Skip to main content

அருமையான பிள்ளைகளும், அழகான அப்பாக்களும்.. கண்ணில் கண்ட சந்தோஷம்!


அஸ்வின் குட்டிப் பையனாக இருந்த கால கட்டம்.. ஒரு புதுக் கவிதை போல இருக்கும் அந்த நாட்கள்.. பிள்ளைகளை தூக்கி வளர்ப்பதும், அதில் கிடைக்கும் சுவாரஸ்ய அனுபவங்களும் எல்லாத் தந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் இயல்பான வரம்தான்.. ஆனால் எனக்கு கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மிக சிறப்பானவை.. காரணம் எனது மகன் சூப்பர் ஸ்பெஷல் என்பதால்.

அஸ்வின் வாய் திறந்து பேசியபோது சொன்ன முதல் வார்த்தை அப்பாதான்.. வழக்கமாக குழந்தைகள் அம்மா  அல்லது அத்தை என்றுதான் பேச ஆரம்பிக்கும் என்பார்கள்.. ஆனால் "ப்பா".. என்றுதான் அவனது முதல் பேச்சு தொடங்கியது.. அதிலும் அவனது உச்சரிப்பும் விசேஷமாக இருக்கும்.. "ppa" என்று சொல்ல மாட்டான் "bba" என்றுதான் உச்சரிப்பான்.. அந்த டிரேட் மார்க் புன்னகையும் கூடவே விரியும்.. பார்க்கப் பார்க்க அத்தனை அழகாக இருக்கும்.. கலர்ஃபுல் ஓவியம் போல... இப்ப "போ போ" என்கிறான்.. அது தனிக் கதை!

சின்ன வயதில் அவனிடம் நான் நிறைய பேசுவேன்.. அவனும் சளைக்காமல் கேட்பான்.. ஏதாவது கதை ஓடிட்டே இருக்கும்.. பெரும்பாலும் என்னோட குடும்பக் கதைதான்.. என்னுடைய குடும்பத்தில் நடந்த எல்லாத்தையும் அவனிடம் கொட்டியிருக்கிறேன்.. எதையும் விட்டு வைக்கவில்லை.. என்னுடைய அப்பாவுடனான எனது அனுபவங்கள் உள்பட எல்லாத்தையும் சொல்லியிருக்கிறேன்.. எல்லாத்தையும் ரசித்துக் கேட்பான்.. சமயங்களில் என்னை அதைச் சொல்லி கலாய்க்கவும்  செய்வான். 

குடும்பத் கதை என்றில்லாமல், சயின்ஸ் குறித்து நிறைய பேசியிருக்கிறேன்.. அற்புதமான மனிதர்கள் குறித்த கதை நிறைய சொல்லியிருக்கிறேன்.. தன்னம்பிக்கை தரும் விஷயங்களை பேசியிருக்கிறேன்.. உலகத்தை சுட்டிக் காட்டியிருக்கிறேன்.. எது எப்படி என்ன ஏன் என்று கேள்விகளை கேட்க தூண்டியிருக்கிறேன்.. நிறைய கேள்வி கேட்பான்.. அதை அதிகரித்திருக்கிறேன்.. ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சி என்பது அவன் நிறைய சிந்திப்பதில்தான் இருக்கிறது.. நிறைய சிந்திக்க வேண்டும், நிறைய கேள்வி கேட்க வேண்டும், நிறைய விளக்கம் பெற வேண்டும், தேடல் அதிகரிக்க அதிகரிக்கத்தான் ஒருவனது அறிவாற்றலும் சேர்ந்து வளரும்.

அஸ்வினுக்கு பேசுவதைக் கேட்கப் பிடிக்கும்.. இப்படிக் கேட்டுக் கேட்டுத்தான்.. அவனே ஒரு கதை சொல்லியாக மாறி நிற்கிறான்.. பேசப் பேச அவன் கேட்பது படு சுவாரஸ்யமாக இருக்கும்.. வாயில் ஜொள்ளு வடிய, ஒரு புன்னகையுடன், கூர்ந்து கேட்பான்.. பேசுவது போரடித்து விட்டால்.. அப்பா தட்டிக் கொடுங்க தூக்கம் வருது என்பான் (நாம உடனே புரிஞ்சுக்கணும்.. நம்ம பேச்சு ரம்பமாக மாறி விட்டது என்று).. படுத்துக் கொண்ட பின்னர் அருகே அணைத்து தட்டிக் கொடுக்க ஆரம்பித்தும், பாட்டு பாட்டிட்டே தட்டிக் கொடுங்க என்பான்.. "பாட்டு.. தட்டு" என்று அவனது இரவு ஆரம்பிக்கும்.. கண்ணை மூடிக் கொண்டு இந்த தட்டிக் கொடுத்தல் சுகத்தை அனுபவிக்கும்போது அவனது இதழ்கள் திடீர் திடீரென சிரிக்கும்.. என்னடா என்று கேட்டால் இன்னும் பலமாக சிரிப்பான்... அதுவரை கேட்ட கதையை மனதுக்குள் சினிமா போல் ரீவைன்ட் செய்து பார்த்துக் கொண்டே இருப்பான்.. அதனால்தான் அந்த சிரிப்பு.

