Skip to main content

"அந்த 'டிஸிப்பிளின்' எங்கே போச்சு ஆதவா?".. உலாப் போகும் உணர்வுகள் (3)

ஜன்னலிலிருந்து மெல்ல மீண்ட ஆதவன் மீண்டும் அறைக்குத் திரும்பினான். கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டு காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி பாடல்களுக்குள் மூழ்கியவனை கண்களில் தூக்கம் வந்து தழுவியது.

அப்படியே ஒரு மணி நேரம் போயிருக்கும். டின்னர் கொண்டு வரும் சேவகரின் வண்டிச் சத்தம் கிரீச் கிரீச்சென கேட்கவே விழிப்பு தட்டி எழுந்தான். அறை முன் வந்து நின்ற வண்டியிலிருந்து 2 உணவுப் பார்சல்களை அந்த சேவகர் உள்ளே வந்து கொடுத்து விட்டு அகன்றார்.

3 இட்லி, கொஞ்சம் கிச்சடி, சட்னி, சாம்பார் என கலக்கலாக காணப்பட்டது இரவு உணவு. 7.30க்கு மேல் சாப்பிடலாம் என்று ஓரமாக வைத்து விட்டு மீண்டும் படுத்தான் ஆதவன். மனசுக்குள் சிந்தனைகள் கிளர்ந்தெழுந்தன. இப்படி ஓய்வாக இருந்து எத்தனை காலமாகி விட்டது? என்று மனதுக்குள் கேள்வி எழ, சில வருடங்களுக்கு முன்பு கையில் ஆபரேஷன் செய்தபோது சில வாரங்கள் வீட்டில் ஓய்வெடுத்தது நினைவுக்கு வந்தது. அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, இப்படியெல்லாம் வெட்டியாக படுத்து, அதுவும் மாலைப் பொழுதில் "சும்மா" இருந்த ஆதவனை யாருமே பார்த்திருக்க முடியாது.

ஆபரேஷன் ஓய்வுக்குப் பிறகு இப்போதுதான் அவனுக்கு ஒரு நீண்ட ஓய்வு கிடைத்துள்ளது.  இந்த ஓய்வும் கூட விரும்பி வந்ததல்ல.. வேண்டா விருந்தாளியாக வந்த கோவிட் கொடுத்துச் சென்ற ஓய்வு இது.  காலையில் டிபன்.. இடை இடையே சிறு சிறு பானங்கள், மதியம் லன்ச், மாலையில் டின்னர் என வித்தியாசமான ஓய்வு இது. எந்த வேலையும் இல்லாமல் சும்மா இருக்க வேண்டிய நிலை தனக்கு வந்ததை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

சரி வெட்டியாக இருப்பதற்கு சாப்பாட்டை முடிக்கலாம் என்று எண்ணி கையை கழுவி விட்டு வந்து சாப்பாட்டை பிரித்தான். இட்லி ஓகே.. நல்லாதான் இருந்தது. கிச்சடியும் ஓகேதான். சாம்பார் சுமார் ரகம்தான். சட்னி பரவாயில்லை. பெரிதாக உப்பு, உறைப்பு இல்லை. மிகவும் சாதாரணமான சாப்பாடு, ஆனால் தரமாக இருந்தது. அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு நல்ல சாப்பாடா என்ற ஆச்சரியத்தையும் சேர்த்து இட்லியுடன் மென்றபடி டின்னரை முடித்த ஆதவனுக்கு தனது வீட்டில் இஷ்டத்திற்கு சாப்பாட்டில் புகுந்து விளையாடியது நினைவுக்கு வந்தது.

3 இட்லியெல்லாம் வீட்டில் சாப்பிட்டதாக வரலாறே இல்லை.. குறைந்தது 6 இட்லி வேண்டும். இட்லி சைஸ் சின்னதாக இருந்தால் இன்னும் ஒரு இட்லி எக்ஸ்ட்ராவாக உள்ளே போகும். இட்லி சைஸ் பெரிதாக இருந்தாலும் அந்த 6 இட்லி கணக்கு தவறாது. இப்படி தனக்குத்தானே கோடு போட்டுக் கொண்டு "டிஸிப்ளினாக" வாழ்ந்த நாமா இப்படி 3 இட்லி, கிச்சடியுடன் டின்னரை முடித்தோம் என்று நினைத்தபோது செம காமெடியாக இருந்தது. பரவாயில்லை இந்த டயட் கன்ட்ரோலும் நமது தொப்பை உடம்புக்குத் தேவைதான் என்று மனதுக்குள் ஒரு சமாதானத்தையும் சொல்லிக் கொண்டு கையைப் போய் கழுவி விட்டு மீண்டும் காரிடாருக்கு கிளம்பினான்.. குட்டி வாக் போக.

ஒரு விதமான மெல்லிய குளிர் காரிடாரில் நிலவியது. காரிடாரில் குளிர்கிறதா அல்லது நமக்கு குளிர்கிறதா என்ற குழப்பம் வேறு. ஜன்னல் அருகே போய் நின்றபோது வீசிய குளிர் காற்றை வைத்து, கிளைமேட்தான் கூலாக இருக்கிறது என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான் ஆதவன். பத்து பதினைந்து நடை போட்டு காரிடாரை அளந்த அவனது கால்களுக்கு வலி தெரியவில்லை. ஆனால் சோர்வு தென்படவே, போதும் நடை என்று அறைக்குள் வந்தான்.

ரவிச்சந்திரன் அப்போதுதான் சாப்பாட்டை முடித்திருந்தார். இருவரும் பேச ஆரம்பித்தனர்.

"அந்த முதல் ரூமுக்கு ஒரு பெரியவர் வந்திருக்கார் சார். கூடவே அவரது மனைவியும் வந்திருக்காங்க.  பெரியவருக்கு 75 வயசாம். லீகல் அட்வைசரா இருந்திருக்கார் கூட்டுறவு அலுவலகத்தில். மனைவியும் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவராம். ஐசியூவில் அந்த பெரியவர் இருந்துள்ளார். அன்னிக்கே அவர் மட்டும் வீல் சேரில் அமர்ந்திருந்தார். மனைவி வேறு அறையில் இருந்துள்ளார். அவரை எப்படி கண்டுபிடிக்கப் போறேன்னு தெரியலைன்னு புலம்பிட்டிருந்தார். அவரை நான்தான் ஆசுவாசப்படுத்தி நர்ஸிடம் சொல்லுமாறு கூறி கைட் செய்தேன். என்னிடம் முக்கால் மணி நேரம்தான் பேசியிருப்பார். தன்னைப் பற்றி மொத்தக் கதையையும் சொல்லி விட்டார்"

"அப்படியா.. அவர் பேர் என்ன சொன்னார்.. ஆதி நாராயணனா.. வீடு   ஹஸ்தினாபுரம்னு சொன்னாரா"

"கரெக்ட் சார்.. அதேதான்"

"ஆஹா.. அவர் எனக்கு தெரிந்தவர்தான் சார். என்னோட மாமனார் சொல்லித்தான் அவர் இந்த மருத்துவமனையில் வந்து சேர்ந்தார்.. இருங்க போய்ப் பார்த்துட்டு வந்துர்றேன்".  கட்டிலை விட்டு இறங்கி முதல் அறைக்கு விரைந்தான் ஆதவன். 

(தொடரும்)


4வது பகுதி

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்