சீஃப் டாக்டர் வரும் நேரம்.. வயிறு பசிக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் டாக்டர் வரும் நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால் பொறுத்திருந்தான்.
சரியாக 1 மணிக்கெல்லாம் டாக்டர் ரவுண்ட்ஸ் ஆரம்பித்து விடும்.. இன்றும் அதேபோல டாக்டர் வந்தார். அந்தக் காரிடாரில் பெரும்பாலான அறைகள் காலியாகி விட்டதால் சீக்கிரமே ஆதவனின் அறைக்கு டாக்டர் வந்து விட்டார்.
"எப்படி இருக்கீங்க.. நல்லாருக்கீங்களா"
"நல்லாருக்கேன் டாக்டர்"
அருகில் இருந்த டூட்டி டாக்டர் சீஃப் டாக்டரிடம் "இவருக்குத்தான் பிளேட்லெட் கவுன்ட் கம்மியா இருந்துச்சு. இப்ப நார்மல்னு ரிப்போர்ட் வந்திருக்கு டாக்டர்"
"ஓ.. தென் குட்.. டேக் கேர்" டாக்டர் நகர அவருடன் வந்தவர்கள் பின் தொடர்ந்தனர்.
"பிளேட்லேட் நார்மல்".. ஆஹா இதைக் கேட்கவே எவ்வளவு சுகமாக இருக்கு.. மனசு லேசானது... ஓகே. பொட்டியைக் கட்ட வேண்டியதுதான் என்று மனசுக்குள் உற்சாகம் பிறந்தது.
முதல்ல சாப்பிடலாம்.. பசி வயித்தைக் கிள்ளுது.. எடுத்து வைத்த கொஞ்ச நேரத்தில் டூட்டி டாக்டர் வந்தார்.
"சார்.. உங்களுக்கு நார்மல் ஆயிருச்சு. ஒரு ரிப்போர்ட் மட்டும் ஈவ்னிங் வரணும். பட், இது நார்மல்னு வந்திருப்பதால் அதுவும் நார்மலாகதான் இருக்கும். அதுவும் நார்மல்னா நாளைக்கு உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சார் சொல்லிட்டார்"
"ஓ.. தேங்க்ஸ் டாக்டர்"
மனசு உற்சாக இருந்ததற்கேற்ப சாப்பாடு சுவையாக இல்லை.. ஆறியும் போய் விட்டிருந்தது. இருந்தாலும் தேடி வந்த அன்னத்தை வெறுக்கலாமோ.. உற்சாகத்தோடு சாப்பிட்டான்.
இந்த நேரத்தில் வீட்டு ஞாபகம் வந்தது. வந்த இத்தனை நாட்களும் லட்சுமி, அவ்வப்போது தொடர்ந்து போன் செய்து கேட்டுக் கொண்டே இருந்தார். 2 முறை நேரிலும் வந்து சாப்பாடு கொடுத்து விட்டும் போனார். ஒரு நாள் நான்வெஜ் கூட வந்தது.. நைந்து போய்க் கிடந்த வாய்க்கு அந்த சாப்பாடு ஆறுதலாக அமைந்தது.
ஆதவனை விட லட்சுமிக்கு மன தைரியம் அதிகம். எதையும் எளிதில் சமாளிக்கக் கூடிய பக்குவமும் அதிகம். வீட்டில் 3 பேருக்கு கோவிட் வந்தது. அப்பாவுக்கு சற்று சிக்கலாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை.. தனியாக அவரை அனுப்பினால் அவருக்கு பயமாக இருக்கலாம் என்பதால் தானும் வந்து இதே மருத்துவமனையில் அட்மிட் ஆனார். இருவரும் 3 நாட்கள் இருந்தனர். வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதால் 4வது நாளே வீட்டுக்குத் திரும்பி விட்டனர்.
