Skip to main content

புத்தகம் சரியா.. இல்லை.. ."பொத்தகம்" சரியா.. வாங்க வாசிக்கலாம்!


ஒரு டிவீட் பார்க்க நேர்ந்தது.. போட்டிருந்தவர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். அது ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழ்.. அதில் இடம் பெற்றிருந்த வாசகம்.. "பொத்தக வெளியீட்டு விழா".. பெரும்பாலும் புத்தக வெளியீட்டு விழா, நூல் வெளியீடு என்றுதான் பார்த்திருப்போம்.. இது வித்தியாசமாக பட்டது (எனக்கு அல்ல).. பொத்தகம் சரியா.. புத்தகம் சரியா என்ற வாதமும் கூடவே நினைவுக்கும் வந்தது.

அதுதொடர்பான ஒரு விளக்க கட்டுரை (ரொம்ப குட்டிதான்.. தைரியமா படிங்க).. நினைவுக்கு வந்தது.. நாலு பேருக்கு உபயோகமாக இருக்குமே என்பதற்காக இதோ அது..!

எழுதியவர்: எழுத்தாளர் சி.வி. ராஜன்

பொத்தகம் தான் உண்மையான தமிழ் என்று சொந்தத் தகுதியில் நான் பொத்து --> பொத்தகம் என்று வந்தது என்று நீண்ட விளக்கம் கொடுத்தால் என் பதிலுக்கு ஆதரவு வாக்குகள் எகிறும்; ஆனால் 'புஸ்தக்' என்பதிலிருந்து புத்தகம் வந்தது, பொத்தகம் என்பது புத்தகத்தின் கொச்சை மொழி என்றால் இங்கே எதிர் வாக்கு போடுபவர்கள் உண்டு!

எனவே நானும் பொத்திக்கொண்டிருக்காமல் , என் புத்திக்கெட்டிய விளக்கத்தை 'பொத்து' என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறேன்!

பொத்து -- ஓட்டையிடு. பழைய நூல்களில், சுவடிகளில் பூச்சி (செல்) அறித்துப் பார்த்திருப்பீர்கள். அதாவது பூச்சிகள் நூல்களில் 'பொத்தல்' இடுகின்றன. அகம் என்றால் வீடு. அந்தப் பூச்சிகள் அந்த நூலிலேயே உண்டு உறங்கி வாழ்கின்றன அல்லவா? அதிலிருந்து தான் பொத்தகம் என்று வந்தது. புரியுதா?

இன்னும் பிரியாவிட்டால் வேறு விதத்தில் விளக்குகிறேன்.

உங்களில் எத்தனை பேருக்கு பொத்தகம் படிக்கும் ஆர்வம் இருக்கிறது? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

நூலகத்திலிருந்து புத்தகம் வாங்கி வருவோம்; ஆனால் படிக்காமலேயே வீட்டில் பொத்தி வைத்திருப்போம். காசு கொடுத்துப் புதுப் புத்தகம் வாங்குவோம். அதைப் பொத்திப் பொத்தி வைத்து வாசனை பார்ப்போமே தவிர சட்டென்று படித்துவிட மாட்டோம்.

நண்பன் "இதைப் படிடா, அருமையான நூல்" என்று சொல்லிக் கொடுத்தால் அதைப் பொத்தி பத்திரமாக படுக்கைக்கருகில் வைத்திருப்போம். "படிக்காவிட்டால் திரும்பித் தந்துவிடு" என்று நண்பன் கடிந்தால், "கொஞ்சம் பொருடா, இதோ படித்து விட்டுத் தந்துவிடுகிறேன்; உனக்கு என்ன அவசரம்?" என்று மீண்டும் அதைப் பொத்தி வைத்துக்கொள்வோமே தவிரத் திருப்பித் தர மாட்டோம்.

இப்படிப் பொத்திப் பொத்தி வீட்டில் வைத்திருப்பதால் அது பொத்தகம். ஆகவே அதுவே சரியான தமிழ் வார்த்தை!

எப்புடி!

Comments

சார், இந்த எளிமையும் நகையாடலும் உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது. கருத்தும், அடி பொளி.

Popular posts from this blog

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)

இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன்.  செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான்.  அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக. ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை. "நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா" "நல்லாருக்கேன் சார்.. புது

"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)

 "என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?" லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது. கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக.