Skip to main content

NDTV: தபலா உருட்டலும்.. தழுவிச் சென்ற அழகு ஆங்கிலமும்.. பிரணாய் என்றொரு பிரமிப்பு!


80களின் காலகட்டம்.. அத்தனை இந்தியர்களையும் ஒரு டிவி புரோகிராம் கட்டிப் போட்டு வைத்திருந்தது.. 80ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத டிவி பொற்காலம் என்றால் அதுதான்.. தூர்தர்ஷன் என்ற ஒற்றை டிவி பொழுது போக்குக்குள் உழன்று கொண்டிருந்த அக்காலகட்டத்து இந்தியர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்பிரைஸாக வந்து சேர்ந்த நிகழ்ச்சிதான்.. The World This week.. இன்று வரை அந்த நிகழ்ச்சி கொடுத்த சுவாரஸ்யத்தையும், அனுபவத்தையும், திரில்லையும் வேறு எந்த டிவி நிகழ்ச்சியும் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை.

எப்படி ஒளியும் ஒலியும் பார்க்கக் கூட்டமாக கூடி அமர்ந்தோமோ.. அதேபோல வாராவாரம் இந்த நிகழ்ச்சிக்காக வீடுகள் தோறும் ராத்திரி 9 மணிக்கு விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ.. டிவி முன்பு தவறாமல் உட்கார்ந்து விடுவார்கள்.. "அறிவா.. ஷோ ஆரம்பிக்கப் போகுது.. வேகமா வா.." என்று எனது அண்ணன் அழைக்கும் குரல் இன்றும் கூட காதுகளில் ரீங்காரமிடுகிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே டிவி முன்பு செட்டிலாகி விடுவோம்.. நிகழ்ச்சியின் தீம் மியூசிக்கே ஒரு திரில்லான அனுபவமாக இருக்கும்.. அந்த தபலா உருட்டலை இன்று  கேட்டாலும் கூட Goodsebumps வரத் தவறுவதில்லை.. விதம் விதமாக டியூனை மாற்றினாலும் கூட அந்த தபலாவை மட்டும் என்டிடிவி கைவிடவில்லை.. அழகான இசை இது..  "தி பெஸ்ட் புரோகிராம்" என்று மார் தட்டிச் சொல்லலாம்..  



The World This week என்ற அந்த ஒற்றை நிகழ்ச்சி தூர்தர்ஷனை தூக்கி நிறுத்தியது.. அதற்கு தனி முகம் கொடுத்தது.. இப்படியும் கூட டிவியில் பார்க்க முடியுமா என்ற ஆச்சரியத்தை மக்களுக்கு கொடுத்தது... தூர்தர்ஷனில் அதிக ரேங்கிங் பெற்ற நிகழ்ச்சி இது மட்டுமே.. அப்படி ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை இந்திய மக்களுக்குக் கொடுத்த முழுப் பெருமையும் பிரணாய் ராய் என்று குறுந்தாடிக்காரருக்கு மட்டுமே உரித்தாகும்.. இந்தப் பக்கம் பிரணாய் ராய், அந்தப் பக்கம் அப்பன் மேனன்... என இந்திய மக்களை வசீகரித்த  ஆச்சரியக் கூட்டம் அது. 

உலகின் பல முக்கியப் போர்களை இந்தியர்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவியது The World This week .. பல முக்கிய போர்கள் குறித்த  நேரடி கள ரிப்போர்ட்கள் இந்தியர்களைக் கட்டிப் போட்டது. நேரடியாக போர்க்களத்துக்கே போய் ரிப்போர்ட் செய்தனர் என்டிடிவியின் குழுவினர். சோவியத் யூனியன் உடைந்து சிதறியது.. ஜெர்மனியின் இணைப்பு.. ரஷ்யாவின் செஞ்சதுக்கம்.. செர்பியா போர்.. வளைகுடா போர்.. ஆப்கானிஸ்தான் போர்.. என பல உலக நிகழ்வுகளை நம் முன் கொண்டு வந்து காட்டி இந்தியர்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுத்தார் ராய்.

பல உலகத் தலைவர்களின் பேட்டிகளை காணும் வாய்ப்பை என்டிடிவி இந்தியர்களுக்கு கொடுத்தது. எல்லா சாளரத்தையும் திறந்து விட்டு.. இதோ இதுதான் நம் இந்தியாவுக்கு அப்பால் இயங்கி வரும் உலகம் என்று வெளிச்சம் போட்டுக் காட்டிய நிகழ்ச்சிதான் The World This week.

நியூ டெல்லி டெலிவிஷன் நிறுவனத்தை பிரணாய் ராயின் மனைவி ராதிகா ராய்தான் தொடங்கினார். இருவரும் படித்தபோது காதலித்து மணம் புரிந்தவர்கள். பத்திரிகையாளர்கள். அருமையான ஆங்கில உச்சரிப்புக்கு சொந்தக்காரர்கள்.  ராதிகாவை அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை.. ஆனால் பிரணாய் ராய்.. இந்திய டிவி உள்ளங்களில் தனி இடம் பிடித்தவர். அதிமேதாவித்தனம் இல்லாமல், சாமானியர்களுக்கும் புரியும் வகையில் அவர் பேசிய ஆங்கிலத்துக்கு நானெல்லாம் பெரிய ரசிகன்.. ரொம்ப எளிமையாக அவர் செய்திகளை வாசிப்பதும், விளக்கிச் சொல்வதும் ரொம்ப அழகாக இருக்கும். 