திரும்பி விட்டனரே தவிர லட்சுமிக்கு உடல் உபாதைகள் இருந்து கொண்டுதான் இருந்தன. இருந்தாலும் தைரியத்துடன் அதை சமாளித்தார். ஆதவனுக்கு லங் இன்ஃபெக்ஷன் இருந்ததால் இங்கு வந்து அட்மிட் ஆக வேண்டிய நிலை. அவனுக்குத்தான் 7 நாட்கள் இழுத்துக் கொண்டு விட்டது.
2 முறை லட்சுமி வந்தபோது, ஜன்னல் வழியாகத்தான் பார்த்துக் கொள்ள முடிந்தது. சினிமாவில் வருவது போல செல்போனைக் காதில் வைத்துக் கொண்டு, உருவத்தை நேரில் பார்த்துக் கொண்டு கண்களில் கண்ணீர் மல்க பேசிய அந்தக் காட்சி வாழ்க்கையில் மறக்க முடியாதது.. இப்படியெல்லாமும் கூட நமக்கு சில அனுபவங்கள் தேவைதான் போலிருக்கிறது.. குடும்பத்தினரின் அன்பு, உறவுகளின் கவலை, நட்பு வட்டாரங்களின் அக்கறை என எல்லாம் கலந்து இந்த 7 நாட்களையும் ஆதவனுக்கு மறக்க முடியாத ஒன்றாக மாற்றியிருந்தன.
சாப்பாடு ஒரு வழியாக முடிந்தது.. காரிடார் வாக்.. ஜன்னல் விசிட்.. என ரொட்டீன் ரவுண்டப்.. ஆனால் இப்போது மனசு ரிலாக்ஸ்டாக இருந்தது. சிறிது நேர நடைக்குப் பின்னர் கொஞ்சம் தூங்கலாம் என படுக்கையில் வந்து விழுந்தான்.
"சார்.. சார்".. ஆயாம்மாவின் சத்தம் கேட்டு விழிப்பு வந்து விட்டது.
"சொல்லுங்க ஆயாம்மா.."
"நாளைக்கு டிஸ்சார்ஜா சார்"
"ஆமா.. ஏன் என்னாச்சு"
"இல்லை கேட்டேன் சார்"
அவரின் நோக்கம் புரிந்தது.
"போறப்போ கவனிக்கிறேன் ஆயாம்மா".. சந்தோஷத்துடன் போனார் அப்பெண்மணி.
உடைச்ச கடலையும், ஜூஸும் வரும் நேரம்.. வழக்கமாக ஆண்கள்தான் கொண்டு வருவார்கள்.. ஆனால் அப்போது ஒரு பெண் வந்தார்.
"என்னாச்சும்மா லேடீஸ் வந்திருக்கீங்க"
"ஒரு பிரச்சினை ஆயிருச்சு சார்.. அதான் பசங்களை நிறுத்திட்டாங்க"
"பசங்களுக்குள்ள ஏதோ சண்டை சார்.. அதனால எல்லோரையும் வேற இடத்துக்கு மாத்திட்டாங்க.. எங்களை இங்க அனுப்பிட்டாங்க"
யோசனையுடன் உள்ளே வந்து உடைச்ச கடலையை வாயில் போட்டு ஜூஸையும் குடித்தான். வழக்கத்தை விட இன்று ஜூஸ் சற்று புளிப்பாக இருந்தது. வீட்டிலிருந்து அனுப்பி வைத்திருந்த சர்க்கரையை அதில் சேர்த்துக் குடித்தான்.
எதிர் அறைப் பக்கம் பார்வை போனது.. இளங்கோவன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசலாம் என்று முடிவு செய்து மெல்ல வெளியே வந்தான். போன் பேசி முடிக்கும் வரை ஒரு நடை நடப்போம்... சிறிது நேரத்தில் அவர் பேச்சை நிறுத்தினார்.
