Skip to main content

கடுவா.. "புலி" முருகனை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பிருத்விராஜ்!


வாஞ்சிநாதன் என்று ஒரு படம் வந்ததே நினைவிருக்கிறதா.. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. மறக்க முடியாத படம்... படத்தைப் பார்த்து விட்டு மண்டையெல்லாம் மரத்துப் போய் வியர்க்க விறுவிறுக்க வெளியேறி வந்தது இன்னும் மனதில் நிழலாடுகிறது. படத்தின் ஹீரோ விஜயகாந்த்.. அப்படின்னாலே அந்தப் படத்தில் கதையை விட, கைக்கும், காலுக்கும்தான் அதிகம் வேலை இருக்கும் என்பது எழுதப்படாத விதி. வாஞ்சிநாதன் மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா.. பெங்களூரில் ஒரு தியேட்டரில் செகன்ட் ஷோ பார்க்கப் போய் எப்படா தியேட்டரை விட்டு ஓடுவோம் என்று அப்போது அடைந்த பீதியை இப்போது நினைத்தாலும் அதே பீதி உணர்வு பீய்ச்சி அடிக்கிறது.

படம் முழுக்க ஒரே அடிதடிதான்.. அடித்து அடித்து விஜயகாந்த்துக்கே போரடித்துப் போயிருக்கும். அப்படி விடாமல் வெளுத்தெடுத்த படம்தான் வாஞ்சிநாதன். படம் முழுக்க பாத்திரக் கடைக்குள் புகுந்த யானை போல போட்டுப் புரட்டி புரட்டி அடித்துக் கொண்டிருப்பார் விஜயகாந்த்.. அந்தப் படத்தை எடுத்தவர்தான் ஷாஜி கைலாஷ்..  90களின் மசாலா பட மன்னன். 

ஷாஜி கைலாஷ் படம் என்றாலே ஒரே அடிதடியாகத்தான் இருக்கும். சண்டைக்குப் பஞ்சம் இருக்காது..  வேட்டி சட்டை கிழியும்.. தியேட்டர் திரையும் எரியும்.. இப்பத்தானே ஒரு சண்டை முடிந்தது என்று நினைப்பதற்குள் அடுத்த சண்டை வந்து விடும். பார்த்துப் பார்த்து பதமாக படம் எடுக்கும் மலையாளத்தில் இப்படிப்பட்ட அதிரடியான பிளாக்பஸ்டர் படங்களை தைரியமாக தெறிக்க விட்டவர்.. தமிழிலும் அவ்வப்போது வந்து போனவர். அவர் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் (என்று நினைத்துக் கொண்டு) ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.. அதுதான் கடுவா.

கடுவா என்றால் புலி என்று அர்த்தம்.. அருமையான அதிரடி கதையா இருக்கும் போலயே என்று படம் பார்க்க உட்கார்ந்து.. சீன்கள் போகப் போக.. "என்னதிது".. என்று பூர்ணம் விஸ்வநாதன் ரேஞ்சுக்கு அதிர்ச்சியை முகம் வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.. கலை நயத்துடன் எடுத்திருக்க வேண்டிய ஒரு படத்தை கொலை வெறியுடன் குதறிக் கொடுத்திருக்கிறார் ஷாஜி கைலாஷ்.

கதை ரொம்ப ரொம்ப சிம்பிள். 90களின் பின்னணியில் நடக்கும் கதை. ஹீரோ ஒரு பெரும் பணக்காரன். தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன். அவனது ஊரில் உள்ள சர்ச்சுக்கு, பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய ஒரு இளம் பாதிரியார் வந்து சேருகிறார். அவரைத் தண்டிக்க களம் குதிக்கிறான் ஹீரோ.. அதில் அவன் சந்தித்த சவால்கள்.. அதிலிருந்து மீண்ட கதை.. இதுதான் படத்தின் கதை.. ரொம்பப் பழைய கதைதான்.. சரி வித்தியாசமாக கொடுத்திருப்பார்கள் என்று நம்பி போய் உட்கார்ந்தால்.. படம் முழுக்க வில்லனோட ஆட்களை "எம்பி எம்பி" அடித்து நொறுக்கி நெம்பியது மட்டும்தான் மிச்சம்.. வேறு எந்த வித்தியாசமும் நமக்குத் தெரியவில்லை.

குரியாச்சன் என்ற ரோலில் வருகிறார் பிருத்விராஜ்.  தீவிர ரஜினி ரசிகர்களோ, கமல் ரசிகர்களோ எப்படி அவர்களைப் போலவே தங்களை நினைத்துக் கொண்டு நடை உடை பாவனைகளை செய்வார்களோ.. கிட்டத்தட்ட பிருத்விராஜும் காட்சி தருகிறார். அதாவது மோகன்லாலின் பாதிப்பை முழுமையாக காட்டியுள்ளார். மோகன்லால் போலவே முக பாவனை, அவரைப் போலவே வேட்டிக் கட்டு... அவரைப் போலவே மீசையை முறுக்கி விடுவது.. அவரைப் போலவே நிதானமாக பேசுவது.. அவரைப் போலவே கண் பார்வை.. எல்லாமே நல்லாதான் இருக்கு.. மோகன்லாலுக்கு!.. புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனை போலத்தான் பிருத்விராஜ் தெரிகிறார்.

