ஒருபக்கம் இசைஞானி இளையராஜா.. இன்னொரு பக்கம் தமிழிசை செளந்தரராஜன்.. இருவருக்கும் இன்று பிறந்த நாள்.. இரு வேறு ஆளுமைகள்.. மறக்க முடியாத திறமைகள்.. அசைக்க முடியாத தனித்துவங்கள்.. ஒவ்வொருவரும் இன்று கொண்டாடப்படுகின்றனர்.
ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்தின் அடி ஆழத்திலிரும் உறைந்து போய் நிற்பவர் இளையராஜா.. அவரின்றி ஒரணுவும் அசையாது என்றுதான் சொல்ல வேண்டும். வெவ்வேறு வயதுகளில் ஒவ்வொருவரும் இருந்தாலும், ஒவ்வொருவரின் அடி மனதின் ஓரத்திலும் அவரது இசை இல்லாமல் இருக்காது.
காதல், சோகம், காமம், வேகம், விவேகம், குடும்பம், அம்மா, தந்தை, நட்பு, அன்பு, அமைதி, ஆர்ப்பாட்டம், அழுகை.. என எல்லா சூழலுக்கும் நமக்குத் தேவைப்படுவது இளையராஜா என்ற அந்த மருந்துதான். அது இல்லாமல் நமது மனதின் எந்த நோயும் குணமாவதில்லை. இளையாராஜா என்பது இசை மட்டுமல்ல.. அது ஒரு போதை.. ஒருமுறை அதைத் தொட்டு விட்டால், பிறகு விடவே முடியாது.. ஆனால் இந்தப் போதை மனசுக்கு நல்லது.. மூளைக்கு நல்லது.. உயிர் வாழ்வதற்கு ரொம்பத் தேவையானதும் கூட.
இளையராஜாவின் இசை முன்னாடி மாதிரி இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் உண்மையான இளையராஜாவின் இசையை அறியாதவர்களாகவே இருக்க முடியும். இளையராஜா எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்.. நீங்கள் மாறியிருக்கலாம்.. உங்களது சுவை மாறியிருக்கலாம்.. ஆனால் இளையராஜாவின் இசையும், அது ஏற்படுத்தும் மாயாஜாலமும் அப்படியேதான் இருக்கிறது. அதை அணு அணுவாக அனுபவித்தவர்களுக்கும், ரசித்தவர்களுக்கும்தான் அந்த மாயம் புரியும்..
சிறு வயதில் எங்கோ ஒலித்த இளையராஜாவின் குரலையும், அவரது இசையையும் கேட்டு வளர்ந்து பின்னர் எங்கெல்லாம் இளையராஜா பாட்டைக் கேட்க முடியுமோ அங்கெல்லாம் ஓடிச் சென்று கால் கடுக்க நின்றபடியே கேட்டு ரசித்து, இளையராஜா பாட்டைக் கேட்பதற்காகவே டீக்கடைகளுக்கு முன்னால் போய் நின்று கொண்டு கேட்டு ரசித்து, பாட்டு முடிந்ததும் ஏக்கத்துடன் திரும்பி நடந்து.. இளையராஜாவின் புதிய பாடல்கள் வெளியாகும் தினத்துக்காக தவம் கிடந்து, அந்தப் பாட்டு வெளியாகும் நாளை எதிர்நோக்கி படபடப்புடன் காத்துக் கிடந்து.. கேட்டு மகிழ்ந்து.. அதெல்லாம் மறக்க முடியாத பொற்காலம்.
இளையராஜா ஒரு முறை சொன்னார்.. அன்னக்கிளி படத்தின் பாடலை எனது தெருவில் நான் நடந்து சென்றபோது வீடுகளில் வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது.. அதைக் கேட்டபடியே, அதாவது முழுப் பாடலையும் கேட்டபடியே எனது வீட்டை அடைந்தேன் என்று.. உண்மைதான்.. எனக்கும் அப்படிப்பட்ட அனுபவம் முதல் மரியாதை படத்தின் போது கிடைத்தது. அந்தப் பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அப்படி மெய் மறந்து போய்க் கிடந்தது தமிழ்ச் சமுதாயம் இவரது இசையில் கட்டுண்டு.
