5 மணிக்கே விழிப்பு வந்து விட்டது.. இன்றோடு வந்து ஆறு நாட்களாகி விட்டது. எப்படா வீட்டுக்குப் போவோம் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.
மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது முதலே பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் வரவில்லை. சில நேரம் மூச்சு விட கஷ்டமாக இருந்தது. கையோடு கொண்டு வந்திருந்த இன்ஹேலரை எடுத்துக் கொண்டான். சில நேரம் தொண்டை வறட்சி இருந்தது, பெரிதாக வலி இல்லை. எனவே அதைக் கண்டு கொள்ளவில்லை. சில நேரம் கண்ணில் வலி, தலைவலி இருந்தது, பேராசிட்டமால் போட்டுக்கச் சொல்லி விட்டார்கள், இவ்வளவுதான். இதைத் தாண்டி பெரிதாக எந்தப் பிரச்சினையும் வரவில்லை. எல்லாவற்றுக்கும் எளிமையான வைத்தியம்தான். அதைத் தாண்டி டாக்டர்களும் பெரிய அளவில் மருந்துகள் தரவில்லை, தேவைப்படவில்லை என்பதே உண்மை.
இன்று அந்த பிளட் டெஸ்ட் சோதனை வந்து விடும். அது மாலைக்கு மேல்தான் தெரியும். அதில் நார்மல் என்று வந்து விட்டால் கிளம்பி விடலாம் என்று நினைத்துக் கொண்டான். அப்பாடா வீட்டுக்குப் போகும் நேரம் வந்து விட்டது என்பதே ஒரு ஆறுதலாக இருந்தது. என்னதான் மருத்துவமனை வசதியாக இருந்தாலும், மனித நேயம் மிக்கவர்கள் கையில் நாம் பாதுகாப்பாக இருந்தாலும், ஏதோ நவீன சிறையில் அடைபட்டிருப்பதைப் போலவே ஒரு பிரமை இருந்து கொண்டிருந்தது.
நினைத்துப் பார்த்தால் மனித வாழ்க்கையே கூட ஒரு சிறைவாசம் போலத்தான். எல்லோருமே ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்குண்டு அடைந்துதான் கிடக்கிறோம். ஒன்றிலிருந்து விடுபட்டால்.. இன்னொன்றில் அடைபடுகிறோம்.. அதிலிருந்து வேறொன்று.. இப்படித்தான் போகிறது வாழ்க்கை.. மனித வாழ்க்கையின் முடிவுதான் உண்மையான விடுதலையாக இருக்கிறது.
இன்றைய டிபன் சூப்பராக இருந்தது. ரொம்பப் பிடிச்ச பொங்கலும், வடையும் களை கட்டியிருந்தது. ருசித்துச் சாப்பிடத் தோன்றியது. பக்கத்து அறையிலிருந்து வக்கீலின் மனைவி எட்டிப் பார்த்தார்.
"சார்.. உங்க கிட்ட சேஞ்ச் இருக்கா"
"எவ்வளவுக்கு மேடம்"
"10, 10 ரூபாயா இருந்தா நல்லாருக்கும்.. இந்த ஆயாம்மாக்களுக்கு கொடுக்க தேவைப்படுது"
பர்ஸைப் பார்த்தபோது 50 ரூபாய்க்கு சில்லறை இருந்தது. எடுத்துக் கொடுத்தான் ஆதவன்.
"சார்.. எப்படி இருக்காங்க இப்போ"
"பரவாயில்லை சார்.. நார்மலா இருக்கார். டிஸ்சார்ஜ் லேட் ஆகும்னு டூட்டி டாக்டர் சொல்றாங்க.. எப்பன்னு தெரியலை"
"சீக்கிரம் சரியாய்டுவார்.. கவலைப்படாதீங்க"
"தேங்க்யூ சார்"
பிளாஸ்க்குடன் அறையை விட்டு வந்தான் ஆதவன். எதிரில் இளங்கோவன் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து நலம் விசாரித்தபடி தொடர்ந்து நடந்தான்.
தண்ணீர் பிடிக்கப் போவதற்கு முன்பு டூட்டி டாக்டரைப் பார்த்து எப்பங்க எனக்கு ரிலீஸ் என்று கேட்கலாம் என்று நினைத்து வலது பக்கம் திரும்பினான்.
டூட்டி டாக்டரைச் சுற்றி பிபிஇ கிட்டில் நாலு பேர் நின்றிருந்தார்கள். எல்லோருமே டாக்டர்களா அல்லது நர்ஸ்களா என்று தெரியவில்லை. சரி தண்ணீர் பிடித்து விட்டு வந்து பார்ப்போம் என்று நினைத்து யூ டர்ன் போட்டு இடது பக்கம் திரும்பி நடந்தான். தண்ணீர் பிடித்து விட்டு திரும்பி வந்தபோது கூட்டம் கலைந்து டாக்டர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.
"ஹாய் டாக்டர்"
"சொல்லுங்க சார்"
"ஆதவன், பிளட் டெஸ்ட் ரிசல்ட் எப்ப வரும் டாக்டர்"
"இன்னிக்கு ஈவ்னிங்தான் வரும் சார்."