பெரும்பாலும் நான் பாடுவது நானாக இட்டுக் கட்டிப் பாடிய தாலாட்டுப் பாடல்கள்தான்.. வெறும் ஆராரோ ஆராரோதான்.. அதையே பாட்டுப் போல பாடுவேன்.. அது அவனுக்கு அத்தனை சுகமாக இருக்கும்.. பாட்டை நிறுத்தினால் டக்கென நிமிர்ந்து பார்ப்பான்.. "ஏன்டா நிறுத்திட்டே" என்று பார்வையில் பாய்ச்சல் இருக்கும்.. அதேபோல தட்டுவதை நிறுத்தினாலும் டக்கென விழித்து கையைப் பிடித்து தட்டிக் கொடுக்கச் சொல்வான்.. சில நேரங்களில் உடனே தூங்கிருவான்.. பல நேரம் மணிக்கணக்கில் தட்டித் தட்டி பாடி பாடி கையும், வாயும் வலிச்சுப் போய்ரும்..!

இப்படியே தட்டிக் கொடுத்தலும், பாட்டுப் பாடுதலும் நீண்டு கொண்டே இருக்கும்.. பெரும்பாலான நேரங்களில் அவனுக்கு கதை சொல்லிச் சொல்லி எனக்கு தூக்கம் வந்து விடும்..  உடனே கடுப்பாகி இவருக்கு இதே வேலையைப் போச்சு.. எனக்கு கதை சொல்லி இவர் தூங்க ஆரம்பிச்சுடுவாரு என்று அலுத்துக் கொள்வான்.. இப்படி குட்டிக் குட்டிக் கலாட்டாக்கள் நிறைய நிறைய.

சிறு வயதில் எங்கு சென்றாலும் அவனை தூக்கிக் கொண்டு போவது ஒரு மறக்க முடியாத அனுபவம். நடக்க முடியாத இடங்களில் தூக்கிக் கொள்வேன்.. கை வலிக்கும்.. ஆனாலும் அவனுக்கு நடந்தால் கால் வலிக்குமே.. மாற்றி மாற்றித் தூக்கிச் செல்வேன்.. பள்ளிக் கூடத்திலும் கூட இது தொடர்ந்தது..  என்னால் முடியாதபோது என் மனைவியின் இடுப்பில் இருப்பான். எனக்கும் அவனுக்குமான உறவு அழகான கெமிஸ்ட்ரி.. அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.. என்னிடமிருந்து அவனுக்குள் நிறையக் கடத்தியிருக்கிறேன்.. பேச்சு, எழுத்து, அறிவு, கிரகிப்பு, தைரியம், துணிச்சல்... நிறைய.. ஒரு கட்டத்தில் அவனே சுயமாக யோசிக்கத் தொடங்கியபோது, அவன் யார் என்பதை அவனுக்கே உணர்த்தி அவனை மடை மாற்றி விட்டேன்.. இப்போது சுயமாக தனிப் பாதையில் நடை போடத் தொடங்கியிருக்கிறான்.. எங்களுக்குள் பேச்சுக்கள் குறைந்தாலும், ஆலோசனைகள் அளவளாவல்கள் குறைந்தாலும்.. அவன் குறித்த கவலைகள் ஒரு பக்கம் இருந்தாலும்.. அவன் திறமை, அறிவு மீதான நம்பிக்கை கூடிக் கொண்டேதான் போகிறது.. ஏதாவது சாதிப்பான் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.



திடீரென ஏன் இந்த ரைட்டப்?.. நேற்று ஒரு அப்பா -மகனைப் பார்க்க நேர்ந்தது.. செந்தில் மகளுக்கு 2வது பிறந்த நாள்.. மொத்த ஆபீஸ் பட்டாளமும் திரண்டிருந்தது.  நான் உள்பட பலர் சிங்கிளாக வந்திருக்க, மகேஷ் மகனுடனும், பஹன்யா - கலை  குடும்பமாகவும் வந்திருந்தனர். குடும்ப விழாவாக களை கட்டியிருந்தது பிறந்த நாள் கொண்டாட்டம்.. அதில் என்னை ரொம்ப ஈர்த்தது மகேஷின் மகன். அப்பாவை விடவே இல்லை.. ஒட்டிக் கொண்டு பின்னிப் பிணைந்திருந்தான்.. கழுத்தை கட்டி அணைத்து அப்பாவை விட்டு விலகாமல் இறுகப் பின்னியிருந்தான்.. யாரேனும் கூப்பிட்டால்.. உடனே அப்பா மீது பாய்ந்தேறி அவரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான்.. சில நேரங்களில் அப்பாவை தூக்கச் சொல்லி இடுப்பில் ஏறியும் அமர்ந்து கொண்டான்.. 