"அய்யா.. எப்படி இருக்கீங்க இப்போ.. சாப்பாடு சரியா சாப்படறீங்களா"
"பரவாயில்லப்பா.. வாந்தி குறைஞ்சிருக்கு. ஆனால் கஞ்சிதான் சாப்பிடச் சொல்லிருக்கார் டாக்டர்.. அதான் சாப்பிடறேன்.. ஆனால் கஞ்சி லேட்டா வருது. இந்தப் பொண்ணுங்க மெதுவா கொண்டு வந்து தருதுங்க"
"உங்களுக்குன்னு தனியா வைக்கணும் இல்லையா.. அதான் லேட்டாகுது போல"
"ஆமாமா.. இருந்தாலும் நான் சொல்லிட்டு வந்து படுத்துக்குவேன்.. வரும்போது குடிச்சுக்குவேன். நாம அவங்களை திட்ட முடியாதுல்ல. வீடுன்னு கரெக்டா வந்துரும். நல்ல வசதியான ஆளுதான் நான்.. இங்க சாப்பாட்டுக்குத்தான் கஷ்டமா இருக்கு"
அவர் பேசப் பேச.. என்னதான் பணம் காசு வசதி இருந்தாலும் கடைசியில் ஒரு வேளை கஞ்சிக்காக நாம் தவிக்கும் நிலைதான் எதார்த்தம் என்பதை மனது உணர்ந்தது. இதெல்லாம் வாழ்க்கையில் நமக்கு ஒரு பாடம்தான்.. எப்படியெல்லாமோ இருக்கிறோம்.. என்னவெல்லாமோ செய்கிறோம்.. ஆனால் ஒரு நாள் வாழ்க்கை உட்கார வைத்து, முடக்கிப் போட்டு பாடம் கத்துக் கொடுக்கும் பாருங்க.. அப்போதுதான் நாம் யார் என்பதை நாமே உணர்வோம்.
இளங்கோவன் பெரிய பணக்காரர்தான்.. வெள்ளந்தியாக இருக்கிறார். அதேசமயம், தெளிவான பேச்சு.. தனக்கு வேண்டியதை பளிச்சென சொல்லி விடுகிறார். நர்ஸ்களும் தாத்தா தாத்தா என்று அவரிடம் பாசம் காட்டினர். அவரும் சும்மா படுத்தே கிடக்காமல் அவ்வப்போது எழுந்து ஹாலுக்குப் போய் டூட்டி டாக்டரிடமும், நர்ஸ்களிடமும் உட்கார்ந்து பேசி பொழுதைக் கழித்தார்.. அது கூட நல்ல பழக்கம்தான். முடியாமப் போயிருச்சே என்று முடங்கிக் கிடக்காமல் முடிந்தவரை நம்மை டைவர்ட் செய்ய முனைவதும் கூட நல்ல விஷயம்தானே.. இளங்கோவனிடமிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன.
செல்போனை எடுத்துப் பார்த்தான்.. 6 மணி ஆகியிருந்தது. நர்ஸ் வந்தார்.
"அப்பா.. உங்களுக்கு இன்னொரு ரிப்போர்ட்டும் வந்தாச்சு.. அதுவும் நார்மல்தான்.. வேற எதுவும் உங்களுக்குப் பிரச்சினை இல்லை இல்லியா?"
"இல்லம்மா"
"அப்போ ஓகே.. நாளைக்கு மதியம் போல டிஸ்சார்ஜ் ஆகிடலாம்"
"தேங்க்ஸ்மா.."
"நல்லா தண்ணீர் மட்டும் குடிங்க.. அதை குறைச்சுடாதீங்க. வீட்டுக்குப் போனாலும் கூட தண்ணீர் நிறையக் குடிக்கணும்"
நர்ஸ் நகர்ந்தார்.. இரு கைகளையும் தலைக்குப் பின்னால் முட்டுக் கொடுத்து கட்டிலில் சாய்ந்தான் ஆதவன்.. வந்த நாள் முதல் சந்தித்த ஒவ்வொரு மனிதரும், அனுபவமும் மனதுக்குள் ரீவைன்ட் ஆக ஆரம்பித்தது.
(தொடரும்)
Comments