வீட்டுக்குப் போய் சமையலைப் பாருங்க"
தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலேவைப் பார்த்து இப்படிப் பேசியிருக்கிறார் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல். இது அந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் சர்ச்சையாக மாறியுள்ளது. பெண்களை இந்த அளவுக்கு தரம் தாழ்த்தி பாஜக தலைவர் விமர்சிக்கலாமா, இப்படி ஒரு வெறித்தனமான ஆணாதிக்கப் புத்தியுடன் கூடியவர் பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கலாமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால் நான் பேசியதன் அர்த்தம் வேறு.. கிராமத்தில் வழக்கமாக சொல்லும் வார்த்தையைத்தான் பயன்படுத்தினேன்.. அதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று சப்பைக் கட்டுக் கட்டியுள்ளார் பாட்டீல்.
நாட்டில் ஒரு பாட்டீல் மட்டும் இல்லை.. ஏகப்பட்ட பேர் இதே பொதுப் புத்தியுடன்தான் இருக்கிறார்கள். பெண்கள் எந்த வகையிலும் வளர்ந்து விடக் கூடாது.. அப்படியே வளர்ந்து வந்தால் அவர்களது கேரக்டரை சிதைத்துப் பேசுவது, கிண்டலடிப்பது, யாராவது பெண் தலைவரை விமர்சிக்க வேண்டும் என்றால் "செக்ஸிஸ்ட்" வார்த்தைகளைப் பயன்படுத்துவது... அவரது கன்னம் போல ரோடு இருக்கிறது என்று மட்டமாக பேசுவது.. இதுபோன்ற ஆணாதிக்க, பெண்களைத் தாழ்த்திப் பேசும் ஆண் தலைவர்கள் நிறையவே உள்ளனர். பாட்டீல் அதில் ஒருவர் மட்டுமே.
எல்லாவற்றிலும் வித்தியாசமாக தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் பாஜகவில் இப்படி ஆணாதிக்க புத்தியுடன் கூடிய தலைவர் இருப்பதுதான் ஆச்சரியமானது. ஒரு பக்கம் பெண் தலைவர்கள் பலரையும் ஊக்கப்படுத்தி, உயர் பதவிகள் கொடுத்து அழகு பார்த்து வருகிறது பாஜக. ஆனால் மறுபக்கம் இதுபோன்ற மட்டமான தலைவர்களும் வாய் நிறைய சாக்கடையைக் கொட்டிக் கொண்டுதான் உள்ளனர்.
பெண்கள் சமைக்கத்தான் லாயக்கு என்றால் நிர்மலா சீதாராமன் போன்ற அமைச்சர் பாஜகவுக்குக் கிடைத்திருக்க மாட்டார்.. பெண்களுக்கு சமையலைத் தவிர வேறு எதுவுமே தெரியாது என்று கூறினால் தமிழிசை செளந்தரராஜன் போன்ற சீரிய தலைவர்கள் பாஜகவுக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள். குஷ்பு கிடைத்திருக்க மாட்டார். வானதி சீனிவாசன் கிடைத்திருக்க மாட்டார்.. இன்னும் எத்தனையோ பெண் தலைவர்களை பாஜக இழந்திருக்க வேண்டும்.
இன்று பெண்கள் இல்லாத துறைகள் இல்லை.. கிச்சனை விட்டு அவர்கள் என்றோ வெளியேறி விட்டார்கள்.. ஆனால் அதை விட்டு அவர்களைப் போக விடாமல் தடுக்கத்தான் பாட்டீல்கள் போராடி வருகிறார்கள். பெண்களின் திறமை, திறன் உள்ளிட்டவற்றுக்கு முன்னால் தங்களால் நிற்க முடியாது என்பதுதான் பாட்டீல்களின் பயம். அந்த பயத்தைத்தான் இப்படி அறுவெறுப்பான வார்த்தைகளில் வெளிக்காட்டுகிறார்கள். ஆனால் பெண்கள் இதுபோன்ற தடுப்புகளையும், தடைகளையும் தாண்டித் தகர்த்து விட்டு அழகான நதி போல பாய்ந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.. எந்த பாட்டீலாலும் அதைத் தடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.
சந்திரகாந்த் பாட்டீல் போன்றவர்களைத் திருத்த முடியாது.. இவர்கள் பழமைவாத புத்தியுடன் கூடியவர்கள். இவர்களுக்கு அரசியல் என்றால் ஆண்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண்கள்தான் எதையும் செய்ய முடியும்.. ஆண்களால் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்ற பொதுப் புத்தி, ஆணாதிக்க சகதி அடி மனதில் நிரந்தரமாக தேங்கிப் போய்க் கிடக்கிறது. எனவே இவர்களை குறை சொல்ல முடியாது.. இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.
அரசியல் கட்சிகள்தான் உயர் பதவிகளில் தாங்கள் யாரை அமர்த்துகிறோம்.. அமர்த்தப்படும் தலைவர் சரியாக இருக்கிறாரா.. நல்ல மன நிலையுடன் கூடியவரா... அவர் பேசும் வார்த்தைகளில் கண்ணியம் இருக்கிறதா.. அனைத்துத் தரப்பினரையும் மதிப்பவராக இருக்கிறாரா.. சமூகத்தின் பிரதிநிதியாக அவர் செயல்படுகிறாரா என்பதை கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தடம் புரளும் தலைவர்களை தயவு தாட்சன்யமே பார்க்காமல் தூக்கி வீசவும் தயங்கக் கூடாது.
பாஜகவில் மட்டுமல்ல கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளிலுமே இதுபோன்ற பத்தாம் பசலித்தனமான ஆணாதிக்க மனோபாவம் கொண்ட தலைவர்கள் பலரும் உள்ளனர். அவ்வப்போது இவர்கள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்தி அசிங்கப்பட்டுக் கொள்கிறார்கள். அன்று லாலு பிரசாத் அப்படித்தான் பேசினார்.. இன்று பாட்டீல் பேசியிருக்கிறார்.. நாளை யாரோ!
பாட்டீல் இன்னும் தான் பேசியது சரி என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறார்.. இதுவரை எந்த ஒரு பாஜக பெண் தலைவரும் அவரை கடுமையாக கண்டிக்கவில்லை, இது தவறு என்று யாரும் குரல் கொடுக்கவில்லை.. இப்படி பேசக் கூடாது, தவறு என்று கண்டிப்பான குரல் வரும் வரை பாட்டீல்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்... ஆனால் எத்தனை "பாட்டீல்கள்" பாய்ந்து வந்தாலும்.. "படார் படார்" என உடைத்துத் தரைமட்டமாக்கிக் கொண்டுதான் இருப்பார்கள் பெண்கள்.
Comments