Skip to main content

கருணாநிதி உண்மையிலேயே கொடுத்து வச்சவர்தான்.. ஆனால் ஜெயலலிதா?!


மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுத்தடுத்து கெளரவங்கள் சேர்ந்து கொண்டே போகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது அவரைப் போலவே தமிழக மக்களால் மறக்க முடியாத இன்னொரு தலைவரான ஜெயலலிதா நம் கண் முன்பு வந்து போகிறார். கருணாநிதிக்குக் கிடைத்த கெளரவங்கள் ஜெயலலிதாவுக்கு கிடைக்கவில்லை என்பதை வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சில தலைவர்களை அத்தனை சீக்கிரம் மக்கள் மறக்க முடியாது, மறக்கக் கூடாது. அந்த வரிசையில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நிரந்தரமாக நீடித்து நிற்பார்கள். இவர்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நிறைய செய்துள்ளனர், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

இவர்கள் மறைந்தபோது அடுத்து வந்த தலைவர்கள், மறைந்த தலைவர்களை முறையாக கெளரவப்படுத்தியுள்ளனர். காமராஜர் மறைந்த பிறகு அவரை அடுத்து வந்த தலைவர்கள் உரிய முறையில் கெளரவப்படுத்தியுள்ளனர். காமராஜ் பெயரில் பல்கலைக்கழகம் உள்ளது. காமராஜர் பெயரில் பஸ் நிலையங்கள் உள்ளன. அதேபோல அண்ணாவுக்கு செய்யப்பட்ட கெளரவங்களின் பட்டியல் மிகப் பெரியது. கருணாநிதியும் சரி, எம்ஜிஆரும் சரி மாறி மாறி பல திட்டங்களை கொண்டு வந்தனர், பெயர் சூட்டினர். 

அதேபோலத்தான் எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜெயலலிதா அவருக்கு உரிய கெளரவத்தைக் கொடுத்தார். மரியாதை செய்தார். அந்த வரிசையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அவருக்குரிய கெளரவம் அவருக்குக் கிடைத்ததா என்றால் பெரும் கேள்விக்குறிதான் பதிலாக உள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு கிட்டத்தட்ட அவரை அதிமுக தலைமை மறந்தே போய் விட்டது. ஜெயலலிதாவுக்காக அகில இந்தியத் தலைவர்களை அழைத்து ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை. ஜெயலலிதா பெயரை எந்தத் திட்டத்துக்கும் சூட்டவில்லை. அவர் உயிருடன் இருந்தபோது அவரை காக்காய் பிடிப்பதற்காக சூட்டப்பட்ட "அம்மா" திட்டங்களைத் தவிர புதிதாக எந்தத் திட்டத்திற்கும் ஜெயலலிதா பெயர் சூட்டப்படவில்லை. அவருக்கு பொது இடத்தில் ஒரு நல்ல சிலை கூட அமைக்கப்படவில்லை. அதிமுக அலுவலகத்தில்  அமைக்கப்பட்ட சிலையும் கூட பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜெயலலிதா போலவே இல்லை என்றும் கேலிக்கூத்தானது.

ஜெயலலிதா பெயரை எந்த சாலைக்கும் சூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் அவரது வீடு உள்ள போயஸ் தோட்டப் பகுதிக்குக் கூட அவரது பெயர் சூட்டப்படவில்லை. ஏன் அவர் வசித்து வந்த போயஸ் தோட்டத்து வீட்டையே கூட அரசால் கையப்படுத்த முடியவில்லை.  மொத்தத்தில் ஜெயலலிதாவுக்குப் பிறகு நீடித்த அதிமுக ஆட்சி, ஜெயலலிதாவுக்கு கெளரவம் சேர்க்க எந்த பெரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதெல்லாம் நிச்சயம் அதிமுகவினருக்கு ஏமாற்றம்தான்.

அதேசமயம், கருணாநிதியை திமுகவினர் மிக உயரத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். அவரது Legacy-ஐ அடுத்த தலைமுறைக்க மிக அழகாக எடுத்துச் செல்லும் வேலையை திமுக திறம்பட செய்து வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் அவரது சிலை திறக்கப்பட்ட நிகழ்வு தேசிய அளவில் பேசு பொருளானது. கருணாநிதி பெயரில் மதுரையில் பிரமாண்ட நூலகம் உருவாகி வருகிறது. அது திறக்கப்பட்டதும் ஆசிய அளவில் அது பேசப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருணாநிதிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு அதையும் குடியரசுத் துணைத் தலைவரை வைத்து திறந்து விட்டது திமுக. சென்னையின் புதிய அடையாளமாக அந்த சிலை உருவாகி விட்டது. சிலை திறக்கப்பட்டது முதல் தினசரி நூற்றுக்கணக்கானோர் அதைப் பார்க்க திரண்டு வருகின்றனர்.

இப்படி அடுத்தடுத்து கருணாநிதியைத் தாங்கிப் பிடிக்கிறது திமுக. தொடர்ந்து கருணாநிதியின் கொள்கைகளையும் அப்படியே எடுத்துக் கையாண்டு வருகிறது. திராவிடத்தை இந்த அளவுக்கு இதுவரை திமுக தூக்கிப் பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு அதை திறம்பட எடுத்தாளுகிறது. இத்தோடு ஒப்பிட்டால் ஜெயலலிதாவை நினைத்து பரிதாபம்தான் ஏற்படுகிறது.

ஜெயலலிதா மீது ஆயிரம் சர்ச்சைகள், விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆளுமையை யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது. ஆண் தலைவர்கள் செய்யத் தயங்கிய, செய்யத் தவறியதைக் கூட தைரியமாக செய்து காட்டியவர் ஜெயலலிதா. முடிவெடுப்பதில் தெளிவுடன் இருந்தவர். தவறு செய்தால் அதை திருத்திக் கொள்ளவும் தயங்காதவர். பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். கருணாநிதி கூட இறங்கிப் போய் விடுவார். ஆனால் ஜெயலலிதா கடைசி வரை பாஜகவை ஆட்டிப் படைத்தவர்.

நீட் தேர்வு ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு கெஜட்டில் வெளியாக ஜெயலலிதாதான் முக்கியக் காரணம். இப்படி பல்வேறு வழிகளிலும் தமிழ்நாட்டு மக்களுக்காக பலவற்றை செய்தவராக திகழ்கிறார் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்குரிய கெளரவம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக தலைவர்கள் தலைமைப் பொறுப்புக்கு அடித்துக் கொண்ட நேரம்தான் அதிகமாக இருந்தது. ஒருவர் மாற்றி ஒருவர் காலை வாருவது, பதவிகளை அனுபவிப்பது, பாஜகவுக்கு ஜால்ரா போடுவது, பாஜகவினர் சொல்வதைக் கேட்பது என்று தங்களது பிழைப்பைப் பார்க்கத்தான் அவர்களுக்கு அதிக  நேரம் இருந்ததே தவிர ஜெயலலிதாவைப் பற்றிக் கவலைப்பட அவர்களுக்கு நேரம் இல்லை.

அதிமுக தனது கடமையை மறந்திருந்தாலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவுக்கு உரிய கெளரவத்தைத் தேடித் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்டாலின் மாற்றுக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் மாச்சரியம் பார்க்காமல் செயல்படக் கூடியவர் என்ற பெயரை வைத்துள்ளார். ஜெயலலிதாவையும் அவர் கெளரவப்படுத்துவார் என்று எதிர்பார்ப்போமாக.

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்