அனைவரும் சாப்பிட உட்கார்ந்தபோது.. தனது மகனுக்கு மகேஷ் சாப்பாட்டை பொறுமையாக ஊட்டிய அழகைப் பார்த்து அப்படியே எனக்கு என்னைப் பார்த்தது போல இருந்தது.. இப்படித்தான் நானும் ஒரு காலத்தில் அஸ்வினுடன் இணைந்திருந்தேன்.. இணை பிரியாமல் பரிவு காட்டிக் கொண்டிருந்தேன்..  ஒன்று அம்மா ஊட்டி விட வேண்டும்.. இல்லாவிட்டால் நான் ஊட்ட வேண்டும்.. சாப்பிடும்போதும் கூட ஏதாவது கதை ஓடிக் கொண்டிருக்கும்.. என் அப்பா என்னை அடித்த கதையோ அல்லது என் அப்பத்தாவின் கதை ஒன்றோ.. ஏதோ ஒன்று ஓடிக் கொண்டிருக்கும்.. சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டே, சிரித்துக் கொண்டே சப்புக் கொட்டி சாப்பிட்டு முடிப்பான்.. அதுதான் எனக்கு மகேஷையும், அவரது மகனையும் பார்த்தபோது நினைவுக்கு வந்தது.

அப்பாக்களின் பெரும் பொறுப்பும், கடமையும்.. இந்த "ஊட்டி" விடுதல்தான்.. சாப்பாட்டை மட்டுமல்லாமல், அறிவையும், அன்பையும், உலகத்தையும் சேர்த்து ஊட்டி விடுவதுதான் தந்தையரின் முதல் கடமை..  பிள்ளைகளிடம் சிறு வயதிலிருந்தே நாம் ஊட்டி விடுவது "எது" என்பதுதான்.. அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.. உளவியல் ரீதியாக, ஒரு "வளர்ப்பு" என்பது அது "வளர்வது" என்பதில் மட்டும் அடங்கியிருப்பதில்லை.. மாறாக.. அதன் வளர்ச்சிக்காக நாம் ஏற்படுத்திக் கொடுக்கும் சூழலும்தான் முக்கியமானது.. சரியான சூழலை அவர்களுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுக்கும்போது, அவர்களது வளர்ச்சி நிச்சயம் நாம் எதிர்பார்ப்பதை விட மிகப் பிரமாதமாக இருக்கும்.


மகேஷ் மட்டும்தான் கண்ணில் பட்டாரா என்று உங்களோட மைன்ட் வாய்ஸ் கேட்குது.. ஏன் இல்லை.. கலை இருந்தாரே.. சுட்டிக் குட்டீஸ் இரண்டையும் பொறுமையாக கையாண்டபடி .. கிட்டே போய் உட்கார்ந்து கொண்டு, தாத்தா கிட்ட பேச மாட்டியா என்று கேட்டு அவை இரண்டும் காதில் வந்து முனுமுனுத்த அழகு.. அற்புதம்..  செந்தில் மகள் அத்தனை க்யூட்.. என்ன, கேக் ஊட்டி விட்டபோதுதான்.. ம்ஹூம்.. வாயே திறக்கலை.. ஆனால் போட்டோவுக்கு போஸ் மட்டும் சூப்பரா கொடுத்தது... அங்கு கண்ட அத்தனை அப்பாக்களும் அழகுதான்.. உடனே அம்மாக்கள் எல்லாம் கோச்சுக்கிட்டு சண்டைக்கு வந்துராதீங்க.. நீங்க இல்லாட்டி அப்பாக்கள் கிடையாது... ஸோ.. உங்களுக்கும் ஒரு Big Salute!

Comments

Senthil kumaran said…
Being a father is amazing feel.. and the birthday was joyful and great experience.. thank you all for making this happen.
Unknown said…
Father is the best person in the world
Anonymous said…
அருமை உங்களின் பாசம் நீங்கள் உங்கள் பிள்ளையை அரவணைத்த விதம் ஒவ்வொரு தந்தைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும்.
Anonymous said…
Thank you all for your wonderful comments.. parenting is an art.. everyone is best in their nature.. love the kids and make them the best.
It's me Diva said…
படித்ததில் பிடித்தது சார்.

Popular posts from this blog

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)

இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன்.  செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான்.  அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக. ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை. "நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா" "நல்லாருக்கேன் சார்.. புது

"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)

 "என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?" லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது. கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக.