Skip to main content

"ஜெயில்ல அடைச்சு வச்சிருக்கிற கைதிகளைப் பார்க்க வந்த மாதிரி".. உலாப் போகும் உணர்வுகள் (10)


4 நாட்களாகி விட்டது. இன்று ரவிச்சந்திரன் டிஸ்சார்ஜ் ஆகிறார். செம ஹேப்பியாக காணப்பட்டார் மனிதர். ஆனால் ஆதவனுக்குத்தான் அவர் கிளம்புவது சற்று கடினமாக தெரிந்தது. காரணம், இருந்த இத்தனை நாட்களும் தனிமையின் சுவடு கூட தெரியாமல் நன்றாக பேசி கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தார்.

பல விஷயங்களை ரவிச்சந்திரனிடமிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது. எல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல ஞானம் மிக்கவராக  இருக்கிறார். டாக்டர்களிடமே மருந்துகள் குறித்து தெளிவாக பேச அவரால் முடிகிறது. தனக்கு என்ன மருந்து தரப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதில் விழிப்புணர்வுடன் இருக்கிறார். தேவையானதை மட்டுமே பேசுகிறார். தேவையில்லாத வார்த்தைகளை விடுவதில்லை. நல்ல மனிதர்.

பிற்பகலுக்கு மேல் அவர் டிஸ்சார்ஜ் ஆனார். போகும்போது "உங்களுக்கும் சீக்கிரம் சரியாகி விடும் சார். நாளையே நீங்களும் கிளம்பிப் போய்ருவீங்க. உடம்பைப் பார்த்துக்கங்க" என்று அன்போடு சொல்லிச் சென்ற ரவிச்சந்திரனுக்கு பாசத்துடன் விடை கொடுத்தான் ஆதவன்.

மனிதர்களிடம் நிறைய விஷயங்கள் இப்போது  இல்லாமல் போய் விட்டது.. அன்பு, அக்கறை, பரிவு, பாசம், உதவி செய்வது என.. நிறைய சொல்லலாம். இது "ஃபாஸ்ட் ஃபுட்" உலகமாகி விட்டது. இங்கு "எத்திக்ஸ்"களுக்கு மரியாதை இல்லை, ஏன் இடமே இல்லை. நினைத்ததை செய்யலாம், நினைத்ததை பேசலாம்.. யாரைப் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. நமக்கு தேவையானது நடந்ததா.. அத்தோடு சரி.. போய்ட்டே இரு.. இப்படி மாறிப் போய் நிற்கிறது மனித குலம்.

இந்த நான்கு நாள் வாசத்தில் நிறைய மனிதர்களை சந்திக்க முடிந்த ஆதவனுக்கு, ஒரு நபர் குறித்த நினைவு அவ்வப்போது வந்து கொண்டே இருந்தது. அவர்தான் சங்கீதா.. உடன் பிறவாத சகோதரி. லட்சுமியுடன் பணியாற்றியவர்.. சமீபத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் அவரது வாழ்க்கை முடிந்தது. இப்போது வரை அதை நம்பக் கூட முடியவில்லை. மனது ஏற்கவில்லை. 

மிக மிக தெளிவான பெண் சங்கீதா. வேலையில் அத்தனை நேர்த்தி, அத்தனை தெளிவு, அத்தனை விவரமாக இருப்பார். அலுவலகத்தில்தான் அப்படி என்றால் வீட்டிலும் அதேபோலத்தான்.. நட்பு பாராட்டுவதில் அவரைப் போல யாரும் இருக்க முடியாது.. சின்ன சின்ன விஷயத்தைக் கூட தெளிவாக தெரிந்து வைத்திருப்பார்.. 

அவ்வப்போது ஏதாவது வாட்ஸ் ஆப்பில் அனுப்பிக் கொண்டே இருப்பார். பிரஸ் ரிலீஸ் பற்றிக் கேட்பார். அரசாணை பற்றிக் கேட்பார். ஏதாவது நல்ல வீடியோ பார்த்தால் அதை அனுப்பி வைப்பார்.. செய்திக்கு உதவுமா பாருங்க என்று அக்கறையோடு கேட்பார்.. "நீங்க நல்லா பாடறீங்க.. சீக்கிரம் சினிமாவிலும் பாடுவீங்க பாருங்க".. என்பார்.. கடவுள் பக்தி, குடும்பப் பாசம், நட்பு பாராட்டுவது, அலுவலக வேலை என சகலகலாவல்லியாக திகழ்ந்த அந்த பாசத்துக்குரிய ஜீவன்.. இன்று இல்லை என்று நினைக்கவே முடியவில்லை..

அகிலன் மீது தனிப்பாசம் கொண்டவர். தனது மகனைப் போல பார்த்தவர். தன் வீட்டில் ஏதாவது செய்தால் அகிலனுக்கு கொண்டு போய்க் கொடுங்க என்று கொண்டு வந்து கொடுப்பவர். அவர் வைக்கும் மீன் குழம்பு ரொம்ப ஸ்பெஷல்.. அகிலனுக்கும் அது ரொம்பப் பிடிக்கும்.. சங்கீதாவைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.. அப்படி ஒரு அன்பு நிறைந்த ஆத்மா.. அலுவலக நட்பாக மலர்ந்து.. ஆதவனின் குடும்பத்தில் ஒருவராக மாறிப் போனவர்.. அவர் மட்டுமா.. அவரது கணவர், இரு மகன்கள் எல்லோருமே அத்தனை அற்புதமான ஜீவன்கள்... மனதே வெறுத்துப் போய் விட்டது அவரது மறைவுச் செய்தியைக் கேட்டபோது.

மனித வாழ்க்கை ரொம்ப சின்னதுங்க.. நாமெல்லாம் சிலாகிக்கும் அளவுக்கு அது பெரிய மேட்டரே கிடையாது.. கண்ணை மூடித் திறப்பதற்குள் ஓடிப் போய் விடும் இந்த வாழ்க்கை.. அத்தனை சின்ன வாழ்க்கையில் எத்தனை எத்தனை போராட்டங்கள், போட்டிகள், விஷமங்கள், வில்லங்கங்கள்.. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு துடைத்தெடுத்து "நீ இவ்வளவுதான்" என்று மரணம் சொல்லிப் போகும் அந்த தருணத்தில்.. நாமெல்லாம் ஒன்றுமில்லாமல் சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போய் விடுகிறோம்.. நமது பிம்பமெல்லாம் அத்தோடு சரி.. நமது அடையாளம் என்பது நாம் விட்டுச் சென்ற நல்ல நினைவுகள்தான்.

சங்கீதாவின் வாழ்க்கை முடிந்து போயிருக்கலாம்.. ஆனால் என்றென்றும் அன்புச் சகோதரியாக நினைவுகளில் வாழ்வார்...  மரணச் செய்தி வந்தபோது லட்சுமி மருத்துவமனையில்.. ஆதவன் வீட்டு ஐசோலேஷனில். யாருமே போக முடியாத சூழல்.. பெரும் மன வருத்தத்தை அடைந்த நாள் அது. கடைசியில் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போனதே என்ற வருத்தம் இன்னும் பல காலத்துக்கு மனதில் உறைந்திருக்கும்.

மதியம் டாக்டர் வந்தபோது, உங்களுக்கு பிளேட்லெட் இன்னும் இம்ப்ரூவ் ஆகவில்லை. இன்னொரு டெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறோம். நாளை எடுப்பார்கள் என்று கூறிச் சென்றார். ஆதவனுக்கு உறக்கம் வரவில்லை. முதல் முறையாக மனசு டல்லாக உணர்ந்தது. லட்சுமியிடமிருந்து போன் வந்தது.

"என் பிரண்ட் கிட்ட பேசினேன். அவரோட ஹஸ்பென்ட் (அவர் சித்தா டாக்டர்) என்ன சொல்றார்னா, சில நேரம் டெங்கு வந்தால்கூட கொரோனா என்றுதான் காட்டுமாம். இதற்கும் தனியாக மருந்து கிடையாது. மாறாக கொரோனாவுக்கு சாப்பிடுவது போலத்தான் மருந்து தருவாங்க.. நிறைய தண்ணீர் குடிங்க.. ஃப்ரீயா இருங்க.. நான் ஒரு மாத்திரை வாங்கி அனுப்புறேன். அதைச் சாப்பிடுங்க. பிளேட்லெட் கவுன்ட் சரியாய்ரும்"

ஆறுதலான அந்த வார்த்தைக்குப் பின்னர் அமைதியாக கட்டிலில் படுத்திருந்தான் ஆதவன்.. நேற்றுதான் ஆதி நாராயணன் டிஸ்சார்ஜ் ஆனார். பிற்பகலுக்கு மேல் அவர் கிளம்பிச் சென்றார். ஆனால் காலையில் நடந்த களேபரத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

கையில் செல்போனுடன் ஆதி நாராயணன் மனைவி ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார். கூடவே அவரும் இருந்தார். இருவரும் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர். கைகளை வெளியே நீட்டி நீட்டி டாட்டா வேறு காட்டிக் கொண்டிருந்தனர். என்ன நடக்குது என்று இவனுக்கு சரியாக புரிபடவில்லை.

சிறிது நேர பேச்சுக்குப் பின்னர் இருவரும் திரும்பி வந்தனர். அந்தம்மா கண்ணில் அப்படி ஒரு சோகம்.. அவரும்தான். 

"என்னாச்சு.. யார் கிட்ட பேசிட்டிருந்தீங்க"

"மகன் கிளம்பிட்டான் தம்பி.. குடும்பத்தோடு வந்திருந்தான். நாங்க கிளம்பிட்டோம்னு சொல்லிட்டுப் போறதுக்காக வந்திருந்தான்."

"ஓ.. வெளியே நின்றது அவர்களா.."

"ஆமாப்பா.. இப்படியா நிலைமை வரணும்.. பேரப் பிள்ளைகளையும், அவனையும், மருமகளையும் பார்த்துக் கையாட்டி பேசிட்டிருந்தோம். ஏதோ ஜெயில்ல அடைச்சு வச்சிருக்கிற கைதிகளைப் பார்க்க வந்த மாதிரி வந்துட்டுப் போறாங்க.. பேரப் பிள்ளைக சரியா கூட சாப்பிடலையாம். ஏன்டான்னு கேட்டா, அம்மா ஹோட்டல்ல வாங்கி வாங்கித் தந்தாங்கங்கிறாங்க.. என்னத்த  சொல்ல.."

அவர்களின் வலியை இவனும் உணர்ந்தான். உறவுகளின் வீரியம் நாளுக்கு நாள் குறைகிறதா அல்லது உறவுகளின் ரூபம் மாறிப் போய் விட்டதா.. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிசிதானா.. ஒன்றும் புரியவில்லை.

"சரி கவலைப்படாதீங்க.. அதான் சந்தோஷமா வந்து பார்த்துட்டு கிளம்பிட்டாங்கள்ள.. இனி நீங்க நிம்மதியா இருப்பீங்க. இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு"

"ரெண்டு பேருக்கும் நல்லாய்ருச்சு. டாக்டர் மத்தியானம் வந்து பார்த்ததும் கிளம்பிப் போகலாம்னு சொல்லிட்டாங்க.. அதனால இன்னிக்கு கிளம்பறோம்"

"ரொம்ப சந்தோஷம்.. பத்திரமா கிளம்பிப் போங்க. கொஞ்ச நாளைக்கு கவனமா இருங்க.. நான் டிஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன்"

"சரிப்பா.. மாமா கிட்ட சொல்லிருங்க"

தளர்ந்தபடி நடந்து சென்ற அந்த இரு பெரியவர்களும் மனதுக்குள் பல வலிகளை வித்திட்டு விட்டு நடந்து சென்றனர். 

பெருமுச்செறிந்தபடி தனித்துப் படுத்துக் கிடந்தான் ஆதவன். அறை வெறிச்சோடிக் கிடந்தது. எதிர் அறைகள் சில காலியாகி விட்டன. இடது புற அறை காலி, ஜன்னல் ஓரத்து அறையும் காலி. எதிரில் இருந்த இரு பாட்டிகளும் போய் விட்டனர். இளங்கோவன் மட்டும் இருக்கிறார். வலது புறத்தில் அந்த வக்கீலின் மனைவி இருக்கிறார். அந்த காரிடாரில் உள்ள பிற அறைகளும் காலி.

இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.. பிறக்கிறோம்.. பிறப்புக்கான காரியங்களை செய்கிறோம்.. காரியம் முடிந்ததும்.. கூப்பிட்டுக் கொள்கிறான்.. புறப்பட்டுச் சென்று விடுகிறோம்.. நாம் இருந்த இடத்தில் இன்னொருவர்.. இப்படியாக தொடர்கிறது இந்த வாழ்க்கை சங்கிலி.

(தொடரும்)


11வது பகுதி

Comments

Popular posts from this blog

வாழ்க்கைப் பயணங்கள்.. எப்போதும் முடிவதில்லை!

வருடங்கள் கூடக் கூட வயதும் ஏறும்.. இது இயற்கை.. ஒவ்வொரு வருடமும் வரும் பிறந்த நாள்.. அத்தனை சந்தோஷம் தரும்.. இளம் வயதில்!. வயது மேலே செல்லச் செல்ல கொண்டாட்டங்கள் தவிர்த்து, அதைத் தாண்டி கவலைகளும், அதன் தாக்கங்களால் ஏற்படும் ஏக்கங்களும் நிரம்பிக் கிடக்கும். என்னைப் பொறுத்தவரை கவலைகளை நான் பெரிதாக தேக்கி வைத்துக் கொள்வதில்லை. எனக்கும் கவலைகள் வரும், சோகங்களும் நிழலாடும்.. வருத்தங்களும் வந்து போகும்.. ஆனால் எல்லோருமே "விசிட்டிங் புரபசர்" போலத்தான்.. வருவார்கள், வந்த வேகத்தில் போய் விடுவார்கள். எனவே எனக்கென்று தனியாக கொண்டாட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. எல்லா நாளுமே எனக்கு கொண்டாட்டம்தான்.. என்னுடன் இருப்பவர்களின் சந்தோஷமே எனது சந்தோஷமும்.. நான் எப்போதும் உற்சாகமாக இருப்பதன் ரகசியம் இதுதான்! இதுவரை எந்தப் பிறந்த நாளிலும் அடைந்திராத ஒரு சந்தோஷத்தை, உச்சகட்ட மகிழ்ச்சியை இந்த 53வது பிறந்த நாளில் உணர்ந்து, மனசு நெகிழ்ந்து, உற்சாகத்தில் நிரம்பியிருக்கிறது. நிறைய காரணங்கள்.  அதில் ஒரு விஷயத்தை மட்டும் இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட ஆசைகள், கனவுகள் இருக்கும். எனக்க

"நல்லா ரெஸ்ட் எடுங்க.. அப்பா"... உலாப் போகும் உணர்வுகள் (2)

இருக்கு.. இந்த ஆஸ்பத்திரியில் நமக்கு வித்தியாசமான அனுபவம் இருக்கு என்று மனதுக்குள் ஒரு அசரீரி ஓட.. மெல்லிய சிந்தனையுடன் தனது பேகை எடுத்து கட்டில் மீது மீது வைத்து அதைத் திறந்து துணிகளை புரட்டி லுங்கியை உருவி அதைக் கட்டிக் கொண்டான் ஆதவன்.  செல்போனை எடுத்து வீட்டுக்கு போன் செய்து, நான் வந்துட்டேம்மா.. எல்லாம் நல்லாருக்கு. நல்ல ரூம் மேட் கிடைச்சிருக்கார் என்று கூறி விட்டு போனை கீழே வைத்தான்.  அறைக்கு வெளியே என்ன நிலவரம் என்று பார்ப்பதற்காக மெல்ல வெளியேறி வந்தான். நீண்டு கிடந்த காரிடாரில் ஒரு விதமான அமைதி. அறைகள் எல்லாம் கதவு பூட்டப்பட்டுக் கிடந்தன. ஆனால் உள்ளுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆட்கள் இருக்கிறார்கள், அமைதியாக. ஆதவனின் அறைக்கு இடதுபுறத்தில் ஒரு அறை. அதில் அப்பா, மகள் இருப்பது தெரிந்தது. அதற்கு எதிர்புற வரிசை மூலை அறையில் ஒரு வயதான கணவன், மனைவி. கணவர் தண்ணீர் பிடிப்பதற்காக பிளாஸ்க்குடன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆதவன் புன்னகைத்தான். பதிலுக்கு அவரிடமிருந்தும் ஒரு சின்னப் புன்னகை. "நல்லாருக்கீங்களா. இப்ப பரவாயில்லையா" "நல்லாருக்கேன் சார்.. புது

"கிங் இன்ஸ்டிடியூட் அரிசில நம்ம பெயர் எழுதியிருந்தா என்ன சார் செய்ய முடியும்?".. உலாப் போகும் உணர்வுகள் (1)

 "என்னங்க பண்ணலாம்.. பேசாம ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆயிடுறீங்களா?" லட்சுமி அப்படிக் கேட்டபோது ஆதவனுக்கு தெளிவாக எந்த யோசனையும் வரவில்லை. மனதுக்குள் மெல்ல குழப்பம் குடியேறியது. போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தை விட, நமக்கு ஏதாவது நடந்து விட்டால் அகிலன் நிலைமை என்னாகும் என்ற பயம்தான் முதலில் தலை தூக்கியது. கையில் வைத்திருந்த ரிப்போர்ட்டை திரும்பப் பார்த்தான்.. சின்ன யோசனைக்குப் பிறகு " ரிஸ்க் எடுக்க வேண்டாம் லட்சுமி, ஹாஸ்பிடல் போயிடலாம்" ஆதவன் சொன்னதைக் கேட்டதும், லட்சுமிக்கும் அதுவே சரியென்று பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பேக்கிங் முடிய.. 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினான் ஆதவன். மனதுக்குள் இனம் புரியாத குழப்பம்.. பயமெல்லாம் பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ஏதோ ஒரு குழப்பம்.. கார் மெல்ல வேகம் பிடித்து பாய்ந்து செல்ல, பின்னால் ஓடிச் சென்ற உருவங்களை உள்வாங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆதவனுக்குள் எண்ணற்ற சிந்தனைகள். ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை.. ஒவ்வொரு விதமாக.. ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு திசையில்.. அத்தனை பேரையும் வதைத்துக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல்லாக.