்திரம்தான் போகணும்னு சொல்லிட்டாங்க.. அவன் போகாட்டி வேலை போயிரும்கிறான்.. என்னத்த சொல்றதுன்னே தெரியலை"
"சரி அவங்க போறபடி போகட்டும்.. அதை ஏன் தடுக்கறீங்க.. எப்படி இருந்தாலும் நீங்க குணமானாதான் இவங்க விடுவாங்க. இல்லாட்டி விட மாட்டாங்க. அதை விட முக்கியம், இங்க கவனிக்க ஆள் இருக்கு.. வீட்டுக்குப் போயிட்டா யார் பார்ப்பாங்க.. அதனால அவசரப்படாதீங்க"
"நான் அவசரப்படலை சார்.. இவர்தான் புலம்பிட்டே இருக்கார்"
"அதுக்கில்ல தம்பி.. உரிய நேரத்தில் போகாட்டி வேலை போயிரும்கிறான். வீட்டை விட்டுட்டு எப்படி போறதுன்னு தவிக்கிறான்"
ஆதி நாராயணனுக்கு 3 மகன்கள். 3 பேருமே வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். ஆதி நாராயணனும், அவரது மனைவியும் மட்டும்தான் தனியாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது அவர்களது வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியிருக்கும் குடும்பம்தான்.
தந்தையும், தாயும் கொரோனாவில் சிக்கியுள்ள நிலையில், மருத்துவமனையிலிருந்து கிளம்பி வரச் சொல்லி வற்புறுத்தும் மகனின் நிலையை என்னவென்று சொல்வது.. உயிரைப் பணயம் வைத்து மருத்துவமனையிலிருந்து கிளம்பிப் போகத் துடிக்கும் இந்த வயதானவர்களின் நிலையை என்னவென்று வர்ணிப்பது.. காலம் சில நேரம் இப்படித்தான் விஷமத்தனமாக விளையாடும்.
இருவரையும் அமைதிப்படுத்தி விட்டு, சாப்பிட்டு அமைதியா தூங்குங்க.. சீக்கிரம் சரியாகிட்டா நீங்க முன்னாடியே கூட போயிடலாம்.. தைரியமா இருங்க என்று கூறி விட்டு ஆதவன் தனது அறைக்குத் திரும்பினான். மணி எட்டரைக்கு மேல் ஆகி விட்டது. குடிக்க தண்ணீர் இல்லை. வாட்டர் பிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க போனான்.
விசாலமான அந்த ஹாலின் ஓரத்தில் வாட்டர் பியூரிபையர் இருந்தது. அங்கு ஒரு பெரியவர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். கை நடு நடுங்க தண்ணீர் பிடித்தபடி இருந்தார். அவரது சிரமத்தைப் பார்த்த ஆதவன், அவரிடம் போய் "ஐயா அதைக் கொடுங்க" என்று வாட்டர் பாட்டிலை வாங்கி அதில் தண்ணீர் பிடித்துக் கொடுத்தான்.
"தம்பி தண்ணி சூடா இருக்கே" - இது பெரியவர்.
"ஆமாங்க, சுடு தண்ணீர்தான் குடிக்கணும்.. சாதா தண்ணீர் இப்போதைக்குக் குடிக்காதீங்க. பிளாஸ்க் இல்லையா"
"இல்லையே.. எடுத்துட்டு வரலைப்பா"
"வீட்டுக்குப் போன் செய்து கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க. பிடிச்சு வச்சுக்கிட்டா அப்பப்ப வந்து அலைய வேண்டியிருக்காது.." சரிப்பா என்று கூறியபடி அவர் அகன்று சென்றார். இங்கு யாருக்குமே அட்டென்டர் கிடையாது. தனியாகத்தான் இருந்தாக வேண்டும். பெரும்பாலும் வயதானவர்கள்தான். ஒவ்வொருவரும் படும் சிரமங்களைப் பார்த்தபோது ஆதவனுக்கு மலைப்பாக இருந்தது. நமக்கு வயசாகும்போது எப்படி இருக்கப் போறோமோ என்ற பீதியும் கூடவே கிளம்பி வந்து இதயத்தை குத்தி விட்டுப் போனது.
தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வந்தவனை எதிர்கொண்டு நிறுத்தினார் நர்ஸ்.
"அப்பா.. உங்களுக்கு அட்மிஷன் போட்டப்போ பிளட் சாம்பிள் எடுத்தாங்களா"
"இல்லையேம்மா.."
"சரி நாளைக்கு காலைல பிளட் டெஸ்ட், இசிஜி இரண்டும் எடுப்பாங்க.. நீங்க சிடி எடுத்துட்டதால.. அது மட்டும் இருக்காது. சாப்பிட்டீங்களா?" என்று கூறி நகர்ந்தார் அந்த நர்ஸ்.
"தேங்க்ஸ்மா.. சாப்பிட்டாச்சும்மா.. படுக்கப் போறேன்"
பதிலளித்து விட்டு அறையை நோக்கி நடந்தான் ஆதவன்.. தனது அறைக்கு அருகே வந்தபோது பக்கத்தில் இருந்த அறையில் ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்தான். புதிய நோயாளி. 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணி போல தெரிந்தது. ஆதவனைப் பார்த்தும் வெளியே திரும்பிப் பார்த்தார். அவருக்கு "ஹலோ" என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் நுழைந்தான் ஆதவன். பதிலுக்கு அவரும் "ஹலோ" சொன்னார். பரஸ்பர விசாரித்தல்களும், அக்கறைகளும், பல நூறு மாத்திரைகள் செய்யும் வேலையைச் செய்யும் என்பது ஆதவனின் நம்பிக்கை.
பிளாஸ்க்கை கட்டில் மீது வைத்த ஆதவன், போட வேண்டிய மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தண்ணீரை குடித்து விட்டு பிளாஸ்க்கை மூடி கீழே வைத்தான்.
தூங்கலாமா என்று யோசித்தபோது தூக்கம் கண்களை இன்னும் தொடாததை உணர்ந்தான்.. சரி ஜன்னலுக்குப் போவோம்.. கொஞ்சம் பொழுதாவது போகும் என்று நினைத்து வெளியே வந்து ஜன்னலை நோக்கி நடந்தான். குளிர் காற்றை உள்ளுக்குள் அனுப்பியபடி வசீகரமாக வரவேற்றது அந்த ஜன்னல். வெளியே நல்ல வெளிச்சம். வளாகத்தை விட்டு சற்று தூரப் பார்த்தான் ஆதவன்.. நல்ல இருட்டு.
மிகப் பெரிய காம்பஸ் அது. வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட தொற்று நோய் தடுப்பு ஆய்வு நிலையம் இது. இப்போது கொரோனா காலம் என்பதால் அதற்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது. சென்னைக்கு வந்த புதிதில் இந்த மருத்துவமனை வளாகத்திற்கு ஒருமுறை செய்தி சேகரிப்பு தொடர்பாக வந்திருந்த நினைவு வந்தது. அப்போது இந்தக் கட்டடம் எல்லாம் கிடையாது. எல்லாமே பழைய கட்டடம்தான்.
அது நல்ல மழைக்காலம். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ஆட்டோவில் உள்ளே வந்து இறங்கிய ஆதவன் நன்றாக நனைந்திருந்தான். அருகில் இருந்த ஒரு பழைய கட்டடத்தின் போர்ட்டிகோவில் ஒண்டிக் கொண்ட அந்தக் காட்சி இப்போது நினைவுக்கு வந்தது. எதற்காக வந்தோம் என்பது சரியாக நினைவில் இல்லை. ஆனால் அந்த நேரத்தில் கிங் இன்ஸ்டிடியூட் முழுவதுமே அப்படி ரம்யமாக காணப்பட்டது. அந்த மழைப் பொழிவுக்கு மத்தியில் இயற்கை வரைந்த ஓவியம் போல காணப்பட்டது அந்த மருத்துவமனை வளாகம்.. செடிகள், மரங்கள் நிரம்பிய அழகிய வளாகம் அது. அதை ரசித்துக் கொண்டு நின்றிருந்தபோது, கையில் இருந்த ஸ்கிரிப்ளிங் பேடிலேயே சில கவிதைகளையும் எழுதியது நினைவுக்கு வந்தது ஆதவனுக்கு. அது ஒரு காலம்.. அழகிய இளமைக்காலம்.. பார்த்தது, படித்தது, பிடித்தது எல்லாமே கவிதைகள்தான் அப்போதெல்லாம். கவிதை எழுதாத நாள் இல்லை.. நிகழ்வுகள் இல்லை. ஜன்னல் வழியாக ஆதவன் விட்டெறிந்த பெருமூச்சு அந்த இரவையும் சூடாக்கியிருக்கும்.
பழைய நினைவுகளிலிருந்து மீண்ட ஆதவன் மீண்டும் அறைக்குத் திரும்பினான். தனது கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டன், விளக்குகளை அணைத்தான்.. கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் "முதல் இரவு".. உதடுகளில் புன்னகை விரிய.. அப்படியே படுத்து கண்களை மூடிக் கொண்டான்.. கனவுகள் விரிந்தன.
(தொடரும்)
Comments