Skip to main content

உடல் களைத்தாலும்.. உயிர் சலிக்கவில்லை.. இதுதான் "அற்புதம்"!


ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும்.. நிறைய பேரிடம் இந்த இளக்காரமான கேள்வியும், பார்வையும் இந்தக் காலத்திலும் கூட பற்றிக் கிடப்பதைப் பார்க்க முடியும்.. ஆனால் ஒரு பெண்ணாக, ஒற்றை மனுஷியாக, முழுக்க முழுக்க தாய்மை என்ற ஒரே ஆயுதத்துடன்.. அந்தத் தாய்ப் பாசம் கொடுத்த உந்துதலை மட்டும் துணையாகக் கொண்டு, விடாப் பிடியாக, வைராக்கியத்துடன் போராடி தன் மகனை மீட்டுக் கொண்டு வந்து சிறை அறையை விட "கரு"வறையே உயர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறார் அற்புதம் அம்மாள்.

அறிவு விடுதலையில் எல்லோரையும் விட, மிகப் பெரிய பாராட்டுக்குரியவர் அற்புதம் அம்மாள்தான். இப்படி ஒரு தீரத் தாயை வரலாற்றில்தான் நாம் படித்துள்ளோம். இன்று நிஜமாகவே பார்த்து விட்டோம்.. அறிவு சிறைக்குள் போன நிமிடத்திலிருந்து தொடங்கியது அற்புதம் அம்மாளின் கண்ணீர்ப் போராட்டம். என் மகன் என்ன தவறு செய்தான்.. ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்தது குற்றமா என்ற குமுறலுடன் வெடித்துக் கிளம்பினார் அந்தத் தாய்.

நடந்த சம்பவங்களை யாரும் நியாயப்படுத்தவில்லை, நியாயப்படுத்தவும் முடியாது.. ஆனால் "என் மகன்.. என் ரத்தம்.. என் உயிர்.. என் பிள்ளை" என்ற உணர்வை யாரும் தடுக்க முடியாது.. அப்படித்தான் துடித்தார் அற்புதம் அம்மாள்.. கால் கடுக்க நடந்தார்.. ஓயாமல் அலைந்தார்.. எல்லாக் கதவுகளையும் போய்த் தட்டினார்.. சலிக்காமல் முயற்சித்தார்.. ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தபோதெல்லாம் சோர்ந்தாரே தவிர தளர்ந்து போகவில்லை. இன்னும் இன்னும் வேகத்துடன் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஓடிக் கொண்டே இருந்தார்.

ஜோல்னாப் பையுடன், களைத்துப் போன முகத்துடன், "என் மகன் எனக்கு வேணும்" என்ற ஒற்றை கோரிக்கையுடன் அந்தப் பெண்மணி அலைந்தபோதெல்லாம் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் அவருடனேயே திரிந்தது.. சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் அவருக்காக தன்னால் ஆனதைச் செய்து கொண்டே இருந்தது.. இதெல்லாம்தான் அற்புதம் அம்மாளின் பலமாக அமைந்தது.

அறிவு வந்து விடுவான்.. அறிவு வந்து விடுவான் என்ற ஒற்றை நம்பிக்கையில்தான் அந்த வயதான மனுஷியின் உயிர் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. உடல் நலிந்தாலும்.. உள்ளம் தளராமல் தொடர்ந்து போராடிக் கொண்டே வந்தார். "எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகி விடும்" என்று முழங்கிய வாய்கள் எல்லாம் இவரது தளராத, அயராத, தீரமான போராட்டத்தைப் பார்த்து நிச்சயம் வியந்திருக்கும். அத்தனை பேருக்கும் அற்புதம் அம்மாள் ஒரு உதாரணம்.

தன் பிள்ளைக்காக தாய்மை எந்த அளவுக்கு துடிக்கும், எந்த அளவுக்குப் போராடும், எந்த அளவுக்கு தவிக்கும், எந்த அளவுக்கு வைராக்கியம் காட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக மாறியுள்ளார் அற்புதம் அம்மாள்.  வரலாற்றில் கணவரின் உயிரை எமனிடமிருந்து மீட்டுக் கொண்டு வந்தாள் சாவித்திரி என்ற "கதை"யை படித்திருப்போம்.. ஆனால் தனது பிள்ளையை முதலில் தூக்குக் கயிற்றிலிருந்தும், பின்னர் சிறைக் கொட்டடியிலிருந்தும் மீட்டுக் கொண்டு வந்து அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்த ஆச்சரியப் பெண்மணி.. உண்மையில்தான் இதுதான் "அற்புதம்".

தனது இளமைக் காலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கிறார்  பேரறிவாளன்.. அதேபோலத்தான் அற்புதம் அம்மாள். தனது வாழ்க்கையின் 32 வருட காலத்தை மகனுக்காகவே நடந்தே கழித்து ஓய்ந்துள்ளார் இந்தத் தாய்.. இப்படி ஒரு கொடுமை யாருக்குமே நடக்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு பேரறிவாளனும் சரி, அற்புதம் அம்மாளும் சரி நிறைய கஷ்டப்பட்டு விட்டனர்.

சட்டங்கள் தங்களது கடமையை சரிவர செய்ய வேண்டும்.. நியாயத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.. தீர்ப்புகள் எழுதும்போது பேனாக்கள் சரியானவற்றை மட்டுமே பிரசவிக்க வேண்டும்.. ஒரு சிறிய தவறு நடந்தாலும் கூட ஒட்டுமொத்த வாழ்க்கையும் சீரழிந்து போய் விடும் என்பதை எல்லோருமே மனதில் கொள்ள வேண்டும்.. இந்தத் தீர்ப்பு தரும் பாடம் அதுதான்.

Comments

Mageshbabu said…
அற்புதம் உங்கள் வரிகள். வெல்க எளிய மனிதர்களுக்கான நீதி💪

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்