பிரணாய் ராய்.. இந்திய மக்களிடம் பிரபலமானது 80களின் தொடக்கத்தில்தான். தூர்தர்ஷனுக்காக ஒரு செய்தி புல்லட்டினைத் தருவதற்கான ஒப்பந்தம் போட்டு தனது பணியைத் தொடங்கினார் பிரணாய் ராய். அதுதான் The World This week . அந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து 1984ம் ஆண்டு நடந்த இந்திய பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தொகுத்துத் தரும் மிகப் பெரிய பொறுப்பை தூர்தர்ஷன் கொடுத்தது.  இன்னும் கூட எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. தூர்தர்ஷனில் போடப்பட்டிருந்த அந்த சின்ன செட்டில் (அந்த செட்டெல்லாம் அப்போது ஆச்சரியத்துடன் பேசப்பட்டது) பிரணாய் ஒரு பக்கம்.. வினோத் துவா இன்னொரு பக்கம்.. ராய் ஆங்கிலத்தில் பேசுவார்.. துவா இந்தியில் பேசுவார்.. இருவரும் இணைந்து தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தனர். மறக்க முடியாத நிகழ்ச்சி அது..  அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 400 தொகுதிகளுக்கு மேல் வென்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று ஏற்கனவே கணித்திருந்தார் ராய். அதே போல நடந்தது.. அந்த பிரமாண்ட கணிப்புதான் பிரணாய் ராயை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது. அதன் பிறகு நடந்த பல தேர்தல்களுக்கும் சரியான கருத்துக் கணிப்பை நடத்தி வந்தது என்டிடிவி.. ஆனால் தமிழ்நாடு பொதுத் தேர்தல் தொடர்பாக அவர் கணித்த கணிப்பு தவறாகப் போனதைத் தொடர்ந்து, தனது தேர்தல் கருத்துக் கணிப்பையே கைவிட்டுவிட்டது என்டிடிவி.. தனது தொழிலுக்கு பிரணாய் ராய் கொடுத்த மிகப் பெரிய மரியாதை அது.


பிரணாய் ராய் என்ற ஆலமரம் பல புகழ் பெற்ற பத்திரிகையாளர்களை உருவாக்கியது.. அர்னாப் கோஸ்வாமி, சீனிவாசன் ஜெயின், பர்க்கா தத்..  இன்னும் இன்னும் நிறைய நிறைய. அப்பன் மேனன் புகழின் உச்சியைத் தொட்ட நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக  மாரடைப்பால் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 48தான்.. அவர் மட்டும் இருந்திருந்தால் மிகப் பெரிய பத்திரிகையாளராக வலம் வந்திருப்பார்.. அப்பன் மேனனின் இழப்பு பிரணாய் ராய்க்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பாக அமைந்தது. 

இந்தியதொலைக்காட்சி உலகில் முதல் தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனமாக உருவெடுத்தது என்டிடிவிதான்.. அன்று முதல் இந்த நிமிடம் வரை யாருக்கும் அடி பணியாமல் எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல், செய்திகளை உள்ளது உள்ளபடியே கொடுத்து இந்திய மக்களின் தனி இடம் பிடித்து வைத்திருக்கிறது என்டிடிவி. பிரணாய் ராய் போன்ற ஒரு ஜென்டில்மேன் பத்திரிகையாளர் இந்தக் காலத்தில் மிக மிக அரிது.. தனது நிலையிலிருந்து சற்றும் தடுமாறாமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் பிரணாய் ராய்.

பிரணாய் ராய் 80களில் ஏற்படுத்திய பிரமிப்பு இன்று வரை எனக்குள் விலகவில்லை.. ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் மிகச் சிறந்த ரோல்மாடல் ராய்தான்.. பல செய்தித் தளங்களுக்கு ஒரு "மாடல்" ஆக இருந்ததும் என்டிடிவிதான்.. "கத்தல், கூப்பாடு, கதறல், திசை திருப்பல்" சானல்களாக  பல ஆங்கில சானல்கள் இன்று மாறிப் போய் விட்ட நிலையில் என்டிடிவி மட்டும்தான் அழகான ஜர்னலிசத்தை செய்து கொண்டிருக்கிறது.. வட இந்திய சானல்களில் எனக்குப் பிடித்த ஒரே சானலாக இன்று வரை இருப்பது என்டிடிவி மட்டுமே.

சுதந்திரத்தின் மூச்சு இன்று திணற ஆரம்பித்திருக்கிறது.. தொடர்ந்து சுதந்திரமாக அது சுவாசிக்குமா அல்லது இதுவே சுதந்திரத்தின் கடைசி மூச்சாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Images and  video courtesy: NDTV, Wikipedia 

Comments

Velayuthan said…
Nice writeup sir . Wow. Amazing
Varuni said…
Vry informative write up...I too have seen this..but paadhi vishayam onnume puriyaadhu andha vayasula...����

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்