அந்த மீசையைப் போட்டு ஏன் அத்தனை முறுக்கு முறுக்கிட்டே இருக்கார்னுதான் தெரியலை.. படு செயற்கையாக இருக்கிறது. பன்ச் வசனம் பேசுகிறார்.. பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார்.. முடியல சேட்டா என்று வாய் விட்டுப் புலம்ப வைத்து விட்டார் ரசிகர்களை.. இவருடன் ஒப்பிடுகையில், வில்லனாக வரும் விவேக் ஓபராய் சற்று பரவாயில்லை ரகமாக தெரிகிறார். மிகை அதிகம் இல்லாமல் நடித்துள்ளார். முகத்தில் ஆங்காரத்தையும், கோபத்தையும், ஏக்கத்தையும், விரக்தியையும், வில்லத்தனத்தையும் ஜஸ்ட் லைக் தட் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் விவேக் ஓபராய்.. லூசிபருக்கு அடுத்து இந்தப் படத்தில் விவேக்கை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஹீரோயினாக வரும் சம்யுக்தா மேனன் எதற்காக வருகிறார் என்றே தெரியவில்லை. சீமாவுக்கு கிடைத்த நடிப்பு வாய்ப்புகள் கூட சம்யுக்தாவுக்குக் கிடைக்கவில்லை. வருகிறார், போகிறார், பார்க்கிறார், கணவனுக்காக பதறுகிறார்.. அப்படியே படம் முழுக்க சைலன்ட்டாக போய்க் கொண்டிருக்கிறார்.. 

சமீப காலமாக மலையாளப் படங்கள் தேசிய அளவில் அலை பரப்பிக் கொண்டுள்ளன. புதிய வரிசை படங்கள் மூலமாக திரை ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்கள புதுமுக இயக்குநர்கள். ஓடிடியில் இன்று மலையாளப் படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.  வித்தியாசமான கதைக் களங்களை தேடித் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் புதிய இயக்குநர்கள். இந்த நிலையில், கட்டிய வேட்டி கடைசி வரை கவிழாமல்.. அவிழாமல் அப்படியே "ஏரிலேயே" பாய்ந்து பாய்ந்து அடிக்கும் அறுதப் பழசான கதைக் களத்துக்கு ஏன் பிருத்விராஜை ஷாஜி கைலாஷ் கூட்டிச் சென்று கும்மி எடுத்தார் என்றுதான் புரியவில்லை.

மொக்கையான ஒரு சீனுக்கு உதாரணம்.. பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பாதிரியாரை குரியாச்சன் வசிக்கும் ஊருக்கு லாவகமாக திருப்பி அனுப்பி வைக்கிறார் சீனியர் பாதிரியார். குரியாச்சன் இருக்கும் இடத்துக்குத்தான் இவன் போறான்.. அவன் பாத்துப்பான் இவனை என்றும் சஸ்பென்ஸ் வைக்கிறார். சரித்தான்.. குரியாச்சன் பட்டையைக் கிளப்பப் போறான்.. இனி வரும் ஒவ்வொரு சீனும் கலக்கப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் அந்த பாதிரியார் போன ஊரோ சுவிட்சர்லாந்து போல அத்தனை கூலாக, அமைதியாக இருக்கிறது.. குரியாச்சனும் ரொம்ப நிதானமாக நடந்து கொள்கிறான்.. அடடே.. என்ன இது ஒரே மயானக் காட்சியா இருக்கே என்று ரசிகர்கள் அலுத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு பீஸ்ஃபுல் அட்மாஸ்பியரை காட்சிகள் வரிசைப்படுத்துகின்றன.. செம போர்!

இப்படியாக போய்க் கொண்டிருக்கும் படத்தில் கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படும்.. ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் குழி தோண்டிப் புதைத்து ஹீரோயிசத்தை மேலே தூக்கி வைத்து விட்டார் இயக்குநர்.. பிறகெங்கே அதை ரசிப்பது.. அதுவும் சப்பையாகி விடுகிறது.

படம் முழுக்க டல்லடிக்கிறது.. புதுமையாக எதுவும் இல்லை. ஹீரோவின் பாத்திரத்திலும் புதுமை இல்லை. கதையிலும் புதுசா எதுவும் இல்லை..  வேற வேலையே இல்லாமல் ரொம்ப வெட்டியாக இருந்தீர்கள் என்றால் ஒரு தடவை  இதைப் பார்த்து வைக்கலாம்.. அப்படி இல்லாவிட்டால்.. பெட்டர் பிலிம் பக்கம் போய் விடுவது உசிதம்!

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்