ரிஷி சுனாக் பிரிட்டன் பிரதமரனாலும் ஆனார்.. அவரை வச்சு ஏகப்பட்ட Claims ஓட ஆரம்பிச்சிருக்கு. இவர் எங்க நாட்டுக்காரர் என இந்தியர்கள் சிலர் ஒரு பக்கம் ஓடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாகிஸ்தானில், இவர் எங்க நாட்டைச் சேர்ந்த இந்து என்று சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். இன்னொரு பக்கம் கென்யாக்காரர்கள், அடடே.. இவர் எங்க நாட்டு பூர்வீகமாச்சே என்று புன்னகை சிந்திக் கொண்டுள்ளனர்.
The World Is a Global Village.. உண்மைதான்.. இன்று சாதாரணமாக, ஜனங்களோடு ஜனமாக தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு நாட்டில் செட்டிலாகி எதிர்காலத்தில் அந்த நாட்டுக்கே அதிபராகும் நிலை வரலாம்.. இதெல்லாம் ஒரு காலத்தில் சிரித்துக் கடந்து விடக் கூடிய கற்பனையாக இருந்திருக்கலாம்.. ஆனால் இன்று அது சாத்தியம். அதைத்தான் தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
அமெரிக்க அதிபராக ஒபாமா வந்தபோது அதுதான் நடந்தது. அவரது பெற்றோரின் பூர்வீகம் ஆப்ரிக்கா. அதேபோல கமலா ஹாரிஸ் அமெரிக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியபோதும் அதுதான் நடந்தது. அவரது பூர்வீகம் இந்தியா, ஜமைக்கா என்று விரிவடைந்தது. இன்று ரிஷி சுனாக் விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது.
இதில் யாரும் இவர்களை உரிமை கொண்டாட முடியாது.. உரிமை கொண்டாடுவதால் அப்படிக் கொண்டுவோருக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. காரணம், இவர்கள் அவர்கள் சார்ந்த நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்ந்த நாடுகளின் நலனுக்காக மட்டுமே உழைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.. அவ்வளவே.
ஒபாமா அதிபரானபோது ஆப்பிரிக்க நாடுகளுக்கு பெரும் நன்மை விளையும் என்றார்கள்.. பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்பதே எதார்த்தம். கமலா ஹாரிஸ் வந்தபோதும், இந்தியாவுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.. அவரோ அவரது வேலையில் மட்டுமே கவனமாக இருந்து வருகிறார். இந்தியாவைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. அதை விட காமெடி அவர் மாட்டுக் கறி சுவைத்து சாப்பிட்ட வீடியோவைப் பார்த்து, அவரை பாராட்டி சந்தோஷித்த பலரும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதுதான்.. இப்போது ரிஷி சுனாக்கை வைத்தும் நிறைய புளகாங்கிதங்கள் புற்றீசல் போல சமூக வலைதளங்களை வலம் வருகின்றன.
ரிஷி சுனாக்கின் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம். ஆனால் அவரது தாத்தா பாட்டி யாரும் இந்தியாவில் பிறக்கவில்லை. அவரது பெற்றோரும் இந்தியாவில் பிறக்கவில்லை. ரிஷியும் இந்தியாவில் பிறக்கவில்லை. அவரது ஜீனில் ஒரு ஓரமாக இந்தியா இருக்கிறது.. அவ்வளவே. இதில் இந்தியா பெருமைப்பட பெரிதாக எதுவும் இல்லை.
ரிஷி சுனாக்கை பலரும் பல விதமாக அனாலிசிஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். ரிஷி சுனாக்கின் தந்தை வழி தாத்தாவான ராம்தாஸ் சுனாக் அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் (தற்போது பாகிஸ்தானில் உள்ள) குஜ்ரன்வாலாவில் பிறந்தவர். பின்னர் கென்யாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு அவர் சுஹாக் ராணி தேவியை மணக்கிறார். இவர் கென்யாவில் செட்டிலானவர், இவரது பூர்வீகம் டெல்லி. 1937ல் இந்தத் திருமணம் நடக்கிறது.
தாய் வழி தாத்தாவான ரகுபீர் செய்ன் பெர்ரி, அவரது மனைவி ஷ்ரக்ஷா கிழக்கு ஆப்பிரிக்காவில் பிறந்த, இந்திய வம்சவாளியினர். இந்த இரண்டு குடும்பங்களும் பின்னர் பிரிட்டனுக்கு இடம் பெயருகிறது. இப்படித்தான் தொடங்குகிறது ரிஷி சுனாக்கின் பூர்வீகக் கதை.
ரிஷி சுனாக்கின் உண்மையான பெயர் ருஷ்டி சன்னி என்று சிலர் சொல்கிறார்கள்.. அதாவது பாகிஸ்தானில் இப்படித்தான் பெயர் வைப்பார்கள் என்றும் இந்தப் பெயரைத்தான் ரிஷி சுனாக் என்று சொல்வதாகவும் அவர்கள் அடித்துச் சொல்கிறார்கள். காரணம், ரிஷியின் தாத்தா பிறந்தது பாகிஸ்தானில் என்பதால்.
பாகிஸ்தான் மீடியாக்கள் சில ரிஷி சுனாக்கை, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இந்து என்றுதான் சொல்கின்றனவாம். இன்னொரு பக்கம் கென்யா நாட்டிலும் ரிஷி சுனாக்கை கொண்டாடுகின்றனர். மேற்கத்திய நாடுகளுக்கு தலைவர்களை ஏற்றுமதி செய்யும் நாடாக கென்யா விளங்குவதாகவும் அவர்கள் பெருமிதம் அடைகிறார்கள். முன்பு ஒபாமா, இப்போது ரிஷி சுனாக் என்று வரிசை நீள்வதாகவும் அவர்கள் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர்.
உலகின் எந்த ஒரு இனமும் "அந்த இனமாக" இருக்க முடியாது. அதன் மரபணுவை பிடித்து ஆராய ஆரம்பித்தோம் என்றால்.. அது வேறு ஒரு மூலையில் போய் நிற்கும்.. அதுதான் அறிவியல். ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மனிதக் கூட்டத்தின் மூலம், மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
உலகம் பிறந்தது முதல், மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான், ஓடிக் கொண்டிருக்கிறான். அவனது மரபணுதான் அவனது அடையாளத்தை முடிவு செய்கிறது.. ஆனால் அந்த அடையாளமும் ஒரு சிங்கில் அடையாளமாக இல்லாமல், பன்முகத் தன்மை கொண்டதாக மாறிக் கொண்டே இருக்கிறது.. இது ஒரு சங்கிலி நிகழ்வு.. எனவே யாரும் யாருக்கும் உரிமையானவர்கள் இல்லை.. என்பதே எதார்த்தம்.
இந்தியாவிலும் இப்படி ஒரு வரலாறு நிகழவிருந்தது.. சோனியா காந்தியைத் தேடி பிரதமர் பதவி ஓடி வந்தது.. ஆனால் அவர் இத்தாலிக்காரர், இந்தியர் அல்லாதவர் என்றெல்லாம் பலத்த சப்தம் எழுந்ததால்.. அவர் நாகரீகமாக அந்தப் பதவியை மறுத்து விட்டார்.. மன்மோகன் சிங் பிரதமரானார்.. ஒரு வேளை சோனியா காந்தி பிரதமராகியிருந்தால்.. ஒபாமா, கமலா, ரிஷி சுனாக் வரலாறுகளுக்கு முன்னோடியாக இருந்திருப்பார்...!
Comments