ரொம்ப நாளாச்சுல்ல கவிதை எழுதி என்று நினைத்துக் கொண்ட ஆதவனுக்கு மருத்துவமனைக்கு வரும்போது நோட்பேட், பேனா என எதையும் எடுத்து வராதது இப்போது உரைத்தது.
முன்பெல்லாம் கவிதை எழுதுவது ஒரு ஹாபியாக இருந்தது. ஆனால் நாட்கள் போகப் போக "பைத்தியம்" பிடித்தது போல வேலையில் மூழ்கிப் போனதால் அந்த அருமையான திறமையை மறந்தே போய் விட்டான் ஆதவன். முன்பெல்லாம் ஹைவேஸில் போகும் கார் போல சர்ரென்று வந்து விழுந்த வரிகள் எல்லாம் இப்பெல்லாம், மாட்டு வண்டியில் வருவது போல தள்ளாடித் தள்ளாடித்தான் வருகிறது.
கவிதை குறைந்து போன நிலையில் கதை எழுதும் ஆர்வம் பிறந்தது. அதுவும் நல்லாதான் வருது என்று பலரும் சொல்லவே, அதையும் செய்து பார்த்தான்.. இப்போது இன்னொரு புது ஆர்வம் பிறந்து வந்து கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருக்கிறது.. அதுதான் பாட்டுப் பாடுவது!
கொஞ்சம் கூட இசையில் ஞானமே இல்லாத ஆதவனுக்கு எல்லாமே கேள்வி ஞானம்தான்.. இசையின் ஏபிசிடி கூட தெரியாது என்றாலும் கூட இசையை ரசிக்கும் ஆர்வம் ஆரம்பத்திலிருந்தே இருப்பதால் பாட்டு பாடுவது சற்று இயல்பாகவே வந்தது.. "பரவாயில்லை.. நல்லாருக்கே" என்று சில நல்ல ஆத்மாக்கள் சொல்லப் போக.. ராத்திரி 8 மணி ஆனா போதும்.. "வெள்ளைச்சாமி" போல பாட ஆரம்பிச்சுருவான்!
ஆனால் பாட்டுப் பாடுவது புதிதல்ல.. 10வது படிக்கும்போது ஆரம்பித்த கதை இது.. அப்போது எல்லாம் ஊரில் எங்கு திரும்பினாலும் இளையராஜாவின் மேல் பைத்தியமாக இருந்தவர்கள்தான் அதிகம் உலாவுவார்கள். அந்தக் கூட்டத்தில் நம்மாளும் ஒருவனாக இருந்தான். வரிகள் தெரியாவிட்டாலும் கூட அந்த ட்யூனையே வாயில் முனுமுனுத்துக் கொண்டிருப்பது அன்றாட நிகழ்வு. இளையராஜாவின் தீவிர வெறியனாக வலம் வந்த காலம் அது. இப்பவும் அப்படித்தான். பெட்டி பெட்டியாக இளையராஜா பட பழைய கேசட்டுகள் இன்றும் கூட வீட்டில் குவிந்து கிடக்கிறது.
புதுப் படம் வந்து விடக் கூடாது.. அந்தப் பாட்டை எப்படியாவது கேட்டாக வேண்டும் என்று டீக்கடைகளைத் தேடி ஓடிய காலம் அது. இளையராஜா பாடல்கள் ஒலிக்காத டீக்கடைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பிறகு அண்ணன் மூலம் ஒரு வாக்மேன் கிடைத்தது. அது கிடைத்தாலும் கிடைத்தது.. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக் காதில் வைத்துக் கொண்டே இருப்பான். காலி கேசட் வாங்கிக் கொண்டு போய் கடையில் கொடுத்து பிடித்த பாட்டுக்களை எல்லாம் ரெக்கார்ட் செய்து வந்து அதில் போட்டுக் கேட்கும்போது.. ஆஹா.. இதுதாண்டா சொர்க்கம் என்று ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்க.. வேற லெவல்ங்க அந்த சுகமெல்லாம்.
அப்படிப் பாட்டுக் கேட்ட காலத்திலேயே வாயில் முனுமுனுப்பாக எதையாவது பாடிக் கொண்டிருப்பான். ஆனால் அதையெல்லாம் பாட்டு என்று சொல்லி விட முடியாது. சுமார் ரகம்தான். இருந்தாலும் அது அப்படியே தொடர்ந்தது. கல்லூரிக்கு வந்த பின்னர் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருந்தது. ஒருத்தன் நல்லா பேசுவான்.. ஒருத்தன் கவிதையில் பட்டையைக் கிளப்புவான்.. இவன் பாடுவான்.. இப்படியாக ஓடியது கல்லூரிக் காலம். ஆனாலும் அப்போதும் கூட பாடல் பாட வேண்டும் என்ற ஆசையெல்லாம் வந்ததே கிடையாது. அது வேற டிபார்ட்மென்ட் என்ற அளவில்தான் அதை தூரமாக வைத்திருந்தான்.
ஆனால் இப்போது ஒரு ஆறு மாதமாக இந்தப் பாடல் ஆர்வம் வந்து ஒட்டிக் கொண்டுள்ளது. ஸ்டுடியோவில் பாடுவது போல சீரியஸாக பாட்டுப் பாடுவதில் இத்தனை மன சந்தோஷம் கிடைத்ததை இப்போதுதான் உணர்ந்தான் ஆதவன். மன அழுத்தங்கள் குறையவும், மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கவும், மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கவும் இது உதவியதாக நம்புகிறான்.. சரி இதற்கு மேலும் பொறுக்க முடியாதுடா கைப்புள்ள.. அப்படியே ஸ்ம்யூல் பக்கம் ஓடு என்று மனது எட்டி உதைக்க.. இசைக்குளத்தில் தொபீர் என்று குதித்தான்.. பின்விளைவுகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல்!
"ஸ்ம்யூல் பைத்தியங்கள்" என்று பலரும் கூறக் கேள்விப்பட்டிருந்த ஆதவனுக்கு அதன் உள்ளே போன பிறகுதான் தெரிந்தது.. இது எவ்வளவு நல்ல மீடியா என்று. நீங்கள் எஸ்பிபி என்று நினைத்துக் கொண்டோ, சித்ரா என்று கற்பனை செய்து கொண்டோ பாடத் தேவையில்லை.. உங்கள் ஒரிஜினல் குரலில் பாடுங்கள்.. இங்கு நீங்கள் பாடுவது உங்களுக்காக மட்டுமே.. உங்களுக்கான தளம் இது.. உங்கள் உணர்வுகளை இறக்கி வையுங்கள்.. அது போதும்.. இது ஒரு அருமையான தளம் என்பதை விட மனதை ரிலாக்ஸ் செய்யும் மருந்து என்று சொல்லலாம்.
காலம் காலமாக கேட்டு ரசித்த பாடல்களை நமது குரலில் பாடி அதை ரசிப்பது தனி அனுபவமாகத்தான் இருக்கிறது. இப்போது ஆஸ்பத்திரிக்கு வந்து படுத்துக் கிடந்த இந்த நாட்களில்தான் பாடல் பாடும் அனுபவத்தை மிஸ் செய்திருந்தான் ஆதவன். அன்று இரவு திடீர் ஆசை பிறந்தது.. பாடிப் பார்ப்போமா என்று. பாட வேண்டும் என்று ஆசை வந்து விட்டால் விட முடியுமா.. ஒரு பாட்டை எடுத்து சும்மா பாடிப் பார்த்தான்.. ஒரு பக்கம் பயம்.. பக்கத்து ரூம்காரர்கள் பயந்து போய் புகார் செய்து விட்டால்.. மொத்தி விடுவார்களே என்று... இருந்தாலும் மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படியான சத்தத்தில் ஒரு பாடலைப் பாடினான்.. ஆனால் குரல் ஒத்துழைக்கவில்லை. தொண்டை வலி இருந்ததால் சரியாக பாட முடியவில்லை. இருந்தாலும் பாடிய பாடல் அவனுக்கு திருப்தியாகவே இருந்தது.. இருந்தாலும் அதை அழித்து விட்டான்.. கேட்பவர்கள் பாவம் இல்லையா!
இந்த நேரத்தில் ஆதவனுக்கு சின்னு ஞாபகம் வந்தது. கேரளத்து சிறுமி.. பத்து வயசுக்குள்தான் இருக்கும். ரொம்ப க்யூட்.. ரொம்ப அழகு.. அருமையான குரல் வளம்.. சூப்பராக பாடுகிறாள் இந்த வயதிலேயே.. ஆதவனின் ஸ்ம்யூல் பிரண்ட்.. இருவரும் இணைந்து நிறைய மலையாளப் பாடல்களை பாடியுள்ளனர். சின்னு மம்முட்டி ரசிகை.. எந்தப் பாட்டாக இருந்தாலும் மம்முட்டி பாட்டு மட்டுமே பாடுவாள்.. மலையாளத்தில் ஆதவன் பாடுவதை அவள் ரொம்பவே ரசிப்பாள்.. அது என்னவோ தெரியவில்லை.. மலையாளப் படங்கள், பாடல்கள் மீது அவனுக்கு தனி ஈர்ப்பு உண்டு.. ரொம்ப காலமாகவே. பெங்களூரில் இருந்தபோது லிடோ தியேட்டரில் பார்க்காத மலையாளப் படங்களே கிடையாது.. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் போய் உட்கார்ந்து விடுவான். மோகன்லால், மம்முட்டி என்றெல்லாம் போவது கிடையாது.. மாறாக பிற மலையாளக் கலைஞர்கள் பலருக்கும் ஆதவன் பெரிய ரசிகன். இன்னொசன்ட், சீனிவாசன், திலகன், நெடுமுடி வேணு என இந்த லிஸ்ட் பெரியது.. சின்னுவுடன் பாடிய அனுபவங்களை மனதில் நினைத்துக் கொண்ட ஆதவன்.. அப்படியே அந்தக் குட்டிப் பாப்பாவுடன் பாடிய பாடல்களை கேட்டபடி அன்றைய இரவை இனிமையாக்கினான்.
சரி.. வந்தது வந்துட்டீங்க.. இந்தக் கவிதையைக் கேட்டுட்டுப் போய் தூங்குங்க...!
"மீண்டும் வந்தது இரவு
வானில் காணவில்லை..
என் நிலவு"
(தொடரும்)
Comments