"டிஸ்சார்ஜ் எப்ப இருக்கும்"
"டெஸ்ட் நார்மலா இருந்தா நாளைக்கு டிஸ்சார்ஜ் இருக்கும்.. உங்களுக்கு ஏதாவது கம்ப்ளெயின்ட் இருக்கா"
"எதுவுமே இல்லை.. எல்லாமே நார்மல்தான்.. ப்ளீடிங் இல்லை, தலைவலி இல்லை. எதுவும் இல்லை"
"அப்ப பிரச்சினை இல்லை சார். பிளட் டெஸ்ட்டுக்கு மட்டும்தான் நாங்க வெயிட்டிங்.. வந்துருச்சுன்னா நீங்க நாளையே கிளம்பலாம்"
"ஓ.கே. தேங்க்யூ டாக்டர்"
கொஞ்சம் மனசு லேசாக உணர்ந்தது.. பரவாயில்லை, ஓமைக்ரான் சேட்டைக்காரனாக இருந்தாலும் கூட பெருசா நம்மை சோதிக்கவில்லை. எத்தனையோ பேர் இந்த அலையில் பெரிய பாதிப்பு இல்லாமல்தான் மீண்டிருக்கிறார்கள். ஆனால் தனக்குத்தான் போனஸாக டெங்கு பீதியைத் துணைக்கு அனுப்பி வைத்து விளையாடி விட்டான்.. பரவாயில்லை, அதையும் சமாளிச்சாச்சு என்று நினைத்துக் கொண்டே அறையை வந்தடைந்தவனை, கசாய வண்டி வரவேற்றது.
அந்த கசாய வண்டியை கொண்டு வருபவர் ஒரு இளம் வயது பையன். வயசு 25 அளவில்தான் இருக்கும். அந்தப் பையன் பேசுவது சரியாக புரியாது. நிச்சயம் நார்மலான பையன் இல்லை, "ஸ்பெஷல் சைல்ட்" கேட்டகிரியைச் சேர்ந்தவர் என்பது பார்த்ததுமே தெரிந்தது. ஆனாலும் இதுவரை அந்தப் பையனிடம் அதைப் பற்றிக் கேட்டதில்லை.
அன்று அந்தப் பையனிடம் பேச வேண்டும் போலிருந்தது.
"தம்பி உங்க பேரு என்ன"
"ராஜேஷ் சார்.. ஏன் சார் பேர் கேட்டீங்க"
"இல்லை.. நாளைக்கு நான் டிஸ்சார்ஜ் ஆகி விடுவேன்.. அதான் கேட்டுக்கிட்டேன்"
"அப்படியா சார்.. சரியாய்ட்டீங்களா.. அன்னிக்கு அந்த சார் (ரவிச்சந்திரன்) போனாரு.. நீங்க நாளைக்குப் போறீங்களா"
"ஆமா.. வந்தவர் எல்லாம் போவதுதானே இயற்கையின் நியதி"
"புரியலை சார்..."
"புரிய வேண்டாம்.. விட்ருங்க.. படிச்சிருக்கீங்களா"
"ஆமா சார்.. 10 வது வரை படிச்சிருக்கேன்"
"சொந்த ஊர் எது"
"மெட்ராஸ்தான் சார்.. "
"இந்த வேலைக்கு எப்படி வந்தீங்க"
"1 வருஷமா இருக்கேன் சார். சாப்பாடு ப்ரீயா தந்திருவாங்க. சம்பளம் கம்மிதான்.. ஆனால் செலவு கிடையாது. எனக்கு செலவு பண்ண மாட்டேன்.. 2 டிரஸ்தான் வச்சிருக்கேன்.. இந்த டிரஸ் (பிபிஇ கிட்) போட்டிருப்பதால் உள்ளே நான் பழைய டிரஸ் போட்டிருப்பது யாருக்கும் தெரியாதுல்ல.. அதனால இருப்பதை வச்சு போட்டுப்பேன்.. இங்கேயேதான் தங்கியிருக்கேன் சார்.. கீழே போனா இடது பக்கம் ஒரு பில்டிங் வரும்ல.. அங்கதான் நாங்க எல்லாம் தங்கியிருக்கோம். எனக்கு சாப்பாடு வண்டி தள்ளுற வேலை மட்டும்தான்". இவர்கள் எல்லாம் கான்டிராக்டில் வேலை பார்ப்பவர்கள்.
வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்துப் பேசிய அந்தப் பையனைப் பார்த்தபோது, தன்னையும் அறியாமல் தனது கண்கள் கசிந்ததை உணர்ந்தான் ஆதவன். அந்தப் பையன் பேசியதை உன்னித்து நிதானமாக கேட்டால்தான் பேசுவது புரியும். அந்த அளவுக்கு தெளிவில்லாத பேச்சு.. அது அவரது தவறில்லை.. படைப்பின் தவறு.
"ஒரு நிமிஷம் இருப்பா"
உள்ளே திரும்பி பர்ஸை எடுத்து அதில் இருந்த சில ரூபாய் நோட்டுக்களை எடுத்து அந்தப் பையனிடம் கொடுத்தான் ஆதவன்.
"இல்லை சார்.. இதெல்லாம் வேண்டாம்.. வாங்க மாட்டேன்"
"இது உன் மீது பிரியமா நான் தர்றேன். இதை வாங்கிக்கலாம்.. தப்பு இல்லை.. வாங்கிக்க"
"இல்லை சார்.. தப்பு வாங்கக் கூடாது" .. சொல்லிக் கொண்டே வண்டியை வேகமாக திருப்பி கடகடவென அந்தப் பையன் போனதைப் பார்த்து ஆச்சரியமாகி அப்படியே சமைந்து போய் நின்று விட்டான் ஆதவன். சத்தியமா இதை எதிர்பார்க்கவில்லை.
(தொடரும்)
Comments