இளையராஜா என்ற பெயரே சிலிர்ப்பானது. எல்லோருக்கும் கிடைக்காத பந்தம்.. இந்த ராஜாவுக்கும், நமக்குமானது.. இதெல்லாம் சொல்லில் புரிய வைக்க முடியாதது.. செவியில் மட்டும் உணர முடியாதது.. இதயத்தின் அடி ஆழம் தொட்டு தழுவிக் கிடக்கும் உயிர் நாடி இது. பிரிக்க முடியாதது.. பிரிய விரும்பாதது. இசையைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் மறக்காமல் கொண்டாட வேண்டிய நாள்தான் இந்த ஜூன் 2.
இளையராஜாவின் பெருந்தன்மையையும் சேர்த்தே இன்று கொண்டாட வேண்டும். உண்மையில் அவரது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதிதான். ஆனால் அன்று கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால், தன்னால் கலைஞரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தனது பிறந்த நாளையே ஒரு நாள் தள்ளி வைத்துக் கொண்டவர் ராஜா.. அதை விட முக்கியமாக, தனது பிறந்த நாளை ஒருபோதும் அவர் ஆர்ப்பாட்டமாக கொண்டாடியதே கிடையாது.. ரசிகர்கள்தான் அதைக் கொண்டாடி வருகின்றனர். வழக்கம் போல புன்னகை பூத்த முகத்துடன் அதை ரசிக்க மட்டும் செய்கிறார் ராஜா..!
இன்னொரு பக்கம் தமிழிசை.. மறக்க முடியாத இன்னொரு ஆளுமை.. தமிழகத்தில் பாஜகவுக்கு தனி முகம் கொடுத்தவர்.. திறமைக்காரர். பேச்சில் கெட்டிக்காரர்.. எத்தனை வேகமாக பேசினாலும், எத்தனை கோபமாக பேசினாலும்.. வாய் தடிக்காமல், வார்த்தை தடிக்காமல், நயத்தகு தமிழில் நாகரீகமாக பேசக் கூடியவர்.. சொல்லின் செல்வர் குமரியாரின் மகள் என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபித்துக் கொண்டே இருந்தவர்.
தோல்வியையும் கூட சிரித்தபடியே ஏற்று இது வெற்றிகரமான தோல்வி என்று கூறி அனைவரையும் அதிர வைத்தவர். கலகலப்புக்குச் சொந்தக்காரர். எத்தனை கலவரமான கேள்வி வந்து விழுந்தாலும், அதே வேகத்தில் லாவகமாக பதிலளித்து கலகலப்பாக்கக் கூடியவர். என்ன கேள்வி கேட்டாலும் பதிலளிக்காமல் பின்வாங்கியதே இல்லை.. எல்லாக் கேள்விகளுக்கும் இவரிடத்தில் பதில் இருக்கும்.. கூடவே கொஞ்சும் தமிழும் இருக்கும்.. எல்லோருக்கும் பிடித்த "அன்பான அக்கா".. இவர் பேசும் தமிழைக் கேட்கவே தனிக் கூட்டம் காத்திருக்கும்.
பாஜக என்றாலே எல்லோரும் விலகிப் போன வேளையில், நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.. எங்களையும் நீங்கள் நெருங்கலாம் என்று புதிய அடையாளம் தேடிக் கொடுத்தவர். இவரது செய்தியாளர்கள் சந்திப்பின்போது அப்படி கூட்டம் மொய்த்துக் கிடக்கும். யார் என்ன கேள்வி கேட்டாலும் சளைக்காமல், சலிக்காமல், முகம் சிணுங்காமல் பதில் சொல்லக் கூடியவர். இயல்பான மனுஷி... நம்ம வீட்டுப் பெண்மணி என்ற உணர்வை ஒவ்வொருவருக்கும் கொடுத்தவர். இன்று தமிழிசைக்கும் பிறந்த நாள்.
ஒரே நாளில் "தமிழும், இசை"யும் பிறந்த நாளைக் கொண்டாடுவது இயல்பாக அமைந்ததுதான்.. ஆனால் இரண்டையும் தாராளமாக கொண்டாடலாம்.. முழுத் தகுதி படைத்தவர்கள்தான் இருவரும்.
இருவருக்கும் வாழ்த்துகள்